herzindagi
image

Hair Care Tips: பாரம்பரிய கூந்தல் பராமரிப்பு முறையை பயன்படுத்தி உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எளிய குறிப்புகள்

Hair Care Tips in Tamil: கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்த பாரம்பரிய முறைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவை முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-11-26, 14:37 IST

Hair Care Routine: இன்றைய பரபரப்பான உலகில் இரசாயனங்கள் நிறைந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், நீளமான, அடர்த்தியான, பளபளப்பான கூந்தலை நீண்ட காலத்திற்கு பெற வேண்டுமானால் பாரம்பரிய கூந்தல் பராமரிப்பு முறை பொருத்தமாக இருக்கும். நம்முடைய முன்னோர்கள் தலைமுடிக்கு கொடுத்த முக்கியத்துவம், அவர்கள் பயன்படுத்திய இயற்கை மூலிகைகள், இன்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாக இருக்கின்றன. தலைமுடியின் வேர்களை வலுப்படுத்தி, ஆரோக்கியமான வளர்ச்சியை தூண்டக்கூடிய, பாரம்பரிய கூந்தல் பராமரிப்பு முறைகளை இந்தப் பதிவில் காணலாம்.

முடிக்கு சிகைக்காய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

 

ஷாம்பூக்கள் கண்டறிவதற்கு முன்பாகவே, நாம் கூந்தல் மற்றும் உச்சந்தலையை சுத்தம் செய்வதற்கு பல ஆண்டுகளாக சிகைக்காயை பயன்படுத்தி வந்தோம். இவை தலைமுடியை மென்மையாக சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டன. இந்த மூலிகைகள், உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய்களை அகற்றாமல், மென்மையாகவும், ஆழமாகவும் சுத்தம் செய்கின்றன.

Shikakai powder for hair

 

  • உச்சந்தலையின் ஆரோக்கியம்: சிகைக்காய் மற்றும் பூந்திக்கொட்டை ஆகியவை பொடுகை குறைத்து, உச்சந்தலையின் ஒட்டுமொத்த பி.ஹெச் (pH) அளவை பராமரிக்க உதவுகின்றன. இது கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம் ஆகும். சிகைக்காய் ஒரு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. இது முடியை மென்மையாக பராமரிக்க உதவுகிறது.

 

  • ஷாம்பூ போன்ற தன்மை: பூந்திக்கொட்டை, லேசான நுரையை உருவாக்கக் கூடியது. இதனால், இரசாயன ஷாம்பூக்களை போலவே குளிக்கும் அனுபவத்தை கொடுக்கிறது. காலப்போக்கில், இது கூந்தலை வலுவாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இந்தக் கலவையுடன் சிறிது வெந்தயத்தை சேர்த்து பயன்படுத்தினால் முடிக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.

 

மருதாணி பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

 

மருதாணி என்பது இயற்கையான குளிர்ச்சியூட்டும் மூலிகை ஆகும். இது கூந்தலுக்கு ஆழமான கண்டிஷனிங் அளிப்பதுடன், இயற்கையான நிறமூட்டியாகவும் செயல்படுகிறது.

 

  • கூந்தலை வலுப்படுத்துதல்: மருதாணி, கூந்தலின் அடித்தண்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால், தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் கணிசமாக குறைகிறது. இது கூந்தலுக்கு ஒரு இயற்கையான செந்நிற பொலிவை கொடுக்கிறது. முற்றிலும் இயற்கையான நிறமூட்டி என்பதால், வேதியியல் சாயங்களால் ஏற்படும் பாதிப்புகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.

மேலும் படிக்க: Hair care tips: ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த குறிப்புகள்

 

  • கூடுதல் நன்மைகள்: மருதாணி பொடியுடன் தயிர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பயன்படுத்தும் போது, முடி ஆரோக்கியத்திற்கு தேவையான சிகிச்சையாக மாறுகிறது. இது பிளவுபட்ட கூந்தல் நுனிகளை சரி செய்வதற்கும், கூந்தலின் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

 

  • அந்த வகையில், வாரத்திற்கு ஒரு முறை மருதாணியை பயன்படுத்தலாம். மருதாணி கலந்த கலவையை தலைமுடியில் தடவி, சுமார் 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளித்து விட வேண்டும். மருதாணி இயற்கையாகவே கூந்தலின் அடர்த்தியை அதிகரித்து, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.

 

அரிசி தண்ணீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்:

 

அரிசி தண்ணீரை வெளிநாட்டவர் தங்கள் கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்துவதாக நாம் கருதுகிறோம். ஆனால், இதனை பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, தென்னிந்தியாவில் இது மிகவும் பிரபலமான கூந்தல் பராமரிப்பு முறையாகும்.

Rice water for hair

 

  • இனோசிட்டால் மற்றும் அமினோ அமிலங்கள்: இந்த அரிசி நீரில் இனோசிட்டால் (Inositol) மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இனோசிட்டால், கூந்தலுக்குள் ஊடுருவி, அதனை வலுப்படுத்துவதுடன் சேதமடைந்த முடியை சரி செய்ய உதவுகிறது.

 

  • கூந்தல் வளர்ச்சி: இந்த செயல்முறை கூந்தலின் வலிமையை மேம்படுத்துவதோடு, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், வெளிப்புற சேதங்களிலிருந்து கூந்தலை பாதுகாக்கிறது. அரிசியை வடித்த நீரை ஒரு நாள் புளிக்க வைத்து, பின்னர் அதை பயன்படுத்துவது தான் சரியான முறையாகும். இது வேர் முதல் நுனி வரை கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.

மேலும் படிக்க: Winter Skin Care Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தின் பொலிவை தக்கவைக்க உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக் இதோ

 

தேங்காய் எண்ணெய் மசாஜ்:

 

இது மிகவும் எளிமையான செயல்முறையாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், பல காலமாக இதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவிற்கு தேங்காய் எண்ணெய் மசாஜ் என்பது கூந்தல் பராமரிப்பில் ஒரு முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது.

 

  • பயன்படுத்தும் முறை: வாரத்திற்கு இரண்டு முறையாவது, தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி அதனை உச்சந்தலையில் மென்மையாக அழுத்தி மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் மேம்படும். இது முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு உதவும். இதன் பின்னர், சிகைக்காய் பயன்படுத்தி குளித்து விடலாம்.

 

மூலிகை நீர் பயன்பாடு:

 

சாதாரண தண்ணீரால் தலைக்கு குளிப்பதற்கு பதிலாக, வேம்பு போன்ற இயற்கை மூலிகைகள் கலந்த நீரை பயன்படுத்த தொடங்கலாம். இந்த மூலிகைகள், பல தலைமுறைகளாக கூந்தலை இயற்கையாகவே சுத்தப்படுத்தவும், கண்டிஷனிங் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

  • இயற்கை சுத்திகரிப்பு: இந்த மூலிகைகள் உச்சந்தலையை மென்மையாக சுத்தம் செய்கின்றன. இதில் உள்ள சத்துகள் உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய்களை அகற்றாமல், கூந்தலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தை அளிக்கின்றன.

 

  • பயன்படுத்தும் முறை: வேப்ப இலைகளை தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் நன்கு ஆறிய பின்னர், தலைக்கு குளித்ததும் இறுதியாக தலைமுடியை அலசுவதற்கு பயன்படுத்தலாம்.

 

இது போன்ற இயற்கையான செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் பாரம்பரிய முறைப்படி முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com