பொதுவாக கருவாடு குழம்பு செய்வதற்கு அனைவரும் வெயிலில் காய வைத்த உப்பு கருவாடு பயன்படுத்துவோம். ஆனால் நீங்கள் பட்டறை கருவாடு பற்றி கேள்விபட்டது உண்டா? இது பேப்பரில் சுருட்டி மண்ணுக்கு அடியில் புதைத்து பதப்படுத்தி தயாரிக்கப்படும் கருவாடாகும். சாதாரண கருவாட்டை விட பட்டறை கருவாடு சுவையானது. சில வகையான மீன்களில் மட்டுமே இந்த பட்டறை கருவாடு செய்ய முடியும். வார விடுமுறையில் அசைவ உணவிலேயே வித்தியாசமாக ருசிக்க வேண்டும் என விரும்புவோர் பட்டறை கருவாடு சமைத்து ருசிக்கலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.
பட்டறை கருவாடு செய்யத் தேவையானவை
- பட்டறை கருவாடு
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- புளி
- குழம்பு மிளகாய் தூள்
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- கடுகு
- சீரகம்
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- உப்பு
- தண்ணீர்
பட்டறை கருவாடு செய்முறை
- ஐந்து - ஆறு துண்டு பட்டறை கருவாடு எடுத்து அதை தண்ணீரில் கழுவுங்கள். அதன் பிறகு நல்ல தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- கடாயில் 100 மில்லி லிட்டர் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு அரை ஸ்பூன் கடுகு போடுங்கள்.
- கடுகு பொரிந்தவுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். அடுத்ததாக மூன்று பச்சை மிளகாயை நறுக்கி போடுங்கள்.
- கால் கிலோ சின்ன வெங்காயம் சேர்த்த பிறகு கொஞ்சம் உப்பு போட்டு வதக்க தொடங்கவும்.
- அடுத்ததாக நான்கு காய்ந்த மிளகாய், ரெண்டு பெரிய சைஸ் தக்காளியை நறுக்கி சேர்க்கவும்.
- அனைத்தையும் நன்றாக கலந்து வதக்கி கொண்டே இருங்கள். தக்காளி நன்றாக வதங்கினால் அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும்.
- இப்போது பட்டறை கருவாடு போட்டு எலுமிச்சை சைஸிற்கு புளி எடுத்து அதை தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள்.
- இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு ஐந்து ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து விடுங்கள்.
- பத்து நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள். இப்போது மூடியை திறந்தவுடன் கம கம வாசனையில் கருவாடு குழம்பு தயாராகி இருக்கும்.
- வெள்ளை சாதத்தில் ஒரு கரண்டி பட்டறை கருவாடு குழம்பு ஊற்றி முட்டை வைத்து சாப்பிடுங்கள். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ருசி இருக்கும்.
- செரிமானப் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு இரண்டு பூண்டு, கொஞ்சம் தட்டி போடுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். ஹெர் ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்க்கில் பின்தொடருங்கள் -https://www.facebook.com/HZTamil/
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation