குழந்தை பராமரிப்பு என்பது எளிதான செயலல்ல, அதிக பொறுப்புடன் தாய்மார்கள் செய்ய வேண்டிய கடினமான ஒரு பணியாகும். குறிப்பாக குழந்தைகளின் சருமப் பராமரிப்புக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானதாக இருப்பதால், மசாஜ் செய்யும்போதோ, எண்ணெய் தடவும்போதோ அல்லது இயற்கைப் பவுடர்கள் பயன்படுத்தும்போதும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிய பிறகு டால்கம் பவுடர் பூசுவார்கள். இதன் மூலம் குழந்தையின் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வரிசையில் குழந்தைக்கு பவுடர் பயன்படுத்தவது நல்லதா என்று பார்க்கலாம்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடலில் எப்போதும் இயற்கையான பால் வாசனை இருக்கும். இதனால் தான் பெற்றோர்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிய பிறகு பேபி பவுடர் பூசுவது வழக்கமாக உள்ளது. ஆனால், பேபி பவுடரில் மெக்னீசியம், சிலிக்கான் போன்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன. இவை சருமத்தின் ஈரப்பதத்தை முற்றிலும் உறிந்து வற்றச்செய்து விடும். எனவே, எவ்வளவு விலை உயர்ந்த பவுடராக இருந்தாலும், குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது சரியல்ல.
குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு பேபி பவுடர் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது சருமத்தின் துளைகளை அடைத்து, சிறிய கொப்புளங்கள் மற்றும் பருக்களை உருவாக்கும். சில சமயங்களில் தோல் ஒவ்வாமை விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். இதனால்தான் குழந்தை மருத்துவர்கள் குழந்தைகளுக்கு பேபி பவுடர் பூச வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
சில பெற்றோர்கள் குழந்தைக்கு டயப்பர் காரணமாக ஏற்படும் சரும எரிச்சலுக்கு பவுடர் பூசுவது வழக்கம். ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம். டயப்பர் காரணமாக ஏற்படும் புண்களைத் தடுக்க, குழந்தை மலம் கழித்தவுடன் நன்றாகக் கழுவி, மென்மையான துணியால் உலர்த்த வேண்டும். உடனடியாக டயப்பர் அல்லது ஆடையை அணிவிக்காமல், சற்று நேரம் காற்றில் விட்டுவிடுவது நல்லது.
குழந்தைகளின் சருமம் மிகவும் உணர்திறன் கொண்டது. டால்கம் பவுடரில் உள்ள நுண்ணிய துகள்கள் குழந்தைகளின் மூச்சுக்குழாய்களில் சென்று மூச்சு திணறல் ஏற்படுத்தலாம். இந்தத் துகள்கள் நுரையீரலுக்குள் நுழைந்து சுவாசப் பிரச்சினைகளை உருவாக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும், இது சருமத் துளைகளை அடைத்து, வெப்பக் கசிவுகள் மற்றும் தோல் நோய்களுக்கு வழிவகுக்கும்.
குழந்தையின் சருமத்திற்கு டால்கம் இல்லாத பவுடர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தேவைப்பட்டால், டால்கம் இல்லாத இயற்கைப் பவுடர்களைக் குறைந்த அளவில் பயன்படுத்தலாம். அதே போல டயப்பர் ரேஷ்களைத் தடுக்க, சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். குழந்தையின் சருமத்தை அடிக்கடி சுத்தம் செய்து, நன்றாக உலர வைக்க வேண்டும்.
குழந்தையின் சருமத்தை இயற்கையாகப் பராமரிக்க, குழந்தையின் வியர்வையை மென்மையான துணியால் துடைப்பது, தேங்காய் எண்ணெய் அல்லது மருத்துவர் பரிந்துரைத்த மாயிச்சரைசர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இவை உங்கள் குழந்தையின் சருமத்தை ஈரப்பதமாக வைத்து, எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் பாதுகாப்பாக வைக்க உதவும். குழந்தையின் சருமத்தில் ஏதேனும் கொப்புளங்கள் அல்லது எரிச்சல் தென்பட்டால், உடனடியாக குழந்தை மருத்துவரை அணுக வேண்டும்.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com