ஜனவரி 26ஆம் தேதி 1950ஆம் ஆண்டு அரசியலைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு வரும் 26ஆம் தேதி நாட்டின் 75ஆவது குடியரசு தினம் என்பதால் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்த நாள் இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ பாதையில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் அணிவகுப்புகள் நடைபெறவுள்ளன.
இந்தியாவின் முப்படைகளிலும் புதிதாக பயன்பாட்டுக்கு வரவுள்ள ஏவுகணைகள், விமானம் மற்றும் ஆயுத அமைப்புகளின் அணிவகுப்பு நடைபெற்று இந்தியாவின் பாதுகாப்பு திறன் வெளிகாட்டப்படும். அதே போல இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். விமானப்படை சார்பாக வானில் சாகச நிகழ்வுகளும் அரங்கேறும். எனவே பிரமாண்டமான குடியரசு தின கொண்டாட்டத்தை நீங்கள் நேரில் காண விரும்பினால் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் டிக்கெட்டுகளை பெறுவது எப்படி என்ற விவரங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
நாள் : வெள்ளிக்கிழமை
அணிவகுப்பு ஆரம்பிக்கும் நேரம் : காலை 9.30 - 10.00 மணி
அணிவகுப்பு இடம் : விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரை
அணிவகுப்பு தூரம் : ஐந்து கிலோ மீட்டர்
இடம் : கடமை பாதை, புது டெல்லி
டிக்கெட் விலை : 20 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை
அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் சுமார் 77 ஆயிரம் பேர் வரை அமரும் வசதி உண்டு. இதில் 42 ஆயிரம் இருக்கைகள் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனில் டிக்கெட் பெறும் முறை
2024ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு கடந்த 10ஆம் தேதி தொடங்கிவிட்டது. 25ஆம் தேதி வரை டிக்கெட் பெறலாம். மொத்த எண்ணிக்கையை பொறுத்து தினமும் டிக்கெட் விற்கப்படும். விழாவை காண ஏராளமான மக்கள் விரும்புவார்கள் என்பதால் டிக்கெட் வாங்குவது எளிதான காரியமல்ல கடும் போட்டி இருக்கும். ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெற இந்த வழிகளை பின்பற்றுங்கள்
- மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்திற்குள் சென்று https://rashtraparv.mod.gov.in/ லிங்கை கிளிக் செய்யவும்
- அதில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து உள்ளே செல்லவும். உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த நீங்கள் பதிவு செய்த செல்போன் நம்பருக்கு ஓடிபி வரும்
- அதன் பிறகு 2024 குடியரசு தின விழா கொண்டாட்டம் அணிவகுப்பை தேர்வு செய்யவும்
- ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் விழாவில் பங்கேற்கும் நபரின் பெயர், முகவரி, வயது, பாலினம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சரிபார்ப்புக்காக பகிர வேண்டும். புகைப்பட விவரத்திற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளான ஓட்டுநர் உரிமம், பாஸ்போர், வாக்காளர் அடையான அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவும்.
- உங்கள் தேவைக்கு ஏற்ப டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கைக்கு 500 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. இருக்கை உறுதி செய்யப்படாத இடத்திற்கு 100 ரூபாயும், குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டுமே பார்ப்பதற்கு 20 ரூபாயும் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகபட்சமாக நான்கு டிக்கெட்டுகள் வரை பெறலாம்.
- ஆன்லைன் டிக்கெட்டிற்கு கட்டணம் செலுத்த டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆன்லைன் பேங்கிங் அல்லது யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தலாம். அதன் பிறகு உங்களுக்கு க்யூ.ஆர் கோடு அடங்கிய முன்பதிவு விவரங்களுடன் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக தகவல் வரும்.
- உங்கள் இ டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள், 26ஆம் தேதி அன்று புகைப்பட அடையாளம் உள்ள அட்டையுடன் இ டிக்கெட்டை எடுத்து செல்லவும். நீங்கள் உள்ளே செல்லும் முன்பாக க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்வார்கள்.
ஆஃப்லைனில் டிக்கெட் வாங்கும் முறை
2024ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பிற்கான ஆஃப்லைன் டிக்கெட் விற்பனை கடந்த ஏழாம் தேதி தொடங்கி விட்டது. ஆஃப்லைன் டிக்கெட்டிற்காக டெல்லியில் பல பகுதிகளில் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுண்டர்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் டிக்கெட்டுகள் கிடைக்கும்.
- அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையத்திற்கு செல்லவும்.
- கவுண்டரில் ஒரு நகல் மற்றும் உங்கள் அசல் புகைப்பட ஐடியை வழங்கவும். ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவை ஏற்றுக்கொள்ளக்கூடிய புகைப்பட அடையாளங்களாகும்.
- நீங்கள் வாங்க விரும்பும் டிக்கெட்டின் வகையை தேர்ந்தெடுக்கவும்.
- ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கைக்கு 500 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. இருக்கை உறுதி செய்யப்படாத இடத்திற்கு 100 ரூபாயும், குறிப்பிட்ட இடத்தில் இருந்து மட்டுமே பார்ப்பதற்கு 20 ரூபாயும் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் அதிகபட்சமாக நான்கு டிக்கெட்டுகள் வரை பெறலாம்.
- பணத்தை செலுத்திய பிறகு உங்கள்ளுக்கு டிக்கெட்டு மற்றும் ரசீதை வழங்குவார்கள்
- 26ஆம் தேதி அன்று உங்கள் டிக்கெட்டு மற்றும் அசல் புகைப்பட அடையாளச் சான்று ஆகியவற்றைக் கொண்டு செல்லுங்கள். நுழைவு வாயிலில் அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இவை தேவைப்படும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation