
Rice Water for Hair Growth: முடி உதிர்வு பிரச்சனை இன்று பலருக்கும் ஒரு மிகப்பெரும் கவலையாக மாறி விட்டது. மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, பருவநிலை மாற்றங்கள் என பல காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
முடி உதிர்வுக்கு நாம் பல விலையுயர்ந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள், சிகிச்சை முறைகள் என பலவற்றை நாடுகிறோம். ஆனால், மிகவும் ஆற்றல் மிகுந்த மற்றும் செலவில்லாத ஒரு தீர்வு உங்கள் வீட்டின் சமையலறையிலேயே இருக்கிறது. இதற்காக நீங்கள் அரிசி தண்ணீரை பயன்படுத்தலாம்.
அரிசியை சமைத்த பிறகு அல்லது ஊறவைத்த பிறகு மிஞ்சும் மாவுச்சத்து நிறைந்த திரவமே அரிசி தண்ணீர் ஆகும். இதனை ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையம் என்றும் கூறலாம். இதில் முடி வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.
இதில் காணப்படும் இனோசிட்டால் (Inositol) ஒரு வகை கார்போஹைட்ரேட் ஆகும். இது முடியின் ஒவ்வொரு இழையையும் உள்ளிருந்து பலப்படுத்த உதவுகிறது. மேலும், முடி உராய்வதை தடுத்து, முடி உதிர்வதை குறைக்கிறது. இந்த சத்து, நீங்கள் குளித்த பின்னரும் முடியின் மீது படர்ந்து ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ, உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

மேலும் படிக்க: Skin care tips: சரும பராமரிப்புக்கு உதவும் பீட்ரூட்; இனிமே தினமும் இப்படி யூஸ் பண்ணுங்க
இதனால் முடி வேர்கள் வலுவடையும். மேலும், இதில் காணப்படும் பி வைட்டமின்கள், முடி வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமைகின்றன. கூடுதலாக, இதில் உள்ள அன்டிஆக்சிடென்ட்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் சேதமடைந்த முடியை சீரமைக்க உதவுகின்றன. இதன் அமினோ அமிலங்கள், முடியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, வேர்களில் இருந்து ஊட்டமளிக்கின்றன. இந்தியா மட்டுமின்றி ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலும் அரிசி தண்ணீரை தங்கள் கூந்தல் பராமரிப்பில் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
அரிசி தண்ணீர் தயாரிப்பது மிகவும் எளிது. நீங்கள் சமைக்க பயன்படுத்தும் அரிசியிலிருந்து மீதமாகும் நீர் அல்லது அரிசியை ஊறவைத்த தண்ணீரிலிருந்து இதை எடுக்கலாம். அரிசியில் எந்த விதமான எண்ணெய் அல்லது சுவையூட்டிகளும் இல்லை என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
முதலில், அரை கப் சமைக்காத அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அரிசியில் உள்ள தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க ஒருமுறை நன்கு அலசி விடுங்கள். இவ்வாறு அலசிய அரிசியை 2 முதல் 3 கப் தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து, அந்தத் தண்ணீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் வடிகட்டி எடுக்கவும். இதுவே உடனடியாக பயன்படுத்தப்படும் அரிசி தண்ணீர் ஆகும்.

மேலும் படிக்க: ஆரோக்கியமான முறையில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க நீங்கள் அருந்த வேண்டிய 5 பானங்கள்
இது மட்டுமின்றி மற்றொரு முறையும் இருக்கிறது. வழக்கமாக அரிசி சமைப்பது போலவே, சிறிது கூடுதல் தண்ணீர் சேர்த்து சமைக்கவும். அரிசி வெந்த பிறகு, அதிலிருந்து மிஞ்சிய கூடுதல் நீரை வடித்து, அதை நன்கு ஆறவிடவும். இவ்வாறு ஆறிய நீரை ஒரு சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த அரிசி தண்ணீரை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
அரிசி தண்ணீரை உங்கள் கூந்தல் பராமரிப்பு முறையில் இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். அதன்படி, ஷாம்பூ கொண்டு குளித்த பின்னர், உச்சந்தலை மற்றும் கூந்தல் முழுவதும் அரிசி தண்ணீரை ஊற்றவும். பின்னர், உச்சந்தலையில் சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம். இதையடுத்து, அப்படியே 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்து, அதற்கடுத்து கூந்தலில் மீண்டும் சாதாரண தண்ணீர் ஊற்றி அலசி விடலாம். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றலாம்.
மற்றொரு செயல்முறையில், அரிசி தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். தலைக்கு குளித்த பின்னர், முடியில் ஈரப்பதம் இருக்கும் போது, இதனை ஸ்ப்ரே செய்யலாம். குறிப்பாக கூந்தல் முழுவதும் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இது ஒரு இயற்கையான கண்டிஷனர் போல செயல்பட்டு, முடியை நாள் முழுவதும் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
முடி உதிர்வை குறைப்பதுடன் மட்டுமல்லாமல், அரிசி தண்ணீர் உங்கள் கூந்தலுக்கு வேறு பல அற்புத நன்மைகளையும் வழங்குகிறது. அரிசி தண்ணீரில் உள்ள அமினோ அமிலங்கள் உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, முடி வேர்களை ஆழமாக பலப்படுத்துகின்றன. மேலும், கூந்தல் முனைகளில் ஏற்படும் பிளவை (Split ends) கணிசமாக குறைக்கிறது. அரிசி தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்கள் முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறுகிறது.
உங்களது உச்சந்தலை உணர்திறன் (Sensitive) வாய்ந்ததாக இருந்தால், அரிசி தண்ணீரை முழுமையாக பயன்படுத்துவதற்கு முன், சிறிய பகுதியில் தடவி பார்த்து (Patch Test) உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இதன் பின்னர், தொடர்ச்சியாக அரிசி தண்ணீரை பயன்படுத்தி வந்தால் சில வாரங்களிலேயே முடி உதிர்வு குறைந்து, கூந்தல் அடர்த்தியாவதை பார்க்கலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com