herzindagi
chithirai thiruvizha

Chithirai Thiruvizha 2024: உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கால அட்டவணை!

உலகப் புகழ்பெற்ற மாமதுரை சித்திரை பெருந்திருவிழாவின் கால அட்டவணை இங்கே உள்ளது. 12 நாள் திருவிழாவின் நாள், முகூர்த்த நேரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2024-04-10, 14:35 IST

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பாக நாளை வாஸ்து சாந்தியுடன் தொடங்கும் சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி வரை 13 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

மாமதுரை பெருந்திருவிழா 

மதுரை மாநகருக்கு கோவில் நகரம், தூங்கா நகரம், கூடல் நகரம் என பல்வேறு பாரம்பரிய பெயர்கள் உள்ளது. தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமான மதுரையின் மிகப்பெரிய அடையாளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலாகும். அதிலும் தென்மாவட்டங்களில் திருவிழா என்றாலே மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிகழ்வில் மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்த சித்திரை திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றால் மதுரை மாவட்டம் முழுவதும் கொடியேற்றம் நடந்ததாக மதுரை மக்கள் கருதுவார்கள். கொடியேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கு மதுரை மாவட்டம் முழுவதும் விழா கோலம் பூண்டு வெகு விமர்சையாக காட்சியளிக்கும்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். குறிப்பாக மாசி திருவிழா, ஐப்பசி திருவிழா என தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு திருவிழாக்கள் விசேஷமாக வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதில் மிக முக்கியமான சிகர திருவிழாவான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

chithirai thiruvizha

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு பங்குனி திங்கள் 30ம் நாள் ஏப்ரல் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 9:55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

கொடியேற்றம்

கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாகக்கூட்டியோர் வெங்கணையால்

மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் 

ஏறுகொண்டாய் சாந்தமீதென்று எம்பெருமான் அணிந்த

நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.

         -சம்பந்தர் தேவாரம்

 

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

chithirai thiruvizha

சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சித்திரை 6ம் நாள்-ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வெகு விமர்சையாக நடைபெறும். குறிப்பாக அன்று இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் விருச்சக லக்கனத்தில் அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் வைத்து பட்டாபிஷேகம் நடைபெறும். அப்போது அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சாற்றி ரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் கொடுக்கப்படும். அதாவது மீனாட்சி அம்மன் மதுரை மக்கள் பக்தர்கள் புடை சூழ பட்டத்து அரசியாக முடி சூட்டிக் கொண்டு பாரம்பரிய வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்த பின்பு சித்திரை மாதம் முதல் ஆவணி மாதம் வரை மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி தொடங்கும். அதனைத் தொடர்ந்து அன்று இரவு பட்டத்து அரசியாக நான்கு மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன் வலம் வருவார்.

பட்டாபிஷேகம்

செழியர்பிரான் திருமகளாய்க், கலைபயின்று,

 முடிபுனைந்து, செங்கோல் ஓச்சி, 

முழுதுஉலகும் சயம்கொண்டு, திறைகொண்டு, 

 நந்திகணம் முனைப்போர் சாய்த்துத், 

தொழுகணவற்கு அணிமணமா லிகைசூட்டித், 

 தன்மகுடம் சூட்டிச், செல்வம் 

தழைவுஉறுதன் அரசுஅளித்த பெண்ணரசி 

 அடிக்கமலம் தலைமேல் வைப்பாம். 

                                             -பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம்

 

திக்கு விஜயம்

 

சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவான திக்கு விஜயம் சித்திரை மாதம் ஏழாம் நாள் ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 7:00 மணிக்கு நடைபெறும். அதனை தொடர்ந்து நான்கு மாசி வீதிகளிலும் அம்மன் மரவர்ணச் சப்பரத்தில் எழுந்தருள்வார். அதனை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு திருவிதி உலா நிறைவுற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு திரும்புவார். மேலும் மாலை 6.00 மணி அளவில் மீனாட்சியம்மன் மீண்டும் இந்திர விமானத்தில் நான்கு மாசி வீதிகளில் வளம் வருவார்.திரு வீதி உலா நிறைவு பெற்று இரவு 11:30 மணிக்கு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்து சேர்வார்.

திக்கு விஜயம்

கயபதி ஆதி வடபுலக் காவல் வேந்தர் 

புயவலி அடங்க வென்று, புழைக்கைமான் புரவி மான்தேர் 

பயல்மதி நுதல்வேல் உண்கண் பாவையர் ஆய மோடு 

நயம்மலி திறையும் கொண்டு, திசையின்மேல் நாட்டம் வைத்தாள்.

 

இவ்வாறு மற்றைத் திசைகாவலர் யாரையும் போய்த் 

தெவ்ஆண்மை சிந்தச் செருச்செய்து, திறமையும் கைக்கொண்டு 

அவ்வாறு வெல்வாள் எனமூன்றுஅரண் அட்ட மேருக் 

கைவார் சிலையான் கயிலைக்கிரி நோக்கிச் செல்வாள். 

                                                                                                                   -பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம்

 

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

chithirai thiruvizha

சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு மேற்கு ஆடி வீதியில் உள்ள பிரம்மாண்ட திருக்கல்யாண மண்டபத்தில் சித்திரை எட்டாம் நாள் ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறும். 

அப்போது அப்பன் சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிப்பார் அதனைத் தொடர்ந்து அம்மணம் சுவாமியும் திருமண கோலத்தில் மீனாட்சி அம்மன் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இந்த நிகழ்வின் போது திருக்கல்யாணத்தை பார்க்க வந்த பின் பக்தர்கள் அனைவரும் தங்களின் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்ளும் நிகழ்வும் நடைபெறும். திருக்கல்யாணத்தை நேரில் பார்க்க வர முடியாத பக்தர்கள் அவர்களது வீட்டிலேயே அந்த மங்கள நேரத்தில் திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வார்கள்.

மீனாட்சி திருத்தேரோட்டம்

chithirai thiruvizha

சித்திரை திருவிழாவின் பதினொன்றாம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் சித்திரை 9ஆம் நாள் தேதி ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள தேர்முட்டி பகுதியில் அதிகாலை 5.15 மணிமுதல் 5.40 மணிக்கு மேஷலக்னத்தில் நடைபெறும். அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு மீனாட்சி திருத்தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படும்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்

chithirai thiruvizha

சித்திரைத் திருவிழாவின் இறுதி நாளான ஏப்ரல் 23ஆம் தேதி சித்திரை திருவிழாவின் உச்சநிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு காலை  5.51 மணி முதல் 6.10 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடமிட்டு கோவிந்தா கோஷம் முழங்க சுந்தர்ராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெறும். இந்த நிகழ்வின்போது மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் ஒன்று கூடி கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகரை வணங்கி செல்வார்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com