இந்த மழைக்காலத்தில் வீட்டிலேயே கொத்தமல்லி வளர்ப்பது மிகவும் எளிது. மழை, குளிர்ந்த காலநிலை மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை கொத்தமல்லி செடி செழித்து வளர தேவையான சூழலை உருவாக்குகின்றன.
மேலும் படிக்க: வீட்டுத் தோட்டத்தில் குங்குமப்பூ வளர்ப்பு: சிறிய இடம் இருந்தால் போதும்; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
உங்களுக்கு ஒரு சின்ன பால்கனி அல்லது ஒரு ஜன்னல் பகுதி மட்டும் இருந்தாலும் போதும். எந்த பிரச்சனையும் இல்லாமல் கொத்தமல்லி சுலபமாக வளரும். இதற்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை என்றாலும், சில எளிய விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அதற்கான வழிமுறைகளை இப்போது காணலாம்.
விதைகளை சரியான முறையில் விதைக்க வேண்டும்:
முதலில், முழு கொத்தமல்லி விதைகளை எடுத்து, உள்ளங்கையில் வைத்து லேசாக நொறுக்க வேண்டும். பின்னர், முளைக்கும் திறனை அதிகரிக்க இந்த விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைக்கலாம். அதற்கடுத்து, வடிகால் துளைகள் உள்ள தொட்டிகளை இதற்காக பயன்படுத்தவும். விதைகளை சுமார் அரை இன்ச் ஆழத்தில் விதைக்க வேண்டும். இவற்றை ஒன்றுக்கொன்று 6-8 இன்ச் இடைவெளி விட்டுப் பரப்பவும். 7-10 நாட்களுக்குள், சிறிய முளைகள் வெளிவருவதை காணலாம். தொடர்ச்சியாக மல்லித்தழையை அறுவடை செய்ய, மழைக்காலம் முழுவதும் ஒவ்வொரு 2-3 வாரங்களுக்கும் புதிதாக விதைகளை விதைக்கலாம்.
சரியான மண்ணை தேர்வு செய்ய வேண்டும்:
கொத்தமல்லியின் வேர்கள் ஆழமற்றவை. எனவே, ஈரமான மண் இதற்கு சரியாக இருக்காது. தோட்ட மண், மண்புழு உரம், மற்றும் கோகோ பீட் அல்லது மணல் கலந்த இலகுவான, நீர் வடிதல் உள்ள மண் கலவையை பயன்படுத்தவும். கனமான களிமண் அல்லது பிசுபிசுப்பான மண்ணை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அது அதிக நீரை தேக்கி, வேர் அழுகலுக்கு வழிவகுக்கும்.
சூரிய ஒளியில் வைக்கும் முறை:
கொத்தமல்லியை நேரடி சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. எனவே, சற்று தாழ்வான பகுதிகளில் சுமார் 4 முதல் 6 மணி நேரம் சூரிய ஒளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, ஒரு ஜன்னல், பால்கனி போன்ற இடங்கள் இதற்கு ஏற்றதாக அமையும்.
மேலும் படிக்க: மல்லிகை செடி பராமரிப்பு: அதிக பூக்கள் பூக்க வைக்க இந்த எலுமிச்சை உரம் போதும்!
தண்ணீர் ஊற்றும் முறை:
மழைக்காலத்தில் உங்கள் கொத்தமல்லி செடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. மண் ஈரமாக இருக்க வேண்டும். ஆனால், தண்ணீர் தேங்கக் கூடாது. மண்ணின் மேல் பகுதி காய்ந்திருக்கும் போது மட்டுமே தண்ணீர் ஊற்றவும். பலத்த மழை பெய்யும்போது, தொட்டிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி அதிகப்படியான நீரிலிருந்து செடியை பாதுகாக்கலாம். ஸ்ப்ரே பாட்டில் பயன்படுத்தி வேர்களையோ அல்லது நாற்றுகளையோ பாதிக்காமல் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
அறுவடை செய்வதன் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கவும்:
உங்கள் மல்லித்தழை 3-4 இன்ச் உயரம் வளர்ந்ததும், அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். கத்தரிக்கோல் பயன்படுத்தி வெளிப்புற இலைகள் மற்றும் தண்டுகளை மட்டும் வெட்டுங்கள். ஆனால் நடுப்பகுதியை அப்படியே விட வேண்டும். ஒரு நேரத்தில், செடியின் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வெட்ட வேண்டாம். தொடர்ந்து அறுவடை செய்வது, செடியை அடர்த்தியாக வளர ஊக்குவிக்கும். இதனால் நீண்ட காலத்திற்கு புதிய இலைகளை பெற முடியும்.
செடியை சுத்தமாக பராமரிக்கவும்:
மழைக்காலம், செடியின் வளர்ச்சிக்கு உதவினாலும் பூஞ்சை நோய்கள் மற்றும் பூச்சிகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். உங்கள் செடியில் சில நாட்களுக்கு ஒருமுறை மஞ்சள் இலைகள் அல்லது சிறிய பூச்சிகள் இருக்கிறதா என சரிபார்க்கவும். பாதிக்கப்பட்ட இலைகளை நீக்கி, தொட்டியின் ஓரங்களை சுத்தமாக துடைத்து அந்த பகுதியை உலர வைக்கவும்.
இவை அனைத்தையும் சரியாக பின்பற்றுவதன் மூலம் உங்கள் வீட்டில் எளிமையாக கொத்தமல்லி செடியை வளர்த்து பயன்பெற முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation