herzindagi
image

உஷார் மக்களே: நாய்க்கடியால் பரவும் ரேபிஸ்; அறிகுறிகளும், தீர்வுகளும் இதோ!

நாய்க்கடியால் பரவும் ரேபிஸ் நோய் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இந்த நோயில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
Editorial
Updated:- 2025-09-11, 13:31 IST

தற்போதைய சூழலில் நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, ரேபிஸ் நோயின் அறிகுறிகள் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இந்தக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க: நாய்களுடன் அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கு காசநோய் தாக்குமா?

 

ரேபிஸ் நோயின் தாக்கம்:

 

இந்த நோய் முக்கியமாக வெறிபிடித்த நாய்களின் உமிழ்நீர் மூலம் பரவுகிறது. இந்தியாவில் 97% ரேபிஸ் பாதிப்புகளுக்கு தெருநாய்கள் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. வெறிபிடித்த நாய் கடிக்கும் போது அதன் உமிழ்நீரில் உள்ள வைரஸ், நரம்புகள் வழியாக மூளைக்கு சென்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

 

நாய்கள் மட்டுமின்றி, நரிகள், வெளவால்கள், குரங்குகள் போன்ற விலங்குகளும் ரேபிஸ் நோயை பரப்பலாம். ஆனால், இது மிகவும் அரிது. இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமான தெருநாய்களும், ஆண்டுக்கு 1.7 கோடி நாய்க்கடிகளும் ஏற்படுவதால் ரேபிஸ் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. குறிப்பாக, நாய்க்கடியில் பாதிக்கப்படும் 60% பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே.

Stray dog

 

இந்த நோயினால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் திடீரென கோபப்படுவார்கள், கத்துவார்கள், தண்ணீருக்கு பயப்படுவார்கள். இது போன்ற பல காணொளிகளை சமூக வலைதளங்களில் நாம் பார்த்திருக்கிறோம். சிலருக்கு தசை பலவீனம் படிப்படியாக அதிகரித்து, உடல் முழுவதும் பக்கவாதம் ஏற்படும். சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இவை அனைத்துமே கோமா நிலைக்கு வழிவகுத்து மரணத்தை ஏற்படுத்தக் கூடும்.

மேலும் படிக்க: Urinary Incontinence: பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சிறுநீர் கசிவை சரிசெய்யும் உடற்பயிற்சிகள்

 

ரேபிஸ் பரவும் விதம்:

 

நோய்த் தொற்றுள்ள வெறிநாய் கடிக்கும் போது அதன் உமிழ்நீர், காயம் வழியாக உடலுக்குள் நுழைவது தான் இந்த நோய் பரவுவதற்கான முக்கிய காரணம். தடுப்பூசி போடப்படாத தெருநாய்கள் மற்ற நோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதால், அவற்றுக்கு இந்த நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம். இந்நோய் தாக்கிய நாய்கள் ஆக்ரோஷமாகவும், வாயில் நுரை தள்ளியபடியும் காணப்படும். இதுவே ரேபிஸ் நாயின் முக்கிய அறிகுறியாகும். விலங்குகளின் உமிழ்நீர் காயம் ஏற்பட்ட சருமத்தில் பட்டால் மட்டுமே இது பரவும்.

Street dogs

 

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் பயப்பட தேவையில்லை. உங்கள் நாய் முறையாக தடுப்பூசி போடப்பட்டு, சுத்தமாக பராமரிக்கப்பட்டால், அதனால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால், தெருநாய்களுடன் அது பழகுவது ஆபத்தானது.

 

ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள்:

 

நாய் கடித்த பிறகு 1 முதல் 3 மாதங்களுக்குள் ரேபிஸின் அறிகுறிகள் மெதுவாக தோன்றும். முதலில் காய்ச்சல், சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும். பின்னர் கடுமையான பாதிப்பு இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சத்தமிடுவார்கள். மேலும், தண்ணீர் குடிக்க முடியாமல் திணறுவார்கள். இது தவிர, படிப்படியாக பலவீனம் அதிகரித்து உடல் செயலிழக்கும். இரண்டு வகைகளுமே சுவாச கோளாறுகளை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும்.

தடுப்பதற்கான வழிமுறைகள்:

 

உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்தால் ரேபிஸ் தொற்றை 100% தடுக்க முடியும். கடிபட்ட இடத்தை சோப்பு மற்றும் வெந்நீர் கொண்டு 15 நிமிடங்களுக்கு கழுவ வேண்டும். இது உமிழ்நீரை அகற்றி வைரஸ் பரவலை குறைக்கும். மேலும், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கிறது. மருத்துவர் அறிவுரைப்படி 14 நாட்களுக்குள் நான்கு தவணை தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். இது வைரஸ் மூளையை அடைவதற்கு முன் அதை தடுத்து விடும்.

 

செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் அவற்றுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஆக்ரோஷமான அல்லது வாயில் நுரை தள்ளும் தெருநாய்கள் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com