கோடை காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தை தணிக்க, நண்பர்களுடன் என்ஜாய் பண்ண வார இறுதி நாட்களில் மக்கள் நீர் நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டனர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கோடை காலத்தில் நீச்சல் பயிற்சிக்கு அனுப்புவார்கள். நீச்சல் அடிப்பதால் உடலுக்கும் மனதுக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. இப்படி காரணம் எதுவாக இருந்தாலும் நீச்சலடிக்க எல்லோராலும் இயற்கையான நீர் நிலைகளுக்கு செல்ல முடியாது, குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்களுக்கு சாத்தியமற்றது. அதனால் மக்களுக்கு இருக்கும் ஒரே வழி பொது நீச்சல் குளங்களுக்கு செல்வது. ஆனால் பொது நீச்சல் குளங்களில் கலக்கப்படும் குளோரின் உங்கள் உடலை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீச்சல் குளத்தில் குளோரின் கலப்பது எதனால்?
நீச்சல் குளத்தில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் நுண்ணுயிரிகளை அளித்து தண்ணீரை சுத்தமாக வைத்திருக்க குளோரின் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை குளோரினேஷன் எனப்படுகிறது. என்னதான் நீச்சல் குளத்தில் குளோரின் சேர்ப்பது தண்ணீரில் உள்ள மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் அந்த நீச்சல் குளத்தை பயன்படுத்துபவர்களுக்கு ஆரோக்கியத்தில் சில பக்க விளைவுகளும் ஏற்படும்.
சருமம் பாதிக்கப்படும்
குளோரின் மிக சக்திவாய்ந்த ரசாயனமாகும். நீங்கள் பொது நீச்சல் குளத்தில் அதிக நேரம் இருக்கும் போது சருமம் நீண்ட நேரம் குளோரினுடன் தொடர்பில் இருக்கும். இதன் காரணமாக சருமத்தில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். குளோரின் சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி வறட்சியை ஏற்படுத்தும். இதனால் உங்கள் சருமத்தில் தடிப்புகள், சிவத்தல், எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகும். குளோரின் கலந்த பொது நீஞ்சல் குளங்களுக்கு அடிக்கடி சென்றால் குளோரினின் எதிர்வினையாக உங்கள் சருமத்தில் முன்கூட்டிய வயதானது போன்ற நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தலைமுடி பாதிக்கப்படும்
சருமத்தை போன்று தலைமுடியில் உள்ள இயற்கையான எண்ணெய் பசையை நீக்கி வறட்சியை ஏற்படுத்தும். இது தலைமுடியில் எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். குளோரின் உங்கள் தலைமுடியில் உள்ள புரதங்களை உடைத்து, முடி உதிர்வு அபாயத்தை அதிகரிக்கும். மேலும் தலைமுடிக்கு நிறத்தை தரும் மெலனின் என்ற நிறமியை குளோரின் பாதித்து நிறத்தை மங்க செய்யும்.
மேலும் படிக்க :சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கலாமா? உடலுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?
சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும்
பொது நீச்சல் குளங்களில் கலக்கப்படும் குளோரினின் நறுமணத்தை நீண்ட நேரம் சுவாசிக்கும் போது சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பு மோசமாகலாம். குளோரின் சுவாச மண்டலத்தை எரிச்சலடைய செய்து மூச்சுத்திணறல், இருமல் போன்ற சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பற்களில் கறை உண்டாகும்
நமது வாயின் உமிழ்நீரை விட நீச்சல் குளங்களில் உள்ள குளோரின் கலக்கப்பட்ட நீரின் pH அளவு அதிகமாக இருக்கும். இது நம் பற்களுடன் நேரடியாக வினைபுரியும் போது பற்களில் கறை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் எப்போதாவது பொது நீச்சல் குளங்களுக்கு சென்றால் பற்களில் கறை ஏற்படாது. ஆனால் அடிக்கடி சென்றால் பற்களில் கறை ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்
அதிக குளோரின் கலந்த நீரை விழுங்குவதால் வயிற்று உபாதைகள் ஏற்படும். இதனால் வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படும். அதிகளவில் விழுங்கினால் செரிமானப் பாதைக்குள் குளோரின் சென்று குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்று போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகள் ஏற்படும்.
நீச்சல் குள குளோரின் தண்ணீரின் விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது
- பொது நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு முன் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். சன்ஸ்கிரீன் குளோரினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.
- குளோரினால் உங்கள் தலைமுடி பாதிக்காமல் இருக்க பொது நீச்சல் குளங்களில் நீந்தும்போது நீச்சல் தொப்பியை அணியுங்கள்.
- நீச்சல் குளத்தில் நீந்துவதற்கு செல்லும் முன்பும் பின்பும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். இதனால் குளோரினால் ஏற்படும் தாக்கம் குறையும்.
- பொது நீச்சல் குளத்தில் குளித்த பிறகு மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் சருமத்தை வறண்டு போவதில் இருந்து தடுக்க முடியும்.
- நீச்சல் குளத்தின் குளோரினால் உங்கள் உதடுகள் சேதமடையும் என்பதால் நீந்துவதற்கு முன் லிப் பாம் பயன்படுத்த மறக்காதீர்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation