மதுரை ஸ்பெஷல் கறி தோசை ரெசிபி!!!

மதுரை ஸ்பெஷல் கறி தோசை செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

madurai kari dosai recipe

பாண்டியர்களின் தலைநகரமான மதுரையின் பெருமையை ஒரு பதிவில் சொல்லி விட முடியாது. தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்தது தொடங்கி இன்றும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு மதுரை மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்று. மீனாட்சி அம்மன் கோயில் தொடங்கி மண் வாசனை, ஜல்லிக்கட்டு, திருமலை நாயக்கர் மகால் வரை மதுரை என்று சொன்னதும் ஆயிரம் விஷயங்கள் நினைவுக்கு வரும். குறிப்பாக உணவு பற்றி பேசுகையில் சைவத்தை விடவும் மதுரை அசைவத்திற்கு பெயர் போனது.

கறி சோறு இல்லாமல் ஊர் திருவிழாக்களை பார்ப்பது மிகவும் அரிது. மதுரைக்கு மீனாட்சி, மல்லி, ஜிகிர்தண்டா என பல பெருமைகள் நீண்டாலும் மதுரை ஹோட்டல்களில் கிடைக்கும் கறி தோசைக்கு எப்பவுமே மவுசு கூட. அதுவும், மதுரை கோனார் மெஸ்ஸில் கிடைக்கும் கறி தோசை பற்றி கேட்க வேண்டுமா என்ன? மட்டன் கறியை சமைத்து அதை தோசைக்கு நடுவில் வைத்து, கொத்தமல்லி தூவி கமகமன்னு வரும் வாசனைக்கே அந்த கடை முன்னாடி திருவிழா போல் ஜனம் கூடும்.

உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி வெளியூரிலிருந்து யார் மதுரைக்கு போனாலும் இந்த கோனார் மெஸ் கறி தோசையை ருசித்து பார்க்காமல் ஊர் திரும்ப மாட்டார்கள். இப்போது இந்த கறி தோசையை வீட்டிலேயே எளிமையாக சமைப்பது எப்படி? என்பதை இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

madurai kari dosai

  • மட்டன் கொத்து கறி – 200 கிராம்
  • தோசை மாவு
  • வெங்காயம் – 2
  • தக்காளி - 2
  • முட்டை – 2
  • இஞ்சி பூண்டு விழுது – 3/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
  • தனியா தூள் – 3/4 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – தேவையாள அளவு
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • சோம்பு - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - தேவையான அளவு

இந்த பதிவும் உதவலாம்: ஹோட்டல் ஸ்பெஷல் ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் - வீட்டிலேயே செய்வது எப்படி?

செய்முறை

  • அடுப்பில் கடாயை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, அதில் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்பு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதங்கியவுடன், தக்காளி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இப்போது அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வேக விடவும்.
  • இதற்கிடையில் மட்டன் கீமாவை தண்ணீர் ஊற்றி நன்கு அலசி எடுக்கவும்.
tasty madurai kari dosai
  • பின்பு இந்த மட்டன் கீமாவை, வதங்கி கொண்டிருக்கும் வெங்காயம் - தக்காளியுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
  • இப்போது அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கினால் மட்டன் தோசைக்கு தேவையான கீமா மசாலா தயார்.
  • இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். பிறகு இதனுடன் நறுக்கிய வெங்காயம், சிறிதளவு தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

மதுரை கறி தோசை

  • அடுப்பை மிதமான தீயில் வைத்து தோசை மாவை ஊத்தப்பம் போல் ஊற்றவும். அது ஓரளவு வெந்ததும் ஒரு கரண்டி கீமா கலவையை அதன் மேல் பரப்பி விடவும்.
  • பின்பு எண்ணெயை சுற்றி ஊற்றி, கொத்தமல்லி தூவி திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்.1 நிமிடம் கழித்து எடுத்தால் கமகமக்கும் மதுரை கறி தோசை தயார்.

இந்த செய்முறையை பின்பற்றி கண்டிப்பாக உங்கள் வீட்டிலிலும் மதுரை கறி தோசை செய்து பாருங்கள். அனைவரும் சாப்பிட்டு விட்டு வாவ்! சொல்வார்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP