குங்குமப்பூ, உலகின் மிகவும் விலையுயர்ந்த மசாலா பொருளாகும். அதன் தனித்துவமான சிவப்பு நிற இழை, நறுமணம் மற்றும் மருத்துவ பண்புகளுக்காக இது மிகவும் மதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தட்பவெப்பநிலையில் மட்டுமே பயிரிடப்பட்டாலும், குங்குமப்பூவை வீட்டிலேயே, சிறிய இடங்களான பால்கனி அல்லது ஜன்னல் ஓரங்களில் கூட எளிதாக வளர்க்க முடியும்.
சரியான முறையில் சில தொட்டிகள் மற்றும் நடவு நுட்பங்களை பயன்படுத்தி, சிறிது பொறுமையுடன் செயல்பட்டால் குங்குமப்பூவை அறுவடை செய்யலாம். அதற்கான எளிய குறிப்புகளை இந்தக் கட்டுரை வாயிலாக நாம் பார்க்கலாம்.
குங்குமப்பூ, இலையுதிர் காலத்தில் மட்டுமே பூக்கும். ஒவ்வொரு பூவும் மூன்று மகரந்த இழைகளை மட்டுமே உற்பத்தி செய்கிறது. மேலும், இதனை கையால் மட்டுமே அறுவடை செய்ய வேண்டும் என்பதால், இது மிகவும் உழைப்பு சார்ந்ததாகவும், அதிக விலை கொண்டதாகவும் உள்ளது.
இருப்பினும், வீட்டில் விளைவிக்கப்படும் ஆர்கானிக் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால், குங்குமப்பூவை வளர்ப்பது தோட்டக்கலை ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாகும். நீங்களே குங்குமப்பூவை வளர்ப்பதன் மூலம், அதிக விலை இல்லாமல் சுத்தமான குங்குமப்பூவை பெறலாம். மேலும், இது உங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு தனித்துவமான அம்சத்தையும் சேர்க்கிறது.
ஆரோக்கியமான கிழங்குகளைத் தேர்வு செய்யவும்:
குங்குமப்பூ, கிழங்குகளிலிருந்து வளர்கிறது. சிறந்த குங்குமப்பூவை பெறுவதற்கு நம்பகமான நர்சரி அல்லது தோட்டக்கலை விற்பனையாளரிடம் இருந்து ஆரோக்கியமான கிழங்குகளை தேர்ந்தெடுக்கவும். உறுதியான, குழி இல்லாத, அழுகாத கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும். பூஞ்சை, சேதம் அல்லது நோய் இல்லாத கிழங்குகள் வலுவான பூக்களையும், துடிப்பான குங்குமப்பூ இழைகளையும் உற்பத்தி செய்யும்.
சரியான நேரத்தில் நடவு செய்யவும்:
குங்குமப்பூ சாகுபடியில் நேரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவில், குங்குமப்பூ கிழங்குகளை கோடைக்காலத்தின் முடிவில் அல்லது இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில், அதாவது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடவு செய்ய வேண்டும். நடவு செய்த பிறகு, பூக்கள் பொதுவாக ஆறு முதல் எட்டு வாரங்களில், அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையில் பூக்கும். குளிர்ந்த வானிலை பூப்பதை ஊக்குவிக்கிறது. எனவே, முன்கூட்டியே நடவு செய்வது, கிழங்குகள் பூப்பதற்கு முன்பு வேர்களை வலுப்படுத்த போதுமான நேரத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க: இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... உங்க வீட்டு ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கும்!
சரியான தொட்டிகளை பயன்படுத்துங்கள்:
குங்குமப்பூ வளர்க்க உங்களுக்கு பெரிய நிலம் தேவையில்லை. தொட்டிகள், கொள்கலன்கள் ஆகியவை பயனுள்ளதாக இருக்கும். குறைந்தபட்சம் 6 அங்குல ஆழமுள்ள, அகலமான கொள்கலன்களை தேர்வு செய்யவும். ஒரு 12 அங்குல தொட்டியில் 8-10 கிழங்குகளை வசதியாக வைக்கலாம். மாடி தோட்டம் அல்லது பால்கனியில் வளர்க்க இவை பயனுள்ளதாக இருக்கும்.
மண்ணை தயார் செய்யும் முறை:
குங்குமப்பூவுக்கு அதிக நீர் தேங்கும் மண் சரியாக இருக்காது. எனவே, நன்கு வடிகட்டும் மண் மிகவும் அவசியம். இதற்கு சம அளவு தோட்ட மண், பெரிய மணல் மற்றும் மக்கிய உரம் ஆகியவற்றை கலக்கலாம். இந்த கலவையானது நீர் தேங்குவதை தடுத்து, கிழங்குகள் செழிக்க உதவும். அதிக வண்டல் கொண்ட மண்ணை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில், அது அதிக ஈரப்பதத்தை தக்கவைக்கும்.
சரியான இடைவெளியிலும், ஆழத்திலும் நடவு செய்ய வேண்டும்:
கிழங்குகளை நடவு செய்ய, 2-3 அங்குல ஆழத்தில் குழிகளை தோண்டவும். ஒவ்வொரு கிழங்கிற்கும் 2-3 அங்குல இடைவெளி விடவும். கிழங்குகளின் கூரான முனை மேல்நோக்கி இருக்குமாறு நடவும். நடவு செய்த பிறகு, மண்ணை மெதுவாக நனைய வைக்கவும். அதிகப்படியான நீர் கிழங்குகள் முளைப்பதற்கு முன்பே அழுகிப் போக வழிவகுக்கும்.
சூரிய ஒளி மற்றும் குறைந்த நீர் பாசனம்:
குங்குமப்பூ நன்கு வளர, தினமும் குறைந்தது 5-6 மணிநேரம் சூரிய ஒளி தேவை. தெற்கு நோக்கி உள்ள ஜன்னல் ஓரம், மாடி அல்லது பால்கனி போன்ற வெயில் படும் இடத்தை தேர்வு செய்யவும். நடவு செய்த பிறகு, குங்குமப்பூவுக்கு குறைந்தபட்ச நீர் பாசனமே போதும். மண்ணை தொட்டுப் பார்க்கும்போது காய்ந்திருந்தால் மட்டும் நீர் பாய்ச்சவும்.
கவனமாக அறுவடை செய்யுங்கள்:
நுண்ணிய ஊதா பூக்கள் பூக்கும்போது, அறுவடை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என அறிந்து கொள்ளலாம். இது பொதுவாக இலையுதிர்காலத்தின் மத்தியில் அல்லது இறுதியில் நிகழ்கிறது. பூக்கள் புதியதாக இருக்கும் அதிகாலையில் அறுவடை செய்வது சிறந்தது. ஒவ்வொரு பூவிலிருந்தும் மூன்று சிவப்பு மகரந்த இழைகளையும் கவனமாக, ஒரு இடுக்கி அல்லது உங்கள் விரல்களை பயன்படுத்தி அகற்றவும். அறுவடை செய்யப்பட்ட இழைகளை பல நாட்களுக்கு குளிர்ந்த, இருண்ட இடத்தில் உலர வைக்கவும். பிறகு காற்று புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.
அறுவடைக்கு பிறகு கிழங்குகளை பராமரித்தல்:
அறுவடைக்கு பிறகும், தாவரத்தின் பச்சை இலைகள் தொடர்ந்து வளரும். அடுத்த பருவத்திற்கு கிழங்குகள் ஆற்றலை சேமிக்க உதவும் என்பதால், இந்த இலைகளை இயற்கையாகவே உலர்ந்து வாட விடவும். சூடான பகுதிகளில் பூத்த பிறகு தொட்டிகளை ஒரு நிழலான பகுதிக்கு மாற்றி, குங்குமப்பூ விரும்பும் குளிர்ந்த சூழலை உருவாக்கலாம்.
குங்குமப்பூவை வீட்டில் வளர்ப்பது என்பது பலர் நினைப்பதை விட எளிதானது. சில தொட்டிகள், ஆரோக்கியமான கிழங்குகள் மற்றும் சரியான பராமரிப்புடன் செயல்பட்டால் எல்லோராலும் எளிதாக குங்குமப்பூவை வளர்க்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation