நவீனத்துவத்தை நோக்கி நகரும் உலகில் மாதவிடாய் மற்றும் சுகாதாரம் குறித்து மக்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தக் காலத்திலும் பல இடங்களில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் தூய்மையற்றவர்களாக கருதப்படுகின்றனர். காலம் மாறிக்கொண்டே இருந்தாலும் பலருக்கு மாதவிடாய் குறித்து இன்னும் சந்தேகங்களும் பல தவறான கருத்துக்களும் நீடிக்க தான் செய்கிறது. அவற்றில் முக்கியமானது மாதவிலக்கு நாட்களில் தலைக்கு குளிக்கலாமா? கூடாதா?. மாதவிடாய் நாட்களில் தலைக்கு குளித்தால் என்ன ஆகும்? அறிவியல்பூர்வமான பதில்களை இங்கே ஆராய்வோம்.
மாதவிடாய் அசௌகரியங்கள்
மாதவிடாய் காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நடைபெறுகிறது. இதனால் அந்த பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் மாதவிடாய் காலத்தில் முதல் மூன்று நாட்களுக்கு அதிக இரத்த போக்கு ஏற்படும். இதனால் தான் நிறுவனங்களில் மாதவிலக்கின் போது பெண்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படுகிறது.
மாதவிடாய் கட்டுக்கதைகள்
இதுவே முந்தைய காலங்களில் மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும் என்பதற்காக வீட்டின் ஓர் அறையில் பெண்களை தனியாக இருக்க சொல்வார்கள். எந்த வேலையையும் செய்ய சொல்லி அவர்களை ஈடுபடுத்த மாட்டார்கள். மாதவிடாய் நாட்களில் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து இது நல்ல செயலாக இருந்தாலும் காலப்போக்கில் இது பெண்களை கட்டுப்படுத்தும் செயலாக மாறிவிட்டது. மாதவிலக்கு சமயத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றால் பாவம், சமையலறை பொருட்களை தொட்டால் தீட்டு என்று சொல்லும் அளவுக்கு கட்டு கதைகள் உருவாகின. மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசினாலே தவறாக கருதப்பட்டது.
நவீன கால மாதவிடாய்
நவீன காலத்தில் பெண்கள் மாதவிடாயை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்து வருகிறார்கள். அதனால் மாதவிடாய் என்று சொல்லி பெண்களை யாரும் இந்த காலத்தில் கட்டுப்படுத்துவதில்லை. மாதவிடாய் அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் ஒரு இயற்கையான விஷயம் தான். அந்த நேரத்தில் அவர்களுக்கான உதவிகளை செய்தால் போதும் என்ற மன முதிர்ச்சி மக்களிடையே வந்துவிட்டது. இது மக்களின் பார்வையில் பெண்களின் சுகாதாரம் குறித்த முன்னேற்றம் என்றாலும் மாதவிடாய் நாட்களில் தலைக்கு குளிக்கலாமா கூடாதா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.
பழங்கால நடைமுறை?
இன்றைய காலத்தில் வீடுகளில் குளியலறை இருப்பது போல் பழங்காலத்தில் வீடுகளில் குளியலறை இருக்காது. அதனால் பெண்கள் ஆறு அல்லது குளத்திற்கு சென்று குளிப்பது வழக்கமாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில், மாதவிலக்கு உள்ள பெண் ஆற்றிலோ அல்லது குளத்திலோ குளிக்கும் போது மாதவிடாய் இரத்தப்போக்கு நீரில் கலந்து அசுத்தமாகிவிடும் என்ற அச்சம் மக்களிடையே இருந்தது. இதனால் மாதவிலக்கு நாட்களில் பெண்கள் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.
மாதவிடாயின் போது தலைக்கு குளிக்கலாமா?
பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும். அப்போது தான் இரத்தப்போக்கு சீராக இருக்கும் மற்றும் தசைகள் தளர்வாக இருக்கும். உடல் சூடாக இருக்கும் போது தலைக்கு குளித்தால் தும்மல், மூக்கடைப்பு, சளி போன்ற தொந்தரவுகள் வரலாம் என்பதால் மாதவிலக்கு நேரத்தில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் மாதவிலக்கு காலங்களில் தலைக்கு குளித்தால் கருப்பை பிரச்சனை வரும் நம்புகின்றனர். ஆனால் மாதவிடாய் காலத்தில் தலைக்கு குளித்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் என்று எந்த உறுதியான அறிவியல் ஆதாரமும் இல்லை.
மேலும் படிக்க : மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியுடன் ஈஸ்ட் தொற்றும் இருந்தால் எளிதாக போக்க உதவும் வைத்தியம்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation