குழந்தை வளர்ப்பில் பல்வேறு சவால்கள் இருக்கும். அதிலும், பதின்பருவ பிள்ளைகளை கையாள்வது என்பது கூடுதல் சிரமமாக இருக்கும். இந்த பருவத்தில் தான் அவர்களுக்கு கூடுதல் அக்கறை தேவைப்படும். அதே நேரத்தில், அதிகப்படியான கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு வெறுப்பை உருவாக்க நேரிடும். இதனை எப்படி சரியான முறையில் நிர்வகிக்கலாம் என்பது குறித்து காண்போம்.
மேலும் படிக்க: Pregnant women health tips: நோய் தொற்று அபாயத்தை தடுக்க கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்
ஒரு பிரச்சனை குறித்து உங்கள் பிள்ளைகள் உங்களிடம் வந்து பேசும்போது, "இது ஒரு பெரிய விஷயமே இல்லை" அல்லது "இதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று கேட்பதை தவிர்க்கவும்.. நீங்கள் இவ்வாறு சொல்வது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு இல்லை என்று உணர்த்துகிறது. ஒருவேளை அவர்கள் கவலைப்படுவது உங்களுக்கு சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு குறிப்பிட்ட விஷயம் மிகப் பெரியது. எனவே, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சரியான முறையில் பதில் கூற வேண்டும்.
அவர்களின் தோற்றம், மதிப்பெண்கள், நண்பர்கள் அல்லது விருப்பங்கள் என எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பது, அவர்களின் தன்னம்பிக்கையை குறைத்து விடும். தொடர்ந்து வரும் விமர்சனங்கள் அவர்களை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும். பதின்பருவத்தினர் எதிர்பார்ப்பது வழிகாட்டுதல் தான். கடுமையான விமர்சனமோ அல்லது தீர்ப்போ அல்ல. "இதை இன்னும் சிறப்பாக செய்யலாம்" என்று கூறுவது, "நீ ஏன் இப்படி இருக்கிறாய்?" என்று கேட்பதை விட வலிமையானது.
மற்றவர்களை போன்று ஏன் உன்னால் செயல்பட முடியவில்லை என்ற கேள்வி, அவர்களுக்குள் வெறுப்பையும், கோபத்தையும் மட்டுமே உருவாக்கும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமைகள் உள்ளன. ஒப்பிடுதல் என்பது ஊக்கத்தை உருவாக்காது, மாறாக மனதளவில் எதிர்மறை தாக்கத்தை மட்டுமே அதிகரிக்கும். உங்கள் பிள்ளையின் தனித்துவமான ஆற்றல்களை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
மேலும் படிக்க: புரதம் முதல் கீரைகள் வரை: குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவுகளின் பட்டியல் - பெற்றோர்களே நோட் பண்ணுங்க
சிறுசிறு தவறுகளுக்குக்கூட நீங்கள் மிகைப்படுத்தி கோபப்படும்போது, அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். பெரிய பிரச்சனைகளை உங்களிடம் இருந்து மறைக்க அவர்கள் முடிவு செய்வார்கள். நீங்கள் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்கும்போது தான், எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அவர்கள் தயக்கமின்றி உங்களிடம் வந்து நிற்பார்கள். அமைதி என்பது நம்பிக்கையை வளர்க்கிறது. மேலும், தகவல் தொடர்பை மேம்படுத்துகிறது.
அவர்களின் சிறிய முடிவுகளில் கூட நீங்கள் தலையிட்டு, அனைத்தையும் நுணுக்கமாக கட்டுப்படுத்த முயல்வது, அவர்களுடைய சுதந்திரத்தை மறுக்கிறது. சில முடிவுகளை அவர்களாகவே எடுக்க அனுமதியுங்கள். அதில் தவறு ஏற்படும் பட்சத்தில், பக்குவமாக கூறி புரிய வைக்கலாம்.
தங்களுக்கு விருப்பமாக இருக்கும் விஷயங்கள் குறித்து குழந்தைகள் பேசும் போது அதனை புறக்கணிப்பது, எதிர்வினை எண்ணத்தை ஏற்படுத்தும். அவர்கள் விரும்பும் விஷயங்களில் நீங்கள் சிறிதளவாவது ஆர்வம் காட்டுவது, உங்களின் பிணைப்பை வலுப்படுத்தும்.
உரையாடல்களில் நீங்கள் தொடர்ந்து அறிவுரை மட்டுமே கூறி, அவர்கள் சொல்வதை கேட்க தவறினால், குழந்தைகள் தங்கள் உரையாடலை தவிர்த்து விடுவார்கள். அதனால், அவர்கள் கூற வரும் விஷயங்களை முழுமையாக கவனித்து விட்டு, பின்னர் உங்கள் கருத்துகளை கூற வேண்டும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com