herzindagi
image

கண் பார்வையை பாதிக்கும் 5 பழக்கங்கள்; இந்த தவறுகளை மட்டும் பண்ணாதீங்க மக்களே

நாம் தொடர்ச்சியாக செய்யக் கூடிய 5 தவறுகள், நம் கண் பார்வைக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். இந்த தவறுகளை முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் நம்முடைய கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
Editorial
Updated:- 2025-10-19, 13:44 IST

நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் கண்கள் முதன்மையானவை. பார்ப்பது, படிப்பது, வாகனம் ஓட்டுவது என பல வேலைகளுக்கு கண்கள் உதவுகின்றன. ஆனாலும், அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்வதில்லை. கண்ணுக்கு அசௌகரியம் அல்லது வலி ஏற்படும் போது தான், அதன் பாதிப்பை உணர்கிறோம்.

மேலும் படிக்க: கை நடுக்கம் அதிகமாக இருக்கிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்; அலட்சியப்படுத்த வேண்டாம்

 

நம் அன்றாட பழக்க வழக்கங்களில் செய்யும் சில தவறுகள், கண்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன. அந்த பழக்க வழக்கங்களை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், நம் கண்களை பாதுகாக்கலாம். கண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் சில அன்றாட பழக்கங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

 

அதிக நேரம் செல்போன் மற்றும் கணினி பயன்படுத்துதல்:

 

இன்றைய டிஜிட்டல் உலகில், செல்போன், கணினி, போன்றவற்றை பல மணி நேரம் தொடர்ந்து பார்ப்பது கண்களுக்கு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். இவை கண்களுக்கு அழுத்தம், தலைவலி, மங்கலான பார்வை மற்றும் கண்களில் வறட்சிதன்மை போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். திரையிலிருந்து வெளிப்படும் நீல ஒளி, தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் உற்பத்தியை குறைத்து, தூக்க முறையை பாதிக்கும்.

Eye health

 

இதனை குறைக்க, 20-20-20 என்ற வழிமுறையை பின்பற்றலாம். அதன்படி, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை, 20 வினாடிகள் 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்க்க வேண்டும். இது கண்களுக்கு ஓய்வு அளிக்கும். மேலும், திரையின் வெளிச்சத்தை சரிசெய்வது ஆகியவை கண் அழுத்தத்தை குறைக்க உதவும்.

 

கண்களை அதிகமாக தேய்த்தல்:

 

அதிக நேரம் செல்போன் பார்ப்பது கண்களில் அரிப்பு அல்லது வறட்சியை ஏற்படுத்தலாம். இதனால், நாம் அடிக்கடி கண்களை தேய்க்கிறோம். இது கண்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி செய்வதால் ரத்த நாளங்கள் சேதமடைந்து கருவளையங்கள் அல்லது கெரட்டோகோனஸ் போன்ற நிலைகளை மோசமாக்கும். அசுத்தமான கைகளால் கண்களை தேய்ப்பது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுகளை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும்.

மேலும் படிக்க: ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்? அதிக உப்பு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

 

சன் கிளாஸ் அணியாமல் வெளியே செல்லுதல்:

 

சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் சருமத்திற்கு மட்டுமல்ல, கண்களுக்கும் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். இது கண்புரை அல்லது கண் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே வெளியே செல்லும் போது, வெயில் அதிகம் இல்லாத நாட்களில் கூட சன் கிளாஸ் அணிவது கண்களை பாதுகாக்க உதவும்.

 

தூக்கமின்மை:

 

தூக்கமின்மை நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, கண்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தூக்கமின்மை கண்களில் வறட்சிதன்மை, கண் துடிப்பு, மங்கலான பார்வை மற்றும் ஒளியின் உணர்திறன் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது கிளைகோமா போன்ற தீவிர கண் நோய்களுக்கும் வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு இரவும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவது கண்களுக்கு ஓய்வு அளிக்கும்.

Eyesight

 

கண் பரிசோதனைகளை தவிர்த்தல்:

 

பலர் வழக்கமான கண் பரிசோதனைகளை தவிர்த்து விடுகின்றனர். பாதிப்பு ஏற்பட்ட பிறகே கண் மருத்துவரை அணுகுகின்றனர். ஆரோக்கியமான கண் பார்வையை பெற, வருடத்திற்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்வது அவசியம். இது பல பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும். எனவே, கண்களை பாதுகாக்க கண் பரிசோதனைகள் முக்கியம் ஆகும்.

 

இந்த வழிமுறைகள் அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றுவதன் மூலம் நமது கண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com