தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் 1993ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானது முதல் குட் பேட் அக்லி வரை 63 படங்களில் நடித்துள்ளார். 33 ஆண்டுகால திரைப்பயணத்தில் பல தோல்விகள், விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் அதற்கெல்லாம் மனம் தளராத அஜித்குமார் பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அந்த வகையில் அஜித்தின் சினிமா கேரியரையே புரட்டி போட்ட படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆசை
முதல் படமான அமராவதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தாலும் அதன் பின் அஜித் நடித்த படங்கள் எதுவும் சரியாக கவனம் ஈர்க்கவில்லை. அதன் பின் மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அஜித்துக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு அஜித்திற்கு ரசிகைகள் பட்டாளம் உருவானது. அன்றைய காலத்தில் இப்படம் ரூ 1.05 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
காதல் கோட்டை
காலங்கள் கடந்தாலும் சில காதல் படங்கள் நம் மனதில் நிலைத்திருக்கும். அப்படியொரு படம் தான் காதல் கோட்டை. 1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நான்கு படங்களில் காதல் கோட்டை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது. ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதல் என்ற கான்செப்ட் அன்றைய காலத்தில் அனைவருக்கும் புதிதாக இருந்தது. இந்த படம் சிறந்த தமிழ்ப் படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளையும் ஐந்து பிரிவுகளில் தமிழக அரசின் விருதுகளையும் வென்றது.
காதல் மன்னன்
காதல் கோட்டை படத்திற்கு பிறகு கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு என்று தொடர் தோல்வி படங்களை கொடுத்த அஜித்திற்கு தோள் கொடுத்த படம் சரண் இயக்கத்தில் 1998ல் வெளிவந்த காதல் மன்னன்.
வாலி
அஜித் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம் வாலி. அவர் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்த முதல் படமும் இதுதான். உருகி உருகி காதலித்து பொய் மேல் பொய் சொல்லி மாட்டிக் கொண்டு அசடு வழியும் தம்பியாகவும் , ஒரு வார்த்தை கூட பேசாமல் மொத்த வில்லத்தனத்தையும் காட்டும் அண்ணனாகவும் நடித்து அசத்தியிருப்பார் அஜித். இந்த படத்தில் அஜித்தின் பெர்ஃபாமன்ஸ் அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.
அமர்க்களம்
சாக்லேட் பாய் ஹீரோவாக நடித்து வந்த அஜித்தை முரட்டுத்தனமான ஆக்சன் ஹீரோவாக மாற்றியது 25வது படமான அமர்க்களம். காதல் மன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் - சரண் கூட்டணியில் உருவான இப்படம் அஜித்திற்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. அனைத்திற்கும் மேலாக அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் விதை போட்ட படம் அமர்க்களம்.
தீனா
தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்த அஜித் தானும் மாஸ் ஹீரோ என நிரூபித்த படம் தீனா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் 2001 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தீனா அந்த ஆண்டின் முதல் வெற்றி படமாக அமைந்தது. இநபடத்தில் இருந்து அஜித்தை செல்லமாக ‘தல’ என்று ரசிகர்கள் அழைக்க தொடங்கினர். அதே ஆண்டு வெளியான சிட்டிசன் படமும் அஜித்துக்கு வெற்றி படமாக அமைந்தது.
பில்லா
2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஒரு சில படங்களை தவிர தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த அஜித் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார். இந்நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் அஜித்தை மீண்டும் ஃபார்முக்கு கொண்டு வந்தது. ஏற்கனவே இந்தியில் அமிதாப் பச்சன் , தமிழில் ரஜினி நடித்த ஒரு கதையை எப்படி புதிதாக எடுக்க முடியும் என்று எல்லாரும் கேள்வி எழுப்பிய போது அஜித்தை வைத்து ஸ்டைலிஷ் டான் படத்தை வழங்கினார் விஷ்ணுவர்தன். இந்த படத்திற்கு பிறகு அஜித் - விஷ்ணுவர்தன் - யுவன் கூட்டணி இன்று வரை ரசிகர்கள் எதிர்பார்க்கும் கூட்டணியாக இருந்து வருகிறது.
மங்காத்தா
அஜித்திற்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மங்காத்தா திரைப்படம். பல ஹீரோக்கள் வெள்ளை முடியுடன் வில்லனாக நடிக்க தயங்கிய காலத்தில் துணிச்சலாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வில்லனாக நடித்தது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இன்று வரை பல அஜித் ரசிகர்களின் விருப்பமான படமாகவும் மங்காத்தா உள்ளது.
மேலும் படிக்க: ரூ.183 கோடி சொத்து! பணக்கார தமிழ் நடிகை யார் தெரியுமா?
வீரம்
நகரத்து ஹீரோவாக நடித்து வந்த அஜித் முதல் முறையாக கிராமத்தை சேர்ந்த ஹீரோவாக வீரம் படத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவா அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறினார். அதன் பின் தொடர்ச்சியாக வேதாளம், விவேகம், விசுவாசம் என அடுத்தடுத்து இவர்கள் கூட்டணியில் மூன்று படங்கள் வெளியாகின.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation