herzindagi
image

கைக்குழந்தை ஓயாமல் அழுவது ஏன்? பசி மட்டுமல்ல வேறு சில காரணங்களும் இருக்கு!

பசி எடுத்தால் மட்டுமே குழந்தை அழும் என்று பலரும் நினைப்பது தவறு. பச்சிளம் குழந்தையின் ஒவ்வொரு அழுகையும் ஒவ்வொரு காரணம் கொண்டிருக்கும். 
Editorial
Updated:- 2025-06-30, 22:04 IST

குழந்தை வளர்ப்பில் கைக்குழந்தையைக் கவனிப்பது ஒவ்வொரு தாய்க்கும் ஒரு சவாலான பணியாகும். குறிப்பாக ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அடிக்கடி அழும்போது, அதன் காரணம் புரியாமல் பெரும்பாலான தாய்மார்கள் குழப்பமடைகிறார்கள். குழந்தைகளுக்கு அழுகை என்பது ஒரு வகையான தொடர்பு மொழியாகும். இது தாயின் கவனத்தை ஈர்க்க அவர்கள் பயன்படுத்தும் முதன்மை வழி. பசி எடுத்தால் மட்டுமே குழந்தை அழுகும் என்று பலரும் நினைப்பது தவறு. பச்சிளம் குழந்தையின் ஒவ்வொரு அழுகையும் ஒவ்வொரு காரணம் கொண்டிருக்கும். அந்த வரிசையில் குழந்தையின் அழுகை காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து இங்கு பார்க்கலாம்.

அழுகையின் இயல்பான காரணங்கள்:


குழந்தைகள் பசி, தாகம், தனிமை அல்லது களைப்பு போன்ற சாதாரண காரணங்களால் தினசரி சராசரியாக ஒரு மணி நேரம் வரை அழுவது இயல்பானது. ஆனால் இந்த நேரம் அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால், அதில் ஏதேனும் சிக்கல் இருக்கலாம் என்பதை தாய்மார்கள் உணர வேண்டும்.

baby cry

பசியின் அறிகுறிகள்:


பெரும்பாலான தாய்மார்கள் குழந்தையின் அழுகைக்கு பசியை காரணமாக கருதுகிறார்கள். இது பெரும்பாலும் உண்மையாக இருந்தாலும், பிற காரணங்களும் இருக்கலாம். குழந்தை பசியால் அழுகிறதா என்பதை சோதிக்க, உங்கள் விரலை குழந்தையின் வாயில் வைக்கவும். குழந்தை விரலை சப்பத் தொடங்கினால், அது பசியின் அறிகுறியாகும். இதுவே குழந்தை பால் குடித்த இரண்டு மணி நேரத்திற்குள் அழுதால், அது வேறு காரணத்தால் இருக்கலாம்.

தாகம் மற்றும் ஈரம்:


உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு உணவு கெட்டியாக இருந்தால் அடிக்கடி தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழலாம். சிறிது தண்ணீர் கொடுத்தால் அழுகை நின்றுவிடும். மேலும், சிறுநீர் அல்லது மலம் கழித்த பிறகு ஈரமான ஆடைகள் காரணமாகவும் குழந்தைகள் அழுவார்கள். இது இரவு நேரங்களில் அடிக்கடி நடக்கும்.

crying baby

ஆடைகளால் ஏற்படும் பிரச்சனைகள்:


கனமான, இறுக்கமான அல்லது உறுத்தும் ஆடைகள், கால் கொலுசுகள், கழுத்து செயின் போன்றவை குழந்தையை அழ வைக்கலாம். சில நேரங்களில் டயபர்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தி தோல் பிரச்சினைகளை உண்டாக்கலாம். இதுவும் குழந்தையின் அழுகைக்கு ஒரு காரணமாகும்.


பூச்சி கடி மற்றும் ஒவ்வாமை:


எறும்பு, கொசு அல்லது பிற பூச்சிகள் கடித்தால் குழந்தை அழலாம். புட்டிப்பாலுடன் சர்க்கரை கலந்து கொடுக்கும்போது, வாய் ஓரத்தில் இருக்கும் சர்க்கரைக்காக எறும்புகள் வந்து கடிக்கலாம். இது தோல் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க: உங்கள் குழந்தைக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை கொடுக்காதீங்க

வயிற்று வலி மற்றும் காது வலி:


குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படலாம். குழந்தை தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அது வயிற்று வலியின் அறிகுறியாகும். அதிக பால் அல்லது உணவு கொடுப்பதால் வயிறு உப்பி அழுகை ஏற்படலாம். குழந்தையை பால் கொடுத்த பிறகு தோளில் சாய்த்து முதுகில் தட்டிக் கொடுப்பது காற்றை வெளியேற்ற உதவும். காது வலி இருந்தால், காதை தொட்டால் குழந்தை அதிகமாக அழும். காதில் சீழ் சேர்ந்தால் வலி அதிகரிக்கும்.


ஆரோக்கிய பிரச்சனைகள்:


சளி, ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை குழந்தையின் அழுகைக்கு காரணமாகலாம். இதுபோன்ற சமயங்களில் குழந்தை பால் குடிக்க மறுக்கலாம். வயிற்றுப்போக்கு இருந்தால் உப்பு-சர்க்கரை கரைசல் கொடுக்கலாம். எனவே குழந்தைகள் அழும்போது என்ன காரணம், எதற்கு அழுகிறார்கள் என்று தாய்மார்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com