கொட்டுக்காளி விமர்சனம் : சூரி, அன்னா பென் நடிப்பு வேற ரகம்! பொறுமையை சோதித்த விநோத்ராஜ்...

சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்ற கூழாங்கல் விநோத்ராஜின் அடுத்த படைப்பான கொட்டுக்காளி படத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...

kottukkaali review

விடுதலை, கருடன் என வெற்றிப் படங்களை கொடுத்த சூரி கூழாங்கல் விநோத்ராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் படம் கொட்டுக்காளி. இதற்கு பிடிவாதமான பெண் என அர்த்தம். திரையரங்குகளில் வெளியாகும் முன்பாகவே சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது. அங்கு The Adamant Girl என்ற தலைப்பில் இப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாவதற்கு கூழாங்கல் திரைப்படம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தால் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதே காரணம். அதே போல விடுதலை, கருடன் வெற்றியால் சூரியை ரசிகர்கள் ஹீரோவாகவே பார்க்க தொடங்கிவிட்டனர். கூழாங்கல் போல் கொட்டுக்காளியும் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றதா ? வாருங்கள் பார்ப்போம்.

sk production kottukkaali

கொட்டுக்காளி கதை சுருக்கம்

காதலனுடன் சேர விரும்பும் பெண்ணிற்கு பேய் பிடித்ததாக கூறி சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அவருக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை நோக்கி கதை பயணிக்கிறது.

படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • சூரி, அன்னா பென், ஜவகர் சக்தி, டாணாக்காரன் சித்தப்பு. இவர்களை தவிர படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள். அதாவது கிராமத்துவாசிகளை அப்படியே படத்தில் பயன்படுத்தியுள்ளனர். அனைவருமே கதைக்கு ஏற்ப இயல்பாக நடித்து அசத்தியுள்ளனர்.
  • படத்தில் பாண்டியாகவே வாழ்ந்துள்ளார் சூரி. திருமணம் செய்து கொள்ள வேண்டிய பெண் மற்றொருவனை காதலிப்பது தெரிந்தவுடன் காண்பிக்கும் ஆக்ரோஷம் நடிப்பின் உச்சக்கட்டம்.
  • அன்னா பென் படத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே வாயை திறக்கிறார். ஒத்தையடி பாதையில பாடல் பாடி சூரியிடம் தாறுமாறாக அடிவாங்குகிறார். இறுதிக்காட்சிக்கு முன்பாக என்னை நீங்கள் அடிக்க மட்டும் செய்யவில்லை என பேசுகிறார். ஆனால் அவரது கண்கள் சொல்லும் கதை, முகபாவனை பாராட்டைப் பெறுகிறது.

படத்தின் நெகட்டிவ்ஸ்

  • ஒரே நாளில் நடக்கும் கதை என்று கூட சொல்ல முடியாது. ஒரு நாளில் பாதி என புரிந்து கொள்ளலாம். ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பல படங்களில் கதை விறுவிறுப்பாக இருக்கும். வலுவான கதைக்களம் என்றாலும் கொட்டுக்காளி பல இடங்களில் பொறுமையை சோதிக்கிறது.
  • படத்தின் இசை லைவ் மிக்ஸிங் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு லைவ் மிக்ஸிங் புதிது என்றாலும் பல இடங்களில் ஷேர் ஆட்டோ சத்தம், வண்டி சத்தம் எரிச்சலூட்டுகிறது.
  • முதலில் குலதெய்வக் கோயில் அங்கிருந்து சாமியார் இருக்கும் இடத்திற்கு செல்ல கரடு முரடான பாதையில் பயணிக்கின்றனர். அப்போது காட்டப்படும் காட்சிகள் ஒரே மாதிரியாக இருக்கிறது. சூரி வண்டி ஓட்டுகிறார்.... ஓட்டுகிறார். ஓட்டிக் கொண்டே இருக்கிறார்.

விநோத்ராஜ் சொல்ல வரும் விஷயம் ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே தெளிவாக புரிந்துவிடுகிறது. வேறு சாதி பையனை காதலிப்பதால் அன்னா பென் அடித்து துன்புறுத்தப்படுகிறார். பிடிவாதமாக இருப்பதால் சாமியாரிடம் அழைத்துச் சென்று பேய் ஓட்ட நினைக்கின்றனர். இதை விரிவாக கூறும் நோக்கத்தில் சூரி அப்பெண்ணை கோவத்தில் தாக்குவது, சிலர் சுய சாதி பெருமை பேசுவது, காதலுனுடன் உடலுறவு கொண்ட காரணத்தால் தான் அப்பெண் பிடிவாதமாக இருக்கிறாள் என காலங்காலமாக கிராமங்களில் சாதி மனப்பான்மை அப்படியே இருக்கிறது என்பதை கூறுவதற்கு மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் விநோத்ராஜ்.

  • ஒரு கட்டத்திற்கு மேல் திரையரங்கில் படம் பார்த்த ரசிகர்கள் ஏன் சொன்னதையே திருப்பி திருப்பிச் சொல்கின்றனர் என வெறுப்படைந்துவிட்டனர்.
  • இறுதிக்காட்சியில் அப்பெண்ணிற்கு பேய் ஓட்டி வலுகட்டாயமாக சூரியுடன் சேர்த்து விடுவார்கள் என எதிர்பார்த்தால் திடீரென இந்த படத்தின் முடிவை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்கிறார் இயக்குநர் விநோத்ராஜ்.

பெண் சுதந்திரம், ஆணவக் கொலை ஆகியவற்றை மையப்படுத்தி வந்த பல படங்களில் சமூகத்தில் ஓரளவிற்கு தாக்கத்தைப் ஏற்படுத்தி இருக்கின்றன. ஏனென்றால் அப்படங்களில் இப்பிரச்னைகளுக்கான தீர்வு கூறப்படும் அல்லது சட்ட ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்களை அரசிடம் வலியுறுத்தி இருப்பார்கள்.

படத்தைக் முழுமையாக முடிக்காமல் அடுத்து என்ன நடந்திருக்கும் முடிவு செய்யுங்கள் என ரசிகர்களிடம் விட்டதால் இயக்குநருக்கே என்ன முடிவெடுக்க வேண்டும் என்று தெரியவில்லை போலத் தோன்றியது

படத்தின் ரேட்டிங் - 2.25/5

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP