
நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், குளிர்காலத்தின் போது சற்று பலவீனமடைய வாய்ப்புள்ளது. இதனால் சளி, காய்ச்சல், தொண்டை வலி மற்றும் வைரஸ் தொற்றுகள் எளிதில் நம்மை தாக்குகின்றன.
நாம் உண்ணும் உணவில் செய்யும் சிறிய மாற்றங்கள், இந்த குளிர்காலத்தில் நம்மை நோய்களிலிருந்து பாதுகாக்கும் கவசம் போன்று செயல்படும். நம் அன்றாட உணவில் சில எளிய பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கலாம். இந்தக் குளிர்காலத்தில் நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய டயட் டிப்ஸ்களை இதில் காண்போம்.
இயற்கை ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு நமக்கு உணவை வழங்குகிறது. குளிர்காலத்தில் விளையக்கூடிய பழங்களில் அந்த சீசனை சமாளிக்க தேவையான சத்துகள் நிறைந்துள்ளன. பப்பாளி, பேரிக்காய் மற்றும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. குறிப்பாக, பப்பாளியில் பப்பேன் (Papain) என்ற என்சைம் உள்ளது. இது செரிமானத்தை எளிதாக்குவதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. குளிர்காலத்தில் செரிமானம் மந்தமாவதை தடுக்க இது உதவும்.

மேலும் படிக்க: Immunity Boosting Fruits: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இந்த 6 பழங்களை அவசியம் சாப்பிடவும்
நமது நோய் எதிர்ப்பு சக்தியில் பெரும் பகுதி நம் குடலை சார்ந்து உள்ளது. குடல் ஆரோக்கியமாக இருந்தால், உடல் தானாகவே நோய்களை எதிர்த்து போராடும். தயிர், மோர் மற்றும் புளித்த உணவுகள் புரோபயாட்டிக் சத்துகளின் சிறந்த ஆதாரங்களாகும். இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. குளிர்காலத்தில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். குளிர்ந்த தயிரை அப்படியே சாப்பிடாமல், அதனை மோராக கடைந்து அதில் மிளகு, சீரகம் தாளித்து சாப்பிடுவது நல்லது. இது ஈரப்பதமான வானிலையில் வைரஸ்களை எதிர்த்து போராட உதவும்.
நம் சமையலறையில் இருக்கும் மசாலா பொருட்கள் சுவைக்காக மட்டுமல்ல, அவை சிறந்த மருத்துவ குணங்களையும் கொண்டவை. துளசி, இஞ்சி, மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றில் அதிகப்படியான நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதற்காக பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து அருந்தலாம். தேநீரில் இஞ்சி மற்றும் துளசி சேர்த்து குடிக்கலாம். இது தொண்டை வலியை போக்குவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்
குளிர்காலத்தில் தாகம் எடுக்காது என்பதால், பலரும் தண்ணீர் குடிப்பதை குறைத்து விடுவார்கள். இது மிகப்பெரிய தவறு. உடல் வறட்சி அடைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். நீரின் மூலம் பரவும் நோய்களை தடுக்க, எப்போதும் நன்கு காய்ச்சிய வடிகட்டிய நீரை குடிப்பதே சிறந்தது. சுத்திகரிக்கப்படாத தண்ணீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும். வெறும் தண்ணீராக குடிக்க பிடிக்கவில்லை என்றால் மூலிகை டீ, இளநீர் மற்றும் சூடான சூப் வகைகளை சேர்த்து கொள்ளலாம். இவை உடலை நீரேற்றமாக வைப்பதுடன், குளிருக்கு இதமாகவும் இருக்கும்.
குளிர்காலத்தில் சூடாக பஜ்ஜி, போண்டா சாப்பிட தோன்றும். ஆனால், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிக சர்க்கரை மற்றும் அதிக எண்ணெய் கலந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும். மேலும், இவை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் தன்மை கொண்டவை. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, இயற்கையான இனிப்புகளான பேரீச்சம்பழம் மற்றும் வெல்லம் பயன்படுத்தலாம். வெல்லம் உடலில் வெப்பத்தை அதிகரித்து, இரும்புச்சத்தையும் அளிக்கிறது.
குளிர்காலம் என்பது நோய்களுக்கான காலம் என்று கருதக் கூடாது. அது ஆரோக்கியமான உணவுகளை ரசித்து சாப்பிடுவதற்கான காலம். இந்த எளிய உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம், இந்தக் குளிர்காலத்தில் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com