உப்பு என்பது நமது ஆரோக்கியமான உணவில் ஒரு மிகச் சிறிய, ஆனால் மிக முக்கியமான அங்கம் ஆகும். உடலின் அத்தியாவசிய உயிரியல் செயல்பாடுகளுக்கு உப்பு தேவைப்படுகிறது. நரம்பு மற்றும் தசைகளின் சரியான செயல்பாட்டிற்கும், உடல் நீரேற்றத்திற்கும், இரைப்பையில் அமிலங்களை உற்பத்தி செய்வதற்கும், செல்களின் வளர்சிதை மாற்றத்தை பராமரிப்பதற்கும் உப்பு அவசியம்.
மேலும் படிக்க: தினமும் ஒரு ஸ்பூன் நெய்யை இப்படி சாப்பிட்டால் 10 மடங்கு இளமையாக தெரிவீர்கள்
உலக சுகாதார நிறுவனம் (WHO), ஒரு ஆரோக்கியமான நபர் தினமும் சுமார் 5 கிராம் உப்பை உட்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வுகளின்படி, சராசரி இந்தியர் தினமும் சுமார் 8 கிராம் உப்பை உட்கொள்வதாக தெரிவிக்கிறது.
தொடர்ச்சியாக அதிக உப்பை உட்கொள்வது பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். அவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உயர் இரத்த அழுத்தம்: அதிக உப்பு, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, இதயத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
சிறுநீரக பாதிப்புகள்: இது சிறுநீரகங்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தி, சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.
நீர்தேக்கம் (Fluid retention): கை, கால்களில் வீக்கம் மற்றும் உடல் உப்புசத்திற்கு வழிவகுக்கும்.
இதய நோய்கள் மற்றும் பக்கவாதம்: இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இரைப்பை புற்றுநோய்: அதிக உப்பு இரைப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.
எலும்புப்புரை நோய் (Osteoporosis): எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்து, எலும்புப்புரை நோயை ஏற்படுத்தும்.
குறிப்பாக, ஏற்கனவே சிறுநீரகம் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக உப்பு அவர்களின் உடல்நல சிக்கல்களை மேலும் மோசமாக்கக்கூடும்.
மேலும் படிக்க: கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் கொய்யா இலை டீ; எப்படி தெரியுமா?
பெரும்பாலானோர் அதிக உப்பை உணவில் சேர்த்துக்கொள்கிறோம். உப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் சில குறிப்புகளையும் தற்போது காண்போம்.
எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம்: உணவிற்கு கூடுதல் சுவை கொடுக்க உப்பிற்கு பதிலாக எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல்: சிப்ஸ் மற்றும் இதர சிற்றுண்டிகள், ரெடி-டு-ஈட் உணவுகள் (Ready to eat) போன்றவற்றில் அதிக உப்பு சேர்க்கப்படுகிறது. அத்தகைய உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உப்பின் அளவைக் குறைக்கலாம்.
உணவு பொருட்கள் இருக்கும் பாக்கெட்டுகளை கவனிக்கவும்: நீங்கள் வாங்கும் பொருட்களில் எவ்வளவு உப்பு அல்லது சோடியம் உள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இது உப்பின் பயன்பாட்டை எங்கே குறைக்கலாம் என்பதை புரிந்துகொள்ள உதவும்.
வீட்டில் சமைப்பதை வழக்கமாக்குங்கள்: வீட்டில் சமைக்கும்போது, உப்பின் அளவை நாமே தீர்மானிக்க முடியும். மேலும், புதினா, கொத்தமல்லி போன்ற மூலிகைகளையும், மசாலாக்களையும் சேர்த்து சுவையை மேம்படுத்தலாம்.
மாற்று பொருட்களை பயன்படுத்துங்கள்: குறைந்த சோடியம் உள்ள சிற்றுண்டிகள் அல்லது உப்பு சேர்க்காத நட்ஸ் வகைகளை தேர்வு செய்யலாம்.
சுவையை சரிபார்க்க உப்பை பயன்படுத்த வேண்டாம்: குறிப்பாக சிறுநீரகம் மற்றும் இதய நோயாளிகள் உணவின் சுவையை சரிபார்க்க உப்பை பயன்படுத்த கூடாது. புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்றவற்றை சேர்த்து சுவையை கூட்டலாம்.
இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உப்பின் பயன்பாட்டை குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com