herzindagi
image

பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் ஏன் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும் தெரியுமா?

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், தாய் மற்றும் சேய்க்கும் இடையிலான உறவை அதிகப்படுத்த வேண்டும் என்றால் கட்டாயம் குழந்தைப் பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுக்கக்கூடாது என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  
Editorial
Updated:- 2025-11-21, 10:59 IST

குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் கிடைக்கும் ஜீவநதி தாய்ப்பால். பத்து மாதங்கள் சுமந்துப் பெற்றெடுத்த தன் குழந்தைகளின் பசியைப் போக்குவதோடு மட்டுமின்றி, அன்பு, பாசம், அரவணைப்பு, கருணை என அவர்களுக்கு உயிரூட்டும் இயற்கையின் மகத்தான கொடையாக உள்ளது தாய்ப்பால். இன்றைய சூழலில் கலப்படம் இல்லாத உணவுகளில் ஒன்றாக உள்ள தாய்ப்பாலை ஏன் குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். ஒருவேளை கொடுக்கத் தவறினால் என்னென்ன? பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே.


தாய்ப்பாலும் குழந்தை ஆரோக்கியமும்:

குழந்தைப் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மார்பை முட்டி குழந்தைகள் பாலைக் குடிக்கும் போது தாய் மற்றும் சேய்க்கு இடையேயான பாசம் அதிகரிப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். எனவே தான் குழந்தைகளைப் பிறந்தவுடன் தாயின் அரவணைப்பில் வைக்க வேண்டும் என்பார்கள்.

மேலும் படிக்க: சவால்களைத் தாண்டி குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? பெற்றோர்கள் இதை மட்டும் செய்யுங்க!

மூளை வளர்ச்சிக்கு உதவும் தாய்ப்பால்:

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய புரதமான லாக்டால்புமின் தாய்ப்பாலில் உள்ளது. எனவே குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், மூளை வளர்ச்சியையும் சீராக வைத்திருக்கவும் தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும். தாய்பாலைக் குடித்து வளரக்கூடிய குழந்தைகளின் அறிவாற்றல் மற்ற குழந்தைகளை விட அறிவாற்றலுடன் செயல்படுவார்கள். இதோடு தாயின் மார்போடு அரவணைத்து குழந்தைகள் பால் குடிக்கும் போது குழந்தையின் நாக்கு, வாய் போன்றவை அசைந்து வேலை செய்வதால் உடல் சுறுசுறுப்புடன் இருக்கவும் உதவுகிறது. அதுவே தாய்ப்பால் இல்லையென்று புட்டிப்பால் அல்லது பார்முலா பால் கொடுக்கும் போது குழந்தைகளின் அசைவு திறன் குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். எனவே எக்காரணம் கொண்டும் குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாத காலங்களுக்கத் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தவித உணவுப்பொருள்களையும் குழந்தைளுக்குக் கொடுக்கக்கூடாது.

தாய்ப்பால் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:

தாய்ப்பாலை முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தைக் கொடுக்காமல் இருந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும். எவ்வித பருவ காலங்களையும் சமாளிக்க முடியாமலும் அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். தாய்க்கு மற்றும் குழந்தைகளுக்கு இடையே பிணைப்பு குறையக்கூடும். எனவே எவ்வித இடையூறும் வந்தாலும் கட்டாயம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒருவேளை தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ளது என மாட்டுப்பால் கொடுக்கும் போது அவற்றில் உள்ள உப்புச்சத்து மற்றும் ஸ்டார்ச் போன்ற பண்புகளால் குழந்தைகளின் சிறிய சிறுநீரகம் பாதிக்கப்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: குழந்தைகளிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்;  பெற்றோர்கள் கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க!

தாய்ப்பால் சுரக்க பெண்கள் செய்ய வேண்டியது?

இன்றைக்கு புதிதாக குழந்தைப் பெற்ற தாய்மார்கள் சொல்லக்கூடிய ஒரு பிரச்சனை “எனக்கு தாய்ப்பால் வரவில்லை என்றும் நான் என்ன செய்வேன்” என்பதாக உள்ளது. முதல் குழந்தையாக இருந்தாலும் இரண்டாவது குழந்தையாக இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பின்றி பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இது முற்றிலும் தவறு. பொதுவாகவே தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி வரை தாய்ப்பாலை உற்பத்தி செய்யக்கூடிய திறன் உள்ளது. ஒருவேளை குழந்தைப் பிறந்த முதல் வாரத்தில் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருந்தால், குழந்தைப் பிறந்தவுடன் பூண்டு பால், கருவாடு, பூண்டு குழம்பு, நாட்டுக்கோழி, சுவரொட்டி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்


குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு இடையேயான அன்பான உறவை வளர்க்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் தாய்ப்பால் பேருதவியாக உள்ளது. குழந்தைகள் தங்களது அம்மாவின் மார்போடு சாய்ந்து பாலைக் குடிக்கும் போது உலகில் எந்த பிரச்சனையும் சமாளித்து விட முடியும் திறன் உள்ளது எனவும், தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் உணரச் செய்கிறது. எனவே கட்டாயம் குழந்தைப் பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குக் கட்டாயம் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் தரக்கூடாத என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com