herzindagi
image

இயற்கையாக உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினமும் காலை நேரத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய பழக்கங்கள்

உங்கள் உடல் எடையை இயற்கையான முறையில் குறைக்க, நீங்கள் காலை நேரத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் குறித்து இதில் காணலாம். இதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முடியும்.
Editorial
Updated:- 2025-11-21, 13:03 IST

உடல் எடையை குறைப்பது என்றவுடன், நாம் பெரும்பாலும் கலோரி கணக்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சிற்றுண்டிகள் ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்துகிறோம். உடல் எடையை குறைப்பதற்கான பெரும்பாலான வழிகள் உணவு கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர உடற்பயிற்சிகளை நோக்கியே செல்கின்றன. 

ஆனால், இதில் உள்ள ஒரு ரகசியம் என்னவென்றால், கூடுதல் உடல் எடையை குறைப்பதற்கான மிகவும் ஆற்றல் மிகுந்த கருவி உங்கள் காலை பழக்கவழக்கங்களிலேயே மறைந்துள்ளது. உடல் எடையை குறைப்பது என்பது கலோரிகளை குறைப்பதை விட மேலானது. உங்கள் உடலையும், மனதையும் தயார்படுத்துவது தான் வெற்றிகரமான உடல் எடை குறைப்பிற்கான அடித்தளம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சுறுசுறுப்பாக உணர்கிறீர்கள், உங்கள் வளர்சிதை மாற்றம் (Metabolism) எவ்வாறு செயல்படுகிறது ஆகிய அனைத்தையும் உங்கள் காலை பழக்கவழக்கங்கள் பாதிக்கின்றன.

 

அதனடிப்படையில், சீரான உடல் எடை குறைப்பு பயணத்தில் நாள்தோறும் நாம் அவசியம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். இவை அனைத்தையும் நீண்ட நாட்களுக்கு மேற்கொள்ளும் போது, நிலையான ஆரோக்கியத்தை நம்மால் அடைய முடியும்.

 

காலையில் விரைவாக எழுந்திருக்க வேண்டும்:

 

வார நாட்களில் காலை 6 மணிக்கு, வார இறுதி நாட்களில் காலை 10 மணிக்கு என தினமும் வெவ்வேறு நேரத்தில் எழுந்திருப்பது உங்கள் உடல் செயல்பாடுகளை பாதிக்கும். இது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் மற்றும் கொழுப்பு சேமிப்பை பாதிக்கும் கார்டிசால் அளவுகள் போன்ற அனைத்தையும் ஒழுங்குபடுத்துகிறது. நீங்கள் தினமும் ஒரே நேரத்தில் விழித்தெழும்போது, உங்கள் வளர்சிதை மாற்றம் நிலைபெற்று சோர்வு குறைகிறது. இதன் விளைவாக, பசி தூண்டுதல்கள் குறைவது, செரிமானம் சிறப்பாக இருப்பது மற்றும் நாள் முழுவதும் அதிக ஆற்றல் கிடைப்பது போன்ற பலன்கள் கிடைக்கின்றன.

 

தண்ணீர் அருந்துதல்:

 

கண் விழித்த உடனேயே காபியை நோக்கி செல்வது பலரின் பழக்கம். ஆனால், அதற்கு முன்பாக பெரிய கிளாஸில் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யவும். ஏழு அல்லது எட்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு, உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும் கூட, உங்கள் உடல் நீரிழப்புக்கு உள்ளாகியிருக்கும். இந்த நீரிழப்பு உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைத்து, உங்கள் மூளையை நீங்கள் பசியுடன் இருப்பதாக நினைக்க தூண்டலாம். எனவே, காபிக்கு முன் தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, தேவையற்ற பசியை தவிர்க்க உதவுகிறது.

Drinking water

மேலும் படிக்க: ஜிம்முக்கு செல்ல முடியவில்லையா? கவலையே வேண்டாம், வீட்டிலேயே செய்யக் கூடிய 5 எளிய உடற்பயிற்சிகள்

 

உடல் செயல்பாடுகளில் கவனம்:

 

இதற்காக காலை விழித்த உடன் அதிக நேரம் கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியதில்லை. லேசான அசைவுகள் கூட போதுமானது. எளிய யோகா அல்லது லேசான நடைபயிற்சி கூட கொழுப்பை குறைக்கும் ஹார்மோன்களை செயல்படுத்தும். அதிகாலையில் உடலை அசைப்பது கார்டிசால் (Cortisol) எனப்படும் மன அழுத்த ஹார்மோனை குறைக்க உதவுகிறது. கார்டிசால் அளவு நீண்ட நேரம் அதிகமாக இருக்கும் போது, அது கொழுப்பை வயிறு பகுதியில் சேமிக்க வழிவகுக்கும். எனவே, உடற்பயிற்சி உங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உங்களை ஊக்குவிக்கும்.

Walking

 

சூரிய ஒளியின் அவசியம்:

 

சூரிய ஒளி, வைட்டமின் டி-க்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் சர்க்காடியன் ரிதத்தை மீண்டும் அமைக்க உதவுகிறது. காலையில் 10 நிமிடங்கள் வெளியே நின்று சூரிய ஒளியை பெறுவது, பகல் நேரம் வந்துவிட்டது என்று உங்கள் உடலுக்கு சொல்கிறது. இது தூக்கம் மற்றும் விழித்திருக்கும் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. இதுவும் உடல் எடை குறைப்புக்கு மறைமுகமாக உதவுகிறது.

மேலும் படிக்க: இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க வேண்டுமா? இந்த 5 இயற்கை பானங்களை அருந்தவும்

 

காலை உணவை தவிர்க்கக் கூடாது:

 

காலை உணவை தவிர்ப்பது கலோரிகளை குறைப்பதற்கான எளிதான வழியாக தோன்றலாம். ஆனால், அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் இல்லாமல் இயங்கினால், நண்பகலில் நீங்கள் சோர்வடைந்து, அதிக சர்க்கரை மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை தேடி செல்ல வாய்ப்புள்ளது. இதற்காக காலை நேரத்தில் புரதச்சத்து நிறைந்த முட்டை, தயிர் அல்லது ஸ்மூத்தி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது பசியை போக்குவதுடன், ஆரோக்கியமான ஆற்றலையும் உங்களுக்கு அளிக்கும்.

 

இந்த எளிய பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உங்களால் காண முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com