டவுன், கிராமப் பகுதிகளில் உள்ள பேருந்துகளில் நாம் பயணிக்கும் போது ஒரு விஷயத்தை கவனிக்க முடியும். எளிய தோற்றத்தில் கைகளில் கூடையுடன் 20-30 பேர் விவசாயம், கட்டிட பணி, சாலை அமைக்கும் பணி போன்ற கூலி வேலைகளுக்கு செல்வார்கள். சில பெண்கள் ஆண்களின் சட்டையை அணிந்திருப்பார்கள். அன்றாடமும் வேலைக்கு சென்றால் மட்டுமே இவர்களது வீட்டில் உலை கொதிக்கும். உடல்நிலை சரியில்லாமல் போனாலும் முன்பணம் வாங்கிய காரணத்திற்காக தவறாமல் வேலைக்கு சென்று விடுவார்கள். பணி நேரத்தில் வரையறையும் கிடையாது. வேலை முடிந்த பிறகே வீட்டிற்கு புறப்பட முடியும். இப்படியான வாழ்வியலை கொண்ட வாழை தார் அறுத்து அதை சுமந்து சென்று லாரியில் ஏற்றும் மக்களை பற்றியை படமே மாரி செல்வராஜின் “வாழை”. தனது சிறுவயதில் நேர்ந்த உண்மை சம்பவத்தையே படமாக எடுத்திருக்கிறார்.
கதைச் சுருக்கம்
குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளி சிறுவன் சிவநைந்தன் வாழை சுமக்கும் வேலைக்கு செல்ல நேரிடுகிறது. இதில் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் சிவநைந்தன் அவ்வப்போது பொய் சொல்லி வேலைக்கு செல்வதை தவிர்க்கிறார். இதை சிவநைந்தனின் தாயார் கண்டறிந்த பிறகு என்ன நடக்கிறது என்பதே கிளைமாக்ஸ்...
படத்தின் பாஸிட்டிஸ்வ்
- கலையரசன், பொன்வேல், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, சிவநைந்தனின் நண்பன் சேகர், சிவநைந்தனின் தாய் என படத்தில் நடித்த அனைவருமே அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
- குறிப்பாக ரஜினி ரசிகனான சிவநைந்தனும் கமல் ரசிகனான அவனது நண்பன் சேகரும் நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முள் குத்தாமலேயே கமல் போல் நடித்து தாயை ஏமாற்றுவேன் எனக் கூறி சேகர் வசமாக சிக்கிக் கொள்ளும் காட்சி தியேட்டரில் சிரிப்பலை.
- ஆசிரியையாக நிகிலா விமல் தனது கதாபாத்திரத்தில் கட்சிதமாக நடித்துள்ளார். பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடும் காட்சிக்கு தியேட்டரில் விசில் பறந்தது.
- கம்யூனிஸ்டாக நடித்திருக்கும் கலையரசன் கூலி உயர்வில் தொடங்கி பணியிடத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் காட்சிகள் அனைத்துமே தரம்.
- சிவநைத்தனின் தாயார், திவ்யா துரைசாமி படத்திற்கு அற்புதமான பங்களிப்பை கொடுத்துள்ளனர். இறுதிக்காட்சியில் சிவநைந்தனின் தாய் பேசும் வசனம் நம்மை கண் கலங்க வைக்கிறது.
- படத்திற்கு தேவையான பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் கொடுத்துள்ளார்.
- எங்கும் தொய்வின்றி கதையை மிக இயல்பாக நகர்த்திக் கொண்டே இருந்த மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள்.
- பணம் சம்பாதிக்க வாழை வியாபாரி செய்யும் வஞ்சக செயலை திரையில் வெளிச்சம் போட்டு காண்பித்திருக்கின்றனர்.
படத்தின் நெகட்டிவ்ஸ்
- கலையரசன் - திவ்யா துரைசாமியின் காதல் காட்சிகள் படத்தில் இடம்பெறாவிட்டாலும் கதை அதன் பாணியிலேயே பயணித்திருக்கும்.
உண்மை சம்பங்களை எடுக்கும் போது ஒட்டுமொத்த வலியை திரையரங்கில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கடத்தினால் மட்டுமே அப்படம் வெற்றி பெறும். சுவையான இந்த வாழை மிகுந்த வலியோடு ரசிகர்களின் மனதிற்கு கடத்தப்பட்டுள்ளது.
படத்தின் ரேட்டிங் - 4/5
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation