நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் உடல் உஷ்ணம். உங்கள் உடலில் உஷ்ணம் அதிகரிக்க பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக சொல்லப்போனால் மருந்துகள், மாத்திரைகள், சாப்பிடும் உணவு வகைகள், வாழ்க்கைமுறை கூட உடம்பில் உஷ்ணத்தை அதிகரிக்க கூடும். நம் உடல் இயக்கங்கள் அனைத்தும் உடல் உஷ்ணத்தை அடிப்படையாக வைத்தது தான். உடல் உஷ்ணம் அதிகரித்தால் எந்த மாதிரி அறிகுறிகள் வரும் என்றும் இதனால் வரக்கூடிய உடல்நல பிரச்சனைகள் என்ன என்றும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பொதுவாக உடல் உஷ்ணம் என்பது நம் உடலில் உள்ள பித்தத்தை குறிக்கும். வாதம், பித்தம், கபம் இதில் அழல் என்று கூறப்படும் இந்த பித்தம் நிலை அதிகரிக்கும் போது உடல் உஷ்ணம் ஏற்படுகிறது. இந்த உடல் உஷ்ணத்தை சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
தலைவலி, அதிகம் முடி கொட்டுவது, கண்களில் பிரச்சனை, கண் பார்வை குறைவது, கண் சிவத்தல், காதில் சூடான காற்று, தொண்டை வறட்சி, வறட்டு இருமல், வறண்ட சருமம், தோல் அரிப்பு, உணவு செரிமானம் பாதிக்கும். குறிப்பாக உடல் உஷ்ணம் உள்ள நபர்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். அடிக்கடி மலம் கழித்தல், வயிற்றுப்புண் இதுவும் உடல் உஷ்ணத்தின் அறிகுறிகள் ஆகும். ஹை பிபி உள்ள நபர்களுக்கு சிறுநீரக சுருக்கம் ஏற்படும், சிறுநீர் கழிக்கும் போது அடி வயிற்று வலி, இது அனைத்தும் உடல் உஷ்ணத்தின் அறிகுறிகள் ஆகும்.
நம் உடலில் இருக்கும் சக்கரங்களில் ஆதாரமாக முதன்மையாக இருக்கும் சக்கரம் மூலாதாரம். இது நம் தொப்புள் கீழ் தொடைக்கு மேல் இருக்கக்கூடிய பகுதியில் உள்ளது. இந்த மூலாதார சக்கரத்தில் உஷ்ணம் அதிகரிக்கும் போது ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு, பெண்களுக்கு அடிக்கடி சிறுநீரகப் பாதை தொற்று மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படும். இது அனைத்தும் மூலாதார சக்கரத்தில் உஷ்ணம் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. இதை குணப்படுத்த எந்த விதமான உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரிய எண்ணெய் குளியலை நாம் மறந்து விட்டோம். உடல் உஷ்ணத்தை குறைக்க வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது. உடலில் எண்ணெய் தேய்த்து 30 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் வரை ஊற விட்டு பிறகு வெந்நீரில் குளிக்க வேண்டும். உடல் உஷ்ணம் இருக்கும் நபர்கள் எண்ணெய் குளியல் எடுத்த பிறகு பூண்டு பால் கஞ்சியை சாப்பிடலாம்.
இது செய்வது மிகவும் எளிது. சிறிது தேங்காய் பால் எடுத்து அதில் பூண்டு, சீரகம் சேர்த்து கஞ்சி போல சமைத்து சாப்பிடலாம். இது உங்கள் உடல் உஷ்ணத்தை குறைக்க பெரிதும் உதவும்.
மேலும் படிக்க: ஆஸ்துமா மூச்சு திணறலை கட்டுப்படுத்த; தேனுடன் கலோஞ்சி கலந்து இப்படி பயன்படுத்துங்க
இரவு நேரத்தில் அதிக நேரம் கண் முழித்து வேலை செய்பவர்கள் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை கண்களை மூடி மூச்சுப் பயிற்சி செய்யலாம். அதிக நேரம் ஏசி அறையில் உட்கார்ந்திருக்கும் போது அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சமைத்து சாப்பிடலாம். முக்கியமாக இரவில் தூங்கும் முன்பு உங்கள் கண்களை சுற்றியோ அல்லது தொப்புளில் இரண்டு சொட்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாம் சாப்பிடும் அசைவ உணவுகளும் எண்ணெயில் வறுத்த பிராசஸ்டு உணவுகளும் உடல் உஷ்ணம் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
தினமும் காலையில் எழுந்ததும் காபி டீ குடிப்பதற்கு பதிலாக அருகம்புல் ஜூஸ் நெல்லிக்காய் ஜூஸ் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் போன்றவற்றை குடித்து வரலாம். அதேபோல தினமும் இரவு நேரத்தில் மாலை 7 மணி அல்லது எட்டு மணிக்கு முன்பு உணவை சாப்பிட வேண்டும். அஜீரணம் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் சீரகம் மற்றும் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உணவு செரிமானத்திற்கு உதவும்.
தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இந்த காலத்து பெண்களுக்கு இல்லை. தலைமுடிக்கு பலரும் சீரம் பயன்படுத்தி வருகிறார்கள். உடல் உஷ்ணம் அதிகரிக்காமல் இருக்க தினமும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தலையில் தேய்க்க வேண்டும். குறிப்பாக தலையின் நடு உச்சியில் தேய்ப்பது நல்லது.
தினமும் காலையில் வாயில் சிறிது நல்லெண்ணெய் வைத்து கொப்பளித்து ஆயில் புல்லிங் செய்யலாம். இதை வாரம் நான்கு முறை செய்து வந்தால் போதும், உடல் உஷ்ணம் அப்படியே குறைந்துவிடும். இந்த உடல் உஷ்ணத்தை கட்டுக்குள் வைத்தாலே நம் உடலில் பல நோய்களை வராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com