நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கும் வீட்டு தோட்டத்தில் காய்கறிகளை வளர்த்து அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அதற்கு போதுமான இடம் இல்லை என்று பலரும் கவலைப்படுகின்றனர். எனினும், உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் சிறிய இடத்தில் கூட சுரைக்காய் வளர்க்கலாம்.
மேலும் படிக்க: வீட்டில் கீரை வளர்ப்பது இனி ரொம்ப ஈஸி; இந்த வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதும்!
சரியான நடவு முறை, சூரிய ஒளி, நீர்ப்பாசனம் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு நுட்பங்களை பின்பற்றினால், உங்கள் சிறிய மாடி தோட்டத்திலும் ஆரோக்கியமான சுரைக்காயை பெற முடியும். உங்கள் மாடி அல்லது வீட்டுத் தோட்டத்தில் சுரைக்காயை சரியாக வளர்க்க உதவும் எளிய வழிமுறைகளை காணலாம்.
குறைந்தது 14 முதல் 18 அங்குல ஆழமும், அகலமும் கொண்ட தொட்டியை தேர்வு செய்யவும். தேவையற்ற நீர் வெளியேறவும், நீர் தேங்குவதை தவிர்க்கவும் வடிகால் துளைகள் இருப்பது அவசியம். நீர் எளிதில் வடியும் தன்மையுள்ள, மக்கிய உரங்கள் நிறைந்த மண் கலவையை இதற்கு பயன்படுத்தவும். மண்புழு உரம், சல்லடை மணல் அல்லது பெர்லைட் (Perlite) ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. இது போதுமான ஈரப்பதத்தை தக்கவைக்க, ஊட்டச்சத்து கிடைக்க வழிவகுக்கும்.
சுரைக்காய் விதைகளின் முளைப்பு திறனை அதிகரிக்கச் செய்ய, இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர், ஒரு தொட்டியில் 1 முதல் 2 அங்குல ஆழத்தில் 2 முதல் 3 விதைகளை விதைக்கவும். இதன் நாற்றுகள் வளர்ந்தவுடன், மிகவும் ஆரோக்கியமான நாற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற நாற்றுகளை நீக்கி விடவும். இது நாற்றுகள் நெருக்கமாவதை தடுக்கும். வெப்பமான சூழலில் 7 முதல் 14 நாட்களுக்குள் முளைப்பு விரைவாக இருக்கும். இந்த நேரத்தில், வலுவான நாற்றுகளை உறுதிப்படுத்த மண்ணுக்கு தொடர்ந்து நீர்ப்பாசனம் செய்யவும்.
மேலும் படிக்க: மாடித் தோட்டம் வைத்திருப்பவரா நீங்கள்? இந்த காய்கறிகளை இப்போதே விதைத்து குளிர் காலத்தில் அறுவடை செய்யலாம்
சுரைக்காய் செடி சரியாக வளர தினமும் 6 முதல் 8 மணி நேரம் நேரடி சூரிய ஒளி தேவை. கொடிகள் மேல்நோக்கி வளரவும், மாடித் தோட்டத்தில் இடத்தை சேமிக்கவும் பந்தல், மூங்கில் கம்புகள் அல்லது வலைகளை நிறுவ வேண்டும். இது காய்களை மண்ணில் படாமல் விலக்கி, பூஞ்சை தொற்றுகள் மற்றும் பூச்சி தாக்குதல் அபாயத்தை குறைக்கிறது. இதேபோல், அனைத்து பகுதிக்கும் சமமான சூரிய ஒளி, நல்ல காற்றோட்டத்தை அளித்து பராமரிப்பை எளிதாக்குகிறது.
பூக்கும் மற்றும் காய்க்கும் காலங்களில், மண்ணை ஈரமாக வைத்திருக்கும்படி, அடிக்கடி மற்றும் போதுமான அளவு நீரூற்றவும். மண்புழு உரம், மாட்டுச் சாணம் அல்லது கடல் பாசி திரவ உரம் போன்ற கரிம உரங்களை பயன்படுத்தி ஒவ்வொரு 2 முதல் 3 வாரங்களுக்கும் ஊட்டச்சத்துகளை வழங்க வேண்டும். போதுமான நீர் மற்றும் உரம், செழிப்பான இலைகள், தடிமனான தண்டுகள், பெரிய மற்றும் ஆரோக்கியமான காய்களை ஊக்குவிக்கிறது.
சுரைக்காய் 8 முதல் 12 அங்குல நீளத்தை அடைந்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். முன்கூட்டியே காய்களை பறிப்பது தொடர்ந்து காய்கள் உண்டாக ஊக்கமளிக்கும். செடிகளை தொடர்ந்து கவனித்து, பூச்சிகள் அல்லது பூஞ்சை தொற்றுகளை வேப்ப எண்ணெய் பயன்படுத்தி அகற்றவும்.
இந்த வழிமுறைகள் அனைத்தையும் சரியாக பின்பற்றினால் உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே சுரைக்காயை எளிதாக வளர்க்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com