
மாதவிடாய் காலத்தில் செடிக்கு தண்ணீர் ஊற்றினால் செடி பட்டுப் போய்விடும் என்கிற நம்பிக்கை இன்னும் நம் அனைவரின் மனதிலும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனில், அறிவியல் பூர்வமான உண்மையிருக்கிறதா அல்லது மூட நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சந்தேகமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் முன்னோர்கள் அக்காலத்தில் பொது நீர்நிலைகளில் குளிக்க வேண்டியிருந்தது. மாதவிடாய் உதிரத்தை அசுத்தம் என்று அந்தக் காலத்தினர் நம்பி வந்ததால் பொது நீர் நிலைகளில் குளிக்கக்கூடாது என்றார்கள். வேறு வழியில்லாமல் பெண்களும் 3 நாட்கள் குளிக்காமல் இருந்தார்கள். ஆனால் இன்று நிலைமையே வேறு, வீட்டுக்கு வீடு குளியலறை இருக்கிறது. கழிவறை வசதியில்லாத கிராமங்களிலும் குளிப்பதற்கென ஒரு மறைவிடம் இருக்கிறது.அந்தக் காலத்தில் சூழ்நிலை காரணமாக சொன்னதை, இப்போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இது போல தான் மாதவிடாய் நாட்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும் என்று ஒரு பிரபல நாளிதழில் பதிலளித்துள்ளார் இயற்கை மருத்துவர் தீபா.
இந்த பதிவும் உதவலாம்:பெண்களின் மார்பகங்கள் வலிக்க இதுவும் காரணமாக இருக்கலாம்!

நம் உடலைச் சுற்றி பயோ எனர்ஜிடிக் சக்தி இருக்கும். இதனை ஆரா என்பார்கள். ஆராவும் மாதவிடாய் காலங்களில் பலவீனமாக இருக்கும். இரத்தம் வெளியேறி உடல் பலவீனமாக இருக்கும்போது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது உள்ளிட்ட எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அந்தக் காலத்தில் மாதவிடாய் நாட்களில் ஓய்வு எடுக்க சொன்னார்கள்.
நம் நாட்டின் சில மாநிலங்களில் மாதவிடாயின் உதிரம் விஷமாகவும், சில விலங்குகளை கொல்லும் சக்தி வாய்ந்ததாகவும் ஒரு சில மக்களால் நம்பப்படுகிறது. பெரும்பாலும் பாம்புகள் அடர்த்தியான செடிகளுக்கு அருகே காணப்படுகின்றன, மாதவிடாய் உதிரத்துடன் ஒரு பெண் செடிக்கு அருகே சென்று தற்செயலாக பாம்பை தொட்டால் அது இறந்துவிடும் என்றும், அதன் சாபமாக குழந்தையின்மை அல்லது குழந்தை இளமையிலேயே இறக்க நேரிடும் போன்ற கடுமையான தண்டனையை பெறுவார்கள் என்ற மூட நம்பிக்கையை இன்னும் சில இடங்களில் நம்புகிறார்கள் என்று கூறப்படுகிறது.

நம் தமிழ் நாட்டில் மாதவிடாய் காலத்தில் துளசி செடியின் மீது ஒரு பெண்ணின் நிழல் விழுந்தால் அல்லது அவள் தண்ணீர் ஊற்றினால் அது பட்டு போய்விடும் என்றும், அதே போன்று மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் ஊறுகாயை தொட்டால் அது கெட்டுவிடும் என்றும் நம்பப்படுகிறது. நம் பாட்டி மற்றும் அம்மாக்கள் கூட சில நேரங்களில் இந்த குறிப்பிட்ட நடவடிக்கைகளில் இருந்து நம்மைக் கண்டிக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் எந்த அறிவியல் அடிப்படையிலும் இல்லை. ஆனாலும், இன்னும் பின்பற்றப்படுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்:ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்ய உதவும் சீட் சைக்ளிங்!

மாதவிடாய் நேரத்தில் பெண்களின் உடல் சூடு வழக்கத்தை விட அதிகரிக்கும். இந்த சிறிதளவு கூடுதல் வெப்பத்தால் செடிகளுக்கு எந்தக் கெடுதலும் நிகழாது. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றவில்லை என்றால் தான் பட்டுப்போகுமே தவிர, மாதவிடாய் நாட்களில் தண்ணீர் ஊற்றுவதால் பட்டுப்போகாது. மாதவிடாய் நாட்களில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றக்கூடாது என்பதை, உடல் சார்ந்த விஷயமாகவும், உணர்வு சார்ந்த விஷயமாக மட்டும் தான் பார்க்க வேண்டும். மற்றபடி, மாதவிடாய் நேரத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினால் செடி பட்டுப் போய்விடும் என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரமும் இதுவரை இல்லை.
குறிப்பு : நீங்களும் இதை பின்பற்றி வந்தால் உங்கள் நம்பிக்கையை தொடருங்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக மாதவிடாய் காலத்தில் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதால், அவை பட்டு போகாது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com