தினமும் காலையில் எழுந்து கண்ணாடியை பார்க்கும் போது கொஞ்சம் தொப்பை போட்டு இருந்தால் உடல் எடையை குறைக்க தோன்றும். ஆனால் நமது அன்றாடப் பணிகள் அதற்கு தடையாக இருக்கலாம். வேலைக்கு செல்ல இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக எழுந்து குளித்து சாப்பிட்ட பிறகு அலுவலகத்திற்கு சென்று பத்து மணி நேர வேலை முடிந்து வீடு திரும்பும் போது இரவு எட்டு மணி ஆகிவிடும். சோர்வுடன் வீடு திரும்பும் போது சாப்பிட்டு தூங்க மட்டுமே தோன்றும். உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்குவது சிரமமாக தெரியும். இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் உடற்பயிற்சி இன்றி எடையைக் குறைப்பது சாத்தியமற்ற காரியம்.
உடல் எடையைக் குறைக்க விரும்பும் போது நம் மனதில் முதலில் நினைவுக்கு வருவது ஜிம் செல்வதும், டயட் பின்பற்றுவதும் தான். நமது பணி நேரம் ஜிம் செல்வதற்கு அல்லது உடற்பயிற்சி செய்வதற்கு தடையாக இருக்கலாம். ஆகையால் எடையை குறைக்கவே முடியாதா ? எடை இழப்பு என்பது உடற்பயிற்சி செய்வதோடு நின்று விடாது. உணவு முறை மற்றும் வாழ்க்கைமுறையும் எடை இழப்பில் பங்கு வகிக்கின்றன.
ஆரோக்கியமான உணவுகளால் நமது உடலில் ஏற்படுத்த முடியாத மாற்றங்களே கிடையாது. எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதில் நமது கவனம் இருக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள். ஜங்க் ஃபுட் என்று குப்பை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை அதிகமுள்ள தின்பண்டங்கள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்கவும்.
உடலில் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் நச்சுகள் தங்குவதை தவிர்க்க தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும். போதுமான அளவு தண்ணீர் குடித்து நீரேற்றமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சில நேரங்களில் தண்ணீர் தாகத்திற்கு சிற்றுண்டிகளை சாப்பிட்டு அதன் பிறகு தண்ணீர் குடிக்கிறோம். இது உடல் எடை இழப்புக்கு உதவாது.
மேலும் படிங்க பொன்னுக்கு வீங்கி பாதிப்பு இருந்தால் இந்த உணவுகளை சாப்பிடுங்க! உடனடியாக குணமாகும்
உடல் எடையைக் குறைப்பதற்கு கலோரி குறைவான உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் ஊட்டச்சத்து அளவுகள் பாதிக்கப்படக் கூடாது. வழக்கமாக மருத்துவர்கள் சொல்வது போல் தான். ஒரு தட்டு நிறைய சாப்பாட்டுக்கு பதிலாக ஒரு கப் சாதம் மற்றும் இரண்டு கப் காய்கறிகள் சாப்பிடவும். உடற்பயிற்சி இன்றி கலோரிகளை குறைக்கவும், எரிக்கவும் ஒரே வழி இது தான். சராசரி மனிதனுக்கு தினமும் 2 ஆயிரம் கலோரிகள் தேவைப்படும். இதை சற்று மாற்றி ஆயிரத்து 800 கலோரிகளாக குறைத்து ஊட்டச்சத்துகளை அதிகப்படுத்தலாம். உங்கள் உடலுக்கு ஏற்ற உணவு பரிந்துரைகளுக்கு உணவியல் நிபுணரை அணுகவும்.
உடல் எடையைக் குறைக்க முடிவெடுத்தவுடன் ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுவது அல்லது ஒரு முறை மட்டுமே சாப்பிடுவது போன்ற நடைமுறைக்கு மாறக் கூடாது. இதனால் உங்கள் மனநலன் பாதிக்கப்படும். மூன்று வேளை உணவுமுறையை கடைபிடிப்பது எப்போதுமே உடலுக்கு நல்லது. மேலும் ஒரு நேரத்திற்கு குறைவாகவும் மற்றொரு நேரத்திற்கு அதிகமாக சாப்பிடுவதையும் மூன்று வேளை உணவுமுறை தவிர்க்கும்.
மேலும் படிங்க இரத்த சோகைக்கு காரணம் என்ன ? பாதிப்பை தடுக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள்!
உடல்எடை குறைப்பின் போது முடிந்தவரை பசிக்கும் போது மட்டும் சாப்பிடுங்கள். அதே நேரம் வாய்க்கு ருசியான உணவுகளை சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என சாப்பிட்டு கொண்டே இருப்போம். இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.
பரப்பரப்பான வாழ்க்கை சூழலில் மன அழுத்தத்தோடு இருந்தால் உடல் எடையைக் குறைப்பது சிரமம். தியானம் மற்றும் மூச்சு பயிற்சி செய்து மன அழுத்தத்தை குறைத்தால் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். அதே நேரம் உணவுமுறை மாற்றத்தால் ஏற்படும் உடல் சோர்வையும் தடுக்கலாம்.
உடல் எடையைக் குறைக்க தினமும் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் தூங்க அறிவுறுத்தப்படுகிறது. மோசமான தூக்கம் பசி எடுக்கும் ஹார்மோன்களை சீர்குலைக்கும். இதனால் இரவு தூங்கும் போது பயங்கரமான பசி எடுக்கும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com