திண்டுக்கல் பிரியாணிக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் ரசிகர்கள் ஏராளம். சென்னையில் பிறந்து வளரந்த எனக்கு திருமணத்திற்கு பிறகு தான் திண்டுக்கல் பிரியாணி சாப்பிட வாய்ப்பு கிடைத்தது. நீளமான பாஸ்மதி அரிசி பிரியாணியை சாப்பிட்டு பழகியதால் என்னவோ, குட்டி குட்டியாக இருக்கும் இந்த சீராக சம்பா பிரியாணியை சாப்பிட ஆர்வமே இல்லாமல் இருந்தேன்.
ஆனால் முதல் முறையாக வேணு பிரியாணியை சாப்பிட்ட பிறகு, சீரக சம்பா பிரியாணிக்கு ரசிகை ஆகி விட்டேன். ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதை விட வாழை இலை பார்சல் தான் பெஸ்ட். ஒவ்வொரு வாய் பிரியாணியிலும் வாழை இலையின் மணம் நிறைந்திருக்கும். திண்டுகல்லில் வேணு, சிவா, பொன்ராம், தலப்பாகட்டி என மிகவும் பிரபலமான பல உணவகங்கள் உள்ளன. இதுவரை இந்த பிரியாணியை சுவைக்காதவர்கள் திண்டுக்கல் பக்கம் வரும் பொழுது ஒரு முறை மறக்காமல் ட்ரை செய்து பாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இப்படி கூட சமைக்கலாமா, இனி அம்மனுக்கும் ஹெல்தியான நெய்வேத்தியம் தான்!
இந்த பிரியாணியின் சுவைக்கு ஃபிரெஷ் ஆக அரைக்கப்பட்ட பிரியாணி மசாலா தான் காரணம். இங்கு வீடுகளிலும் குஸ்கா மிகவும் பிரபலம். சுவை பிரியாணியை போலவே இருக்கும் ஆனால் பீஸ் மட்டும் இருக்காது. இந்த ரெசிபியை நீங்களும் முயற்சி செய்யுங்கள். இதை குழந்தைகளுக்கு லஞ்ச் ஆகவும் பேக் செய்து கொடுக்கலாம். திண்டுக்கல் குஸ்கா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்
- அரிசி - 1 கப்
- தண்ணீர் - 1.5 கப்
- பச்சை மிளகாய் 1-2
- புதினா - கைப்பிடி அளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- இஞ்சி - சிறிய துண்டு
- பூண்டு 5-6
- நெய் - 2 டீஸ்பூன்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10-12
- தக்காளி - 1(சிறியது)
- பட்டை - 2-3(சிறிய துண்டு)
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 2
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
- தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- இந்த ரெசிபியை செய்வதற்கு 10 நிமிஷமே போதும். எல்லாத்தையும் அரைத்து, தாளித்து வேலையை சீக்கிரம் முடித்து விடலாம்.
- முதலில் ஒரு மிக்ஸர் ஜாரில் பட்டை, கிராம்பு ஏலக்காய், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா மற்றும் ஒரே ஒரு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- இதில் அதிகமாக புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்க்க வேண்டாம். இல்லையெனில் புதினா சாதம் போல் மாறிவிடும்.
- அரைத்த விழுதுடன் சின்ன வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக பல்ஸ் செய்து கொள்ளவும், நன்கு அரைக்க கூடாது.
- இப்போது ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- உங்களுக்கு கூடுதல் காரம் தேவைப்பட்டால் இந்த சமயத்தில் தேவையான அளவு மிளகாய் பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.
- சீரக சம்பா அரிசியை கழுவி தயாராக வைக்கவும். இதை அதிக நேரம் ஊற வைக்க வேண்டாம். 5-10 நிமிடமே போதுமானது.
- மசாலா நன்கு வதங்கிய பிறகு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் நன்கு கொதித்த பிறகு கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சீரக சம்பா அரிசியை சேர்க்கவும்.
- 2-3 நிமிடம் கழித்து குக்கரை மூடி, அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். விசில் அடங்கிய பிறகு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி பரிமாறலாம்.
இதை ஒரு முறை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். பின் அடிக்கடி செய்வது உறுதி!
இந்த பதிவும் உதவலாம்:நாவூரும் சுவையில், கேரளாவின் 3 ஸ்பெஷல் ஸ்னாக்ஸ் ரெசிபிகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation