ஒரே ஒரு இட்லி மாவில் இட்லி, தோசை, பணியாரம், ஊத்தாப்பம் என விதவிதமான உணவுகளை செய்யும் திறமைசாளிகள் பெண்கள். ஒரே ஒரு மாவு தானே என்று ஈஸியாக சொல்லிவிடலாம். ஆனால் அரிசி உளுந்தை ஊறவைத்து, பக்குவமாக அரைத்து, புளிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல. இதை விட மிக கொடுமையானது, கிரைண்டரை கழுவுவது. தூக்கமுடியால் தூக்கி, சுத்தமாக கழுவி முடிப்பதற்குள் முதுகு வலியும் என்ட்ரி கொடுத்து விடும். ஆனால் எல்லா கஷ்டத்துக்கும் ஒரு பலன் உண்டு. இவ்வளவு கஷ்டப்பட்டு மாவு அரைத்தாலும் 2-3 நாட்களுக்கு என்ன செய்வதென்று குழம்பாமல் இட்லி, தோசையை வைத்து ஈஸியா சமாளிக்கலாம்.
இட்லி மாவு தீர்ந்து விட்டால் பொங்கல், உப்புமா, பூரி என சில நாட்கள் ஓட்டி விடலாம். அதற்கு பின்? இனி காலை டிபன் பற்றிய கவலையை விடுங்க. மாவு தீர்ந்து விட்டாலும் வித விதமான காலை உணவை சமைக்கலாம். எப்படினு யோசிக்கிறீங்களா? ரவைவை வைத்து ஒரு சூப்பரான ப்ரீமிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளலாம். இதனை கொண்டு பல விதமான காலை டிபன் வகைகளை நிமிடத்தில் செய்திடலாம். முதலில் ப்ரீமிக்ஸ் செய்வதற்கான முறையை தெரிந்துகொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: இது பீஸ் இல்லாத மட்டன் பிரியாணி, செய்வது ரொம்ப ஈஸி!
பிரேக்பாஸ்ட் ப்ரீமிக்ஸ் ( Breakfast Premix )
- ரவை ½ கப்
- அரிசி மாவு - ½ கப்
- நெய் - ½ டீஸ்பூன்
- எண்ணெய் - ½ டீஸ்பூன்
- கடுகு - ¼ டீஸ்பூன்
- சீரகம் - ¼ டீஸ்பூன்
- பெருங்காயம் - ¼ டீஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு - 5
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- பச்சை மிளகாய் 1-2
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயின் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதனுடன் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஈரத்தன்மை போகும்வரை வறுக்க வேண்டும்.
- உங்களிடம் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் இந்த மூன்று பொருட்களையும் 30 வினாடிகளுக்கு மைக்ரோவேவ் செய்தும் பயன்படுத்தலாம்.
- இதனுடன் தயாராக வைத்துள்ள ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து 6-8 நிமிடங்களுக்கு வறுக்க வேண்டும்.
- தீயை குறைவாக வைத்து நிறம் மாறாமல் பொறுமையாக வறுக்க வேண்டும்.
- இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து நன்கு ஆறவிட வேண்டும்.
- இந்த ப்ரீமிக்ஸை காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு, 15 நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
ரவா இட்லி
- ப்ரீமிக்ஸ் உடன் சம அளவு தயிர் சேர்த்து 15- 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- நீங்கள் விரும்பினால் இதில் வதக்கிய காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- இட்லி ஊத்துவதற்கு முன்னதாக ½ டீஸ்பூன் ஈனோ மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைத்து பரிமாறலாம்.
- ஈனோ சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் ரவையை இன்னும் கூடுதல் நேரம் ஊறவைத்து கொள்ளலாம்.
- சுவையான இந்த ரவா இட்லியை சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.
ரவை ஊத்தாப்பம்
- ப்ரீமிக்ஸ் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
- இதனுடன் வதக்கிய காய்கறிகளை சேர்த்தால் இன்னும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
- ஊத்தாப்பம் சாஃப்டாக வர ஈனோ சேர்த்துக் கொள்ளலாம் அல்லது உங்களிடம் மீதமுள்ள தோசை மாவு இருந்தால் 1/4 கப் அளவிற்கு சேர்த்து கொள்ளவும்.
- புளித்த தோசை மாவை சேர்க்கும் பொழுது ஈனோ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
- தயாராக வைத்துள்ள மாவை சிறிய ஊத்தாப்பங்களாக ஊற்றவும், மேலே மலைச்சாரலை போல இட்லி பொடியை தூவி, நெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை வேகவிட்டு பரிமாறலாம்.

மினி கொழுக்கட்டை
- ஒரு கப் ப்ரீமிக்ஸ் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
- கொதிக்கும் நீரில் ப்ரீமிக்ஸை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் விழாமல் கிளறவும். மாவு கடாயில் ஒட்டாமல் ஒன்று சேர்ந்து வர வேண்டும்.
- அடுப்பை அணைத்து கைப்பொருக்கும் சூட்டிற்கு வரும் வரை காத்திருக்கவும்.
- இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தயாராக வைத்துள்ள மாவை சிறிய கொழுக்கட்டைகளாக பிடித்து 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைத்து பரிமாறலாம்.
இந்த மாவை கொண்டு உப்புமா அல்லது கிச்சடியும் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பிரட் இல்லாமலும் சூப்பரா சாண்ட்விச் செய்யலாம், எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation