
பரங்கிக்காய், மஞ்சள் பூசணிக்காய், அரசாணிக்காய் என்று விதவிதமான பெயர்களில் அறியப்படும் இந்த பூசணிக்காயில் உடலுக்கு தேவையான அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கும் விதத்தில் இந்த பூசணிக்காய் அமைந்துள்ளது. அந்த வரிசையில் மஞ்சள் பூசணிக்காயை வைத்து ஒரு இனிப்பு வகையை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இந்த நிலையில் வீட்டிலேயே சுவையான மஞ்சள் பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முதலில் இந்த மஞ்சள் பூசணி அல்வா செய்ய பூசணிக்காயை நன்கு சுத்தம் செய்து அதன் மேல் இருக்கும் தோலை உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி பூசணிக்காயை மட்டும் தனியாக வெட்டி வைக்க வேண்டும். இதனை அடுத்து ஒரு கேரட் துருவலில் பூசணிக்காயை வைத்து துருவி கொள்ளுங்கள். இந்த பூசணிக்காயை துருவினால் தான் அல்வா பதத்திற்கு நாம் அதனை கிண்ட முடியும். இப்போது அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அந்த நெய்யை காய விடுங்கள். நெய் நன்கு சூடான பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வருத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த பொன்னிறமாக வறுத்த முந்திரியை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். பிறகு அதே கடாயில் துருவிய மஞ்சள் பூசணியை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். ஏற்கனவே பூசணிக்காயில் நீர் விடும் தன்மை இருப்பதால் நாம் அதை நெய்யில் வதக்கும் போது ஒரு மூடி போட்டு மூடி வைத்து விட்டால் போதும் எளிதாக இந்த மஞ்சள் பூசணிக்காய் வெந்துவிடும். இப்போது அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஐந்து நிமிடம் வேகவிடுங்கள். இதற்குப் பிறகு தேவையான அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விடவும் இதனைத் தொடர்ந்து அரை கப் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரை கரைந்த பிறகு நாம் நெய்யில் வறுத்து எடுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளற வேண்டும்.
இதற்குப் பிறகு நெய் பூசணிக்காயிலிருந்து பிரிந்து நன்கு கெட்டியாக பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு திரண்டு வரும்போது அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான மஞ்சள் பூசணி அல்வா தயார். இதனை தட்டில் வைத்து சூடு ஆற வைத்து சாப்பிடலாம். வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பூசணி அல்வாவை விரும்பி சாப்பிடுவார்கள்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com