herzindagi
image

Winter Immunity Drinks: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 இயற்கை பானங்கள்

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 இயற்கை பானங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவற்றை தொடர்ந்து அருந்துவதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
Editorial
Updated:- 2025-12-09, 08:17 IST

குளிர்காலம் தொடங்கி விட்டால் இதமான குளிருடன் சேர்த்து, சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற பருவகால நோய்களும் நம்மை தேடி வரும். இந்த காலக்கட்டத்தில் நம் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இயற்கை பானங்கள்:

 

வாழ்க்கை முறையில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலமும், இயற்கையான உணவு பொருட்களை சேர்ப்பதன் மூலமும் இந்த சீசனில் ஏற்படும் நோய் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். சரியான உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது போன்றவை முக்கியம் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் சில பானங்களை குடிப்பதன் மூலம் உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.

 

நோய் எதிர்ப்பு சக்தி:

 

நோய் எதிர்ப்பு சக்தி என்பது நம் உடலின் இயற்கையான பாதுகாப்பு அரண் ஆகும். இது பகல் மற்றும் இரவு என 24 மணி நேரமும் செயல்பட்டு, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது. நோய் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும் முன்பே, அவற்றை தடுத்து நம்மை பாதுகாக்கும் பணியை இது செய்கிறது. குளிர்காலம் உடலுக்கு சற்றே சவாலான காலம் என்பதால், இந்த பாதுகாப்பு அரணை வலுப்படுத்துவது மிக அவசியம். உங்கள் தினசரி உணவில், இயற்கையான நோய் எதிர்ப்பு பானங்களை சேர்ப்பது இதற்கு பெரிதும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 இயற்கை பானங்களை இதில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள் 

 

ஆற்றலை அதிகரிக்கும் மஞ்சள் பால்:

 

பாரம்பரியமாகவே நம் வீடுகளில் சளி, இருமலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்து மஞ்சள் பால். மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள், வீக்கத்தை குறைக்கும் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளை கொண்டுள்ளது.

Turmeric milk

 

  • இரவு தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது தொண்டை வலியை போக்கவும், வீக்கத்தை குறைக்கவும் உதவும்.
  • மஞ்சள் பாலில் உள்ள குர்குமினை உடல் எளிதாக உறிந்து கொள்வதற்கு, அதனுடன் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்க உதவும் சிறந்த வழியாகும்.

 

துளசி மற்றும் இஞ்சி தேநீர்:

 

ஆயுர்வேத மருத்துவத்தில் துளசி மற்றும் இஞ்சிக்கு தனி இடமுண்டு. இவை இரண்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

 

  • துளசி இலைகள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இஞ்சி செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.
  • குளிர்காலத்தில் ஏற்படும் சுவாச பிரச்சனைகள் மற்றும் சளியை விரட்ட, ஒரு கப் சூடான துளசி மற்றும் இஞ்சி தேநீர் குடித்தால் போதும். இது உங்கள் உடலின் பாதுகாப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

 மேலும் படிக்க: Immunity Boosting Fruits: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இந்த 6 பழங்களை அவசியம் சாப்பிடவும்

 

சத்து மிகுந்த நெல்லிக்காய் சாறு:

 

நெல்லிக்காய் வைட்டமின் சி சத்தின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுகிறது. இது குளிர்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.

 

  • இது உடலிலுள்ள நச்சுகளை நீக்கி, சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.
  • காலையில் வெறும் வயிற்றில் ஃப்ரெஷ்ஷான நெல்லிக்காய் சாறு குடிப்பது இரட்டிப்பு பலனை தரும். இதன் சுவைக்காக சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

 

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த வெந்நீர்:

 

இது மிகவும் எளிமையான, அதே சமயம் சக்திவாய்ந்த ஒரு பானமாகும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் தேனில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு (Antimicrobial) பண்புகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

Honey and lemon

 

  • இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
  • காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது, அந்த நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.

கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ்:

 

குளிர்காலத்தில் கிடைக்கும் ஃப்ரெஷ்ஷான காய்கறிகளை கொண்டு ஜூஸ் தயாரித்து குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கேரட் மற்றும் பீட்ரூட்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. இந்த ஜூஸில் உள்ள ஊட்டச்சத்துகள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும் உதவுகிறது. மேலும், இது சருமத்தை பொலிவாக்குவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

 

குளிர்காலம் உடலுக்கு சவாலானது என்றாலும், இந்த இயற்கை பானங்களை தொடர்ந்து அருந்துவதன் மூலம் நோய் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com