
சீரான இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், குறிப்பாக நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
சரியான உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் போதுமான உறக்கம் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களுடன், சில மூலிகை பானங்களை உணவில் சேர்ப்பது அவற்றின் பலனை இன்னும் அதிகரிக்க செய்யும். இந்த இயற்கை பானங்கள், நமது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்தும் ஒரு சிகிச்சை முறையாக செயல்படுகிறது. இதற்காக, உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் 5 ஆற்றல் மிகுந்த இயற்கை பானங்கள் என்னவென்று பார்க்கலாம்.
பாகற்காய், பாரம்பரிய மருத்துவத்தில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுக்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அதன் கசப்பு சுவை அதிக பலன் அளிக்கக்கூடியது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள சரண்டின் (Charantin) மற்றும் பாலிபெப்டைட்-பி (Polypeptide-p) போன்ற கூறுகள், இன்சுலினை போல செயல்படுவதாகவும், குளுக்கோஸை உடல் பயன்படுத்தும் திறனை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு பாகற்காய் சாறு குடிப்பது, இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும்.
வெந்தயம் அதன் மருத்துவ குணங்களுக்காக பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெந்தய நீர், நீரிழிவு பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் தினமும் 10 கிராம் வெந்தயத்தை உட்கொண்ட போது, அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து மற்றும் 4 - ஹைட்ராக்ஸிசோலூசின் (4-hydroxyisoleucine) போன்ற உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, உணவுக்கு பிறகு சர்க்கரை உறிந்து கொள்ளப்படுவதை தாமதப்படுத்துகின்றன. இரவு முழுவதும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்து, பின்னர் வெந்தயத்தையும் சாப்பிடலாம்.
மேலும் படிக்க: இரவில் தூங்குவதற்கு சிரமப்படுகிறீர்களா? படுக்கைக்கு முன்பு நீங்கள் தவிர்க்க வேண்டிய 7 உணவுகள்
இலவங்கப்பட்டை பல நூற்றாண்டுகளாக ஒரு மசாலா பொருளாகவும், இரத்த சர்க்கரை அளவுக்கு இயற்கை தீர்வாகவும் பயன்படுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டை தேநீர், நீரிழிவு இல்லாத பெரியவர்களின் உணவுக்கு பிந்தைய அதிகபட்ச குளுக்கோஸ் அளவை கணிசமாக குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சின்னமால்டிஹைடு போன்ற சேர்மங்கள், இன்சுலினை போல செயல்படுவதாகவும், இரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்தும் திறனை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஒரு சிறிய இலவங்கப்பட்டை துண்டை வெந்நீரில் ஊறவைத்து அல்லது இலவங்கப்பட்டை தூளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிப்பது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவும்.
செம்பருத்தி பூவின் உலர்ந்த இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் செம்பருத்தி தேநீர், பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்தத் தேநீரில் அந்தோசயினின்கள் (Anthocyanins) என்ற அன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) குறைக்கவும், ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. நீரிழிவு மற்றும் அது தொடர்பான உடல்நல பிரச்சனைகளை நிர்வகிக்க செம்பருத்தி தேநீருக்கு அதிக ஆற்றல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. செம்பருத்தி இதழ்களை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி குடிக்கலாம். இது சற்று புளிப்பு சுவை கொண்டது.

மேலும் படிக்க: Weight loss tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் 5 இயற்கை பானங்கள்
கற்றாழை சாறு பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகை பொருளாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. கற்றாழையில் உள்ள பாலிசாக்கரைடுகள் (Polysaccharides) போன்ற சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு துணை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. கற்றாழையின் ஜெல்லை சுத்தம் செய்து, தண்ணீருடன் கலந்து சாறாக தயாரித்து குடிக்கலாம். எனினும், இதை உட்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது.
இந்த இயற்கை பானங்கள் இரத்த சர்க்கரை அளவை சமன் செய்ய உதவினாலும், இவை ஒருபோதும் உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகாது. நீரிழிவுக்கான மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வது அவசியம். இந்த பானங்களை உங்கள் தினசரி உணவு முறையில் சேர்ப்பதற்கு முன், குறிப்பாக நீரிழிவு அல்லது வேறு ஏதேனும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் மருத்துவருடன் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com