பாரத நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தென் இந்தியாவை சேர்ந்த பல பெண்களின் பங்களிப்பு இருந்துள்ளது. ஆங்கிலேயர்களால் அடித்து துன்புறத்தப்பட்டு ஆடைகளை அவிழ்த்து மானபங்கம் செய்யப்பட்ட போதிலும் நாட்டின் நலனுக்காக கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து போராடினர். நாம் இதுவரை சொர்ணத்தம்மாள், சிவகாமி அம்மையார், ருக்மிணி லட்சுமிபதி ஆகியோரின் வீர வரலாற்றைப் பகிர்ந்துள்ளோம். இந்த பதிவில் கேரளாவை சேர்ந்த லட்சுமி என்.மேனனின் சுதந்திர போராட்ட வரலாற்றைப் பற்றி பார்ப்போம். லட்சுமி என்.மேனன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1899ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி பிறந்தவர். இவர் ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் சமூக செயல்பாட்டாளராக மக்களின் முன்னேற்றிற்கு பாடுபட்டுள்ளார்.
ஐநா-வில் இந்திய குழு தலைவர்
1927ல் இங்கிலாந்தில் கல்வி பயிலும் போது ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு சென்று அங்கு நடைபெற்ற சோவியத் ஒன்றியத்தின் மாணவர் குழுவினுடைய் 10வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அங்கு ஜவஹர்லால் நேருவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு லட்சுமி என்.மேனனை அரசியலுக்குள் நுழைய தூண்டியது. 1948 மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் ஐநா சபைக்கான இந்திய குழு உறுப்பினராக பரிந்துரை செய்யப்பட்டார். இதையடுத்து ஐநா சபையில் பெண்கள் தொடர்பான குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் ஐநா சபைக்காக இந்திய குழு தலைவராகவும் பணியாற்றினார். முன்னதாக கேரளாவின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்தி சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்துரத்தார்.
அரசியல் பயணம் & வெளியுறவு கொள்கை
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு லட்சுமி என்.மேனன் 1952, 1954 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார். நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அரசு சார்ந்த பயணங்களை மேற்கொண்டு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் உதவி புரிந்தார்.
பெண்களுக்கான காப்பீடு
இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்திய போது உலக நாடுகளுக்கு இந்தியாவின் நிலைப்பாட்டை தெரியப்படுத்துவதற்கு தூதுவராக லட்சுமி என்.மேனனை நேரு நியமனம் செய்தார். கேரளாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைவதில் லட்சுமி என்.மேனனுக்கும் பங்குண்டு. இந்தியாவின் எல்.ஐ.சி இயக்குநராக பணியாற்றிய காலத்தில் இவர் மேற்கொண்ட முயற்சியால் பெண்களுக்கு காப்பீடு தொகை கிடைத்தது. அகில இந்திய பெண்கள் மாநாட்டை நிறுவுவதில் முக்கிய அங்கம் வகித்தார். இந்த மாநாட்டிற்கு டெல்லியில் இடம் வாங்க தனது சொந்த நகைகளையும், சொத்துகளையும் அடமானம் வைத்தார்.
அன்னையர் தின பரிசு
அன்னையர் தினம் என்ற கருத்தியலும் லட்சுமி மேனன் நமக்கு அளித்த பரிசு தான். இந்தியாவில் படிப்பறிவில்லாதவர்களின் எண்ணிக்கையை குறைத்திட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டத்தை அமல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தியாவில் வாக்காளர்கள் கைரேகை வைப்பதற்கு பதிலாக கையொப்பமிட வேண்டும் என்பது லட்சுமி என்.மேனனின் விருப்பமாக இருந்தது. இறுதியாக 1994ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி உயிரிழந்தார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation