உலக நாயகன் கமல்ஹாசனனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடனான மோதலில் வீரமரணம் அடைந்த சென்னையைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் அவர் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அமரன் படத்தின் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன நிலையில் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ள அமரன் படம் எப்படி இருக்கு என்ற விமர்சனத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஒருவரின் வாழ்கை வரலாறு பயோபிக் திரைப்படம் என்று வரும்போது அந்த படம் ரிலீசாவதற்கு முன்பே கதை ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் ட்ரெய்லரை வைத்தே ‘டீகோடிங்’ என்ற பெயரில் படத்தின் கதையை பிரித்து மேய்ந்துவிடுவார்கள். இதையும் தாண்டி அந்த படம் வெற்றி பெற திரைக்கதை ஸ்ட்ராங் ஆக இருக்க வேண்டும். அந்த வரிசையில் கதைக்களத்துக்கு நியாயம் செய்யும் விதத்தில் நேர்த்தியான ஒரு திரைக்கதையுடன் களமிறங்கியுள்ளார் இந்த படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு வெளியான ரங்கூன் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயனுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் ஒரு மாஸ் முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் இதற்கு முன்பும் பல திரைப்படங்களில் சில சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் அவர் நடிப்பு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு புதிய பரிணாமம் எடுத்துள்ளார். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நம் ஹீரோ சிவகார்த்திகேயன் படத்தில் கேப்டன், மேஜர் என அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்ந்து கொண்டே இருக்கிறார். மேஜர் முகந்த் ஒரு பக்கம் காதலனாகவும் மறுபக்கம் ராணுவ வீரராகவும் ஒரே நொடி வித்தியாசத்தில் மாறுகிறார். காஷ்மீரில் தீவிரவாத கும்பலின் படைத்தலைவனை துரத்தி பிடிக்கும் சண்டை காட்சிகளில் சிவகார்த்திகேயன் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்.
படம் எப்படி இருக்கு?
அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் பாதி முழுவதும் மேஜர் முகுந்த் மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ் இடையிலான காதல் காட்சிகளுடன் அழகாக நகர்கிறது. இது இந்திய ராணுவத்தின் போர் தொடர்பான படத்தையும் தாண்டி ஒரு காதல் படம் என்று கூட சொல்லலாம். கதாநாயகன் முகுந்தனை விட மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆக நடித்துள்ள சாய் பல்லவிக்கு தான் படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். ஒரு சில காட்சிகளில் நடிகை சாய் பல்லவி திரையில் அழும்போது படம் பார்க்கும் பலரும் கண்கலங்கி விட்டார்கள்.
மேலும் படிக்க: 2024 தீபாவளி ரிலீஸ்: திரையில் மோதும் மாஸ் நடிகர்கள், ரிலீஸாகும் தமிழ் படங்கள் இதோ!
இந்திய ராணுவத்தில் நடக்கும் போர் களத்தை கதையின் மையமாக வைத்து பல மொழி திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் காஷ்மீரில் சில பயங்கரமான பாதுகாப்பு இல்லாத இடத்தில் கூட இந்திய ராணுவத்தின் ஆதரவுடன் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. படத்தின் கடைசி காட்சிகள் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது. குடும்பத்தை பிரிந்து ராணுவத்திற்கு எப்போது சென்றாலும் படத்தில் கண்கலங்காத முகுந்த் இறுதியாக கண்கலங்கிய காட்சிகளை இயக்குனர் அழகாக காட்டியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளார் என்று கூறலாம். அமரன் திரைப்படம் கண்டிப்பாக மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு சிறந்த சமர்ப்பணமாக அமையும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படத்தை குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று தாராளமாக பார்க்கலாம்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation