சேமியாவில் பிரியாணியா என்று யோசிக்கிறீர்களா? அட ஆமாங்க ஆமா… சில சமயம் வாய்க்கு ருசியாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்போது வீட்டில் சேமியா பாக்கெட் மட்டுமே இருந்தால் அதை விட ஒரு பெரிய ஏமாற்றம் உணவு பிரியர்களுக்கு இருக்க முடியாது. புலி பசித்தாலும் புல்லை திங்காது என்ற பழமொழிக்கு இணங்க, பசித்தாலும் உப்புமா சாப்பிட மாட்டேன் என்று கதறுகிறீர்களா?
இந்த சேமியா பிரியாணி ரெசிபியை ஒரு முறை முயற்சித்து பாருங்கள். உங்கள் மளிகை பட்டியலில் சேமியா தவிர்க்க முடியாத பொருள் ஆகி விடும். 'பிரியாணி' என்ற வார்த்தையை கேட்டாலே பசிக்க ஆரம்பித்துவிடும். வீட்டில் சேமியா இருந்தால் காலை அல்லது இரவு உணவிற்கு இந்த அசத்தலான சேமியா பிரியாணி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு விருந்து வைக்கலாம். இதற்கு வெங்காயம் அல்லது வெங்காயம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்த தயிர் பச்சடி பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். இதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இளநீர் வழுக்கையை வைத்து புதுமையான 2 ரெசிபிக்கள்
தேவையான பொருட்கள்
பிரியாணி மசாலாவிற்கான பொருட்கள்
- பச்சை மிளகாய் - 3
- இலவங்கப்பட்டை - 3 சிறியது
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 3
- ஜாதிக்காய் - மிக சிறிய துண்டு
- ஜாதி பத்திரி - 1 சிறிய துண்டு
- இஞ்சி - 50 கிராம்
- பூண்டு - 50 கிராம்
மற்றவை
- சேமியா - 2 பாக்கெட்
- காய்கறி கலவை - 1 கப்
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 20-25
- சிவப்பு மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
- தயிர்- ¼ கப்
- உப்பு - தேவையான அளவு
- புதினா இலைகள் - ¼ கப்
- கொத்தமல்லி இலைகள் - ¼ கப்
- 1/2 எலுமிச்சையின் சாறு
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முன் ஏற்பாடுகள்
- முதலில் பூண்டு, இஞ்சி, சின்னவெங்காயம், புதினா கொத்தமல்லி ஆகியவற்றை சுத்தம் செய்து தயாராக வைத்து கொள்ளவும்.
- உங்களுக்கு விருப்பமான கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை தேர்வு செய்து கொள்ளலாம். காய்கறிகளுக்கு பதிலாக சிக்கனையும் பயன்படுத்தலாம்.
அரைக்க வேண்டிய மசாலா
- முதலில் தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து தனியாக வைக்கவும். இதை நன்றாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை.
- இதற்குப் பிறகு எடுத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பட்டை கிராம்பு, ஜாதிக்காய், ஏலக்காய் மற்றும் ஜாதி பத்திரி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
இந்த பதிவும் உதவலாம்: செட்டிநாடு ஸ்டைலில் கலக்கலான வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபி
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் 10 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி சேமியாவை குறைந்த தீயில் லேசாக வறுத்துக் கொள்ளவும். நிறம் மாறும் வேளையில் கொதிக்கும் தண்ணீரை சேமியாவில் சேர்த்து வேக விடவும். சேமியாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- சேமியா 75% வெந்த பிறகு இதனை வடித்து கொள்ளவும். சேமியா குழையாமல் இருக்க, சேமியாவில் பச்சை தண்ணீர் சேர்த்துஅலசவும். பின் நீரை வடித்து வைக்கவும்.
- இப்போது சேமியா பிரியாணி செய்வதற்கு ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதில் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
- குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும், இல்லை எனில் வெங்காயம் அடி பிடித்து விடும். வெங்காயம் வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
- மசாலா வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் தயிர், புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் காய்கறி கலவை சேர்த்து வதக்க வேண்டும்.
- காய்கறிகளுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். தேவைப்பட்டால் ஒரு ¼ கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
- காய்கறிகள் முக்கால்வாசி வெந்த பிறகு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதில் வேகவைத்த சேமியாவை சேர்த்து கிளறவும். மீதமுள்ள நெய்யை மேலே ஊற்றவும்.
- இந்த பாத்திரத்திற்கு பொருந்தக்கூடிய மூடியை போட்டு மூடி, ஒரு 5 நிமிடங்கள் குறைந்த தீயில் தம் போடவும்.
- அடுப்பை அணைத்த ஒரு சில நிமிடங்கள் கழித்து திறந்து பரிமாறலாம்.
இந்த ரெசிபி உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், பின் உங்களுடைய டிபன் பட்டியலில் இந்த தலப்பாகட்டி சேமியா பிரியாணியும் நிச்சயம் இடம் பெறும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation