அதிகப்படியான சத்துகள் நிறைந்த உணவு வகைகளில் கீரைகளுக்கு எப்போதும் முதன்மையான இடம் இருக்கிறது. குறிப்பாக, வீட்டிலேயே கீரைகளை வளர்ப்பதன் மூலம் நம்மால் கூடுதல் நன்மைகளை பெற முடியும். இதற்கு உங்களுக்கு பெரிய பண்ணையோ, தோட்டமோ தேவையில்லை. ஒரு சிறிய தொட்டி அல்லது ஒரு கொள்கலன் போதுமானதாக இருக்கும். உங்கள் வீட்டின் பால்கனி, மொட்டை மாடி அல்லது ஜன்னல் ஓரங்களில் கூட எளிதாக கீரையை வளர்க்கலாம். இது மிக வேகமாக வளரும் தன்மை கொண்டது. விதைத்த 30 முதல் 40 நாட்களில் இலைகளை அறுவடை செய்யலாம்.
மேலும் படிக்க: வீட்டுத் தோட்டத்தில் குங்குமப்பூ வளர்ப்பு: சிறிய இடம் இருந்தால் போதும்; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
வீட்டில் வளர்க்கப்படும் கீரை, பல முறை அறுவடை செய்யக்கூடியது. இதனால் தினமும் ஆரோக்கியமான கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதன் எளிமையான வளர்ப்பு முறை, நகரவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக, ஆரோக்கியமான கீரையை பெறுவதற்கான எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குறைந்தது 6-8 அங்குல ஆழம் கொண்ட தொட்டியை தேர்வு செய்யவும். இது கீரையின் வேர்கள் பரவ போதுமான இடத்தை கொடுக்கும். சரியான மண் கலவை அவசியம். 70% தோட்ட மண், 20% மக்கிய மாட்டு சாணம் மற்றும் 10% ஆற்று மணல் என இருக்க வேண்டும். இந்த கலவை சத்துள்ளதாகவும், இலகுவாகவும் இருக்கும். மேலும், இது விரைவான விதை முளைப்புக்கும், ஆரோக்கியமான இலைகளுக்கும் உதவுகிறது.
மண்ணில் 1-1.5 அங்குல ஆழத்தில் சிறிய குழிகளை உருவாக்கவும். விதைகளை 2-3 அங்குல இடைவெளியில் வைக்கவும். பின், மெல்லிய மண் அடுக்கால் மூடி, லேசாக தண்ணீர் தெளிக்கவும். விதைகள் பொதுவாக 5 முதல் 7 நாட்களில் முளைக்கத் தொடங்கும்.
மேலும் படிக்க: மல்லிகை செடி பராமரிப்பு: அதிக பூக்கள் பூக்க வைக்க இந்த எலுமிச்சை உரம் போதும்!
கீரை மிதமான ஈரப்பதத்தில் வளரும் தாவரம். அதிக நீர் ஊற்றுவதை தவிர்க்கவும். அப்படி செய்தால், செடிகளை அழுகச் செய்யலாம். மண் காய்ந்திருப்பதை உணரும் போது மட்டும் நீர் ஊற்றவும். அவ்வப்போது செடிகளை சுற்றியுள்ள மண்ணை இலகுவாக்கி, களைகளை நீக்கவும்.
கீரைக்கு மிதமான சூரிய ஒளி போதுமானது. மாட்டு சாணம் அல்லது மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை இடலாம். ரசாயன உரங்களை தவிர்க்கவும். வேப்ப எண்ணெய் மூலம் செடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கலாம்.
விதைத்த 30 முதல் 40 நாட்களுக்கு பிறகு இலைகள் அறுவடைக்கு தயாராக இருக்கும். இலைகளை மட்டும் பறிக்கவும். வேர்கள் மற்றும் நடுப்பகுதியை விடவும். இது, அதே தொட்டியில் இருந்து பல வாரங்களுக்கு தொடர்ச்சியாக கீரை அறுவடை செய்ய உதவும்.
இந்த வழிமுறைகள் அனைத்தையும் சரியாக பின்பற்றி உங்கள் வீட்டிலேயே இயற்கையான முறையில் கீரையை வளர்த்து அறுவடை செய்யலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com