herzindagi
image

இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க... உங்க வீட்டு ரோஜா செடியில் பூக்கள் பூத்துக் குலுங்கும்!

ரோஜா செடி வளர்ப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மூன்று முக்கிய குறிப்புகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். செடியை பராமரிக்கும் முறை மற்றும் அதற்கான உரம் தொடர்பான விளக்கம் இந்த செய்திக் குறிப்பில் அளிக்கப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-08-17, 16:56 IST

இன்றைய நகரமயமாக்கல் சூழலில் பலருக்கு தங்கள் வீட்டில் ஒரு சிறிய வகையான செடியாவது வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதில் நிறைய பேருக்கு ரோஜா செடி வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் இருக்கும். ஆனால், தங்கள் வீட்டில் வளர்த்து வரும் ரோஜா செடியில் பூக்கள் அவ்வளவாக பூப்பதில்லை என்று பலரும் கூறுவதை கேட்டிருப்போம். அதன்படி, ரோஜா செடி வளர்ப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க: பாம்பு செடி வளர்த்தால் மன அழுத்தம் குறையுமாம்; நன்மைகளை கட்டாயம் தெரிஞ்சுகோங்க

 

செடியை நட்டு வைக்கும் முறை:

 

ரோஜா செடியை எந்த வகையான மண்ணில் நட்டு வைக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். அந்த வகையில், செம்மண்ணில் ரோஜா செடியை நட்டு வைத்தால், அதன் வளர்ச்சி சீராக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, 50 சதவீதம் செம்மண், மக்கிப் போன தேங்காய் நார் 25 சதவீதமும், மாட்டுத் தொழுவின் உரம் 25 சதவீதமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இவை மூன்றையும் ஒரு தொட்டியில் பாதி அளவு நிரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து, வாங்கி வந்த ரோஜா செடியை அதில் நட்டு வைத்த பின்னர், மீதமிருக்கும் மண் கலவை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். முக்கியமாக, செடியின் தண்டு பகுதி வரை மணல் கொண்டு நிரப்ப வேண்டும். இப்படி செய்தால் செடியின் வளர்ச்சியை தூண்டும் வகையில் அமையும். முன்னதாக, ரோஜா செடி நட்டு வைக்க பயன்படுத்தப்படும் தொட்டியின் அடிப்பகுதியில், சிறிது துவாரங்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். துவாரங்கள் இல்லையென்றால் சிறிய அளவிலான துவாரங்களை அதில் போட வேண்டும்.

Rose flower

 

ரோஜா செடி வளர்ச்சியை அதிகரிக்கும் முக்கிய உரம்:

 

ரோஜா செடிக்கு சரியான வகையில் உரம் போடுவது மிகவும் முக்கியமானது. இதற்காக 15 நாட்களுக்கு ஒரு முறை டை-அம்மோனியம் பாஸ்ஃபேட் (Di-Ammonia Phosphate) உரத்தை ரோஜா செடி நட்டு வைக்கப்பட்டிருக்கும் மண் கலவையில் தூவி விட வேண்டும். இதன் விலை சுமார் ரூ. 200 இருக்கும். இந்த உரத்தை போடுவதன் மூலம் ரோஜா செடியில் விரைவாகவே பூக்கள் பூக்கத் தொடங்கும். இது தவிர வீட்டில் இருக்கக் கூடிய பொருட்கள் கொண்டு இயற்கை உரமும் தயாரித்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: மாடித் தோட்டத்தில் ஊட்டி கேரட் திரட்சியாக வளர இதை பண்ணுங்க

 

வீட்டில் தயாரிக்கப்படும் இயற்கை உரம்:

 

இதற்காக, வெங்காய தோல், முட்டை ஓடு, அரிசி கழுவிய தண்ணீர், டீத்தூள், காய்கறி கழிவுகள் போன்றவற்றை தனியாக சேகரித்து வைக்க வேண்டும். இத்துடன் மீதமான இட்லி மாவு, தோசை மாவு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த உரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரங்களுக்கு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அந்த தண்ணீரில் ஏராளமான சத்துகளும், பாக்டீரியாக்களும் உருவாகி இருக்கும். இந்த தண்னீரை ரோஜா செடிக்கு உரமாக பயன்படுத்தலாம்.

Red rose

 

ரோஜா செடியின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி இன்றி அமையாதது ஆகும். இதற்கான இடத்தை முன்னரே தேர்ந்தெடுத்த பின்னர், ரோஜா செடியை வளர்க்கலாம். இவை அனைத்தையும் சரியாக பின்பற்றுவதன் மூலம் நம் வீட்டு தோட்டத்தில் ரோஜா செடியில் இருந்து பூக்கள் பூத்துக் குலுங்க தொடங்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com