Protein Powder Recipe: வீட்டிலேயே ஆரோக்கியமான புரோட்டின் பவுடர் செய்வது எப்படி?

கடைகளில் விற்கப்படும் புரோட்டின் பவுடர்களை வாங்குவதற்கு பதிலாக,  வீட்டிலேயே இதை சுலபமாக செய்ய முடியும். இதற்கான ரெசிபியை இப்பதிவில் படித்தறியலாம் …

healthy protein powder recipe

உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களில் புரதம் மிகவும் முக்கியமானது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன் தசைகளை சீரமைக்கவும் உதவுகிறது. ஆனால் உடல் எடையை பராமரிக்க விரும்புபவர்களில் பெரும்பாலானவர்களும் புரோட்டின் பவுடரை பாலில் கலந்து குடிக்கிறார்கள்.

பல பிரபல நிறுவனங்களும் புரோட்டின் பவுடரை விற்பனை செய்கின்றனர். இவை சுவை நிறைந்ததாக இருந்தாலும் பெரும்பாலும் விலை அதிகமாகவே இருக்கின்றன. மேலும் ஒரு சில புரோட்டின் பவுடர்களில் அதிகப்படியான இரசாயனங்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே புரோட்டின் பவுடரை செய்து பயன்படுத்தினால் அதிகபட்ச நன்மைகளை பெறலாம். புரோட்டின் பவுடரின் செய்முறையை உணவியல் நிபுணரான அபூர்வா அகர்வால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதை நீங்களும் தயாரித்து காலையில் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்

protein powder recipe with oats and nuts

  • பூசணி விதைகள் - ⅓ கப்
  • ஓட்ஸ் - 1/3 கப்
  • ஆளி விதைகள் - 1/3 கப்
  • சியா விதைகள் - 1 டீஸ்பூன்
  • கொக்கோ பவுடர் - 1 டீஸ்பூன்
  • பாதாம் - 10

செய்முறை

oats protein powder

  • புரோட்டின் பவுடர் செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சரியான அளவுகளில் எடுத்து தனியாக வைக்கவும்.
  • மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு அடி கனமான கடாயில் சேர்த்து வறுக்கவும். குறைவான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
  • வாசனை வர தொடங்கியவுடன் அடுப்பை அணைக்கவும்.
  • சூடு தணிந்த பின் வறுத்த பொருட்களை ஒரு மிக்ஸர் ஜாருக்கு மாற்றி நல்ல பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • இந்த புரோட்டின் பவுடரை காற்று புகாத ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்த பயன்படுத்தலாம்.
  • இரண்டு வாரங்கள் வரை வெளியில் வைத்து பயன்படுத்தலாம் அதற்கு மேல் பயன்படுத்துவதாக இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.

எடுத்துக்கொள்ளும் முறை

புரோட்டின் பவுடரை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் கலந்து குடிக்கலாம். இவை மிதமான சூட்டில் இருப்பது நல்லது. ஏனெனில் அதிக சூடாக இருக்கும் பால் அல்லது தண்ணீருடன் புரோட்டின் பவுடரை கலக்கும் பொழுது அதில் உள்ள புரதச்சத்தை இழக்க நேரிடலாம்.

புரோட்டின் பவுடர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது இருப்பினும் இதை அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம். எனவே தேவைக்கு அதிகமாக புரதம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் அளவிற்கு புரோட்டின் பவுடரை பயன்படுத்தலாம் அதற்கு மேல் நிச்சயம் எடுத்துக்கொள்ள கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை சட்டுனு குறைய பச்சை பயறு சாலட் செய்து சாப்பிடுங்க

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP