இந்தியாவில் கால்பந்தை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் இந்திய அணியும் தகுதி பெற்று விளையாடாதா என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும். சர்வதேச தரத்தில் வசதிகள் இல்லையென்றாலும் நம்மிடம் முத்தான வீரர்கள், வீராங்கனைகள் இருக்கின்றனர். விளையாட்டில் ஜெயிக்க லட்சியமும், திறனும் மட்டும் இருந்தால் போதாது. அடிப்படை கட்டமைப்பும், ஊக்குவிக்க பெரும் பின்புலமும் தேவை. இது ஒரு நீண்ட நெடிய பயணம் என்பதால் இந்திய கால்பந்து ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்கின்றனர். அதுவரை பைச்சுங் பூட்டியா, சுனில் சேத்ரி போன்ற திறமையான வீரர்களின் ஆட்டத்தை ரசிக்க மட்டுமே முடியும்.
இந்திய ஆடவர் அணி சர்வதேச தரவரிசையில் 117 இடத்திலும், மகளிர் அணி 65 இடத்திலும் உள்ளன. உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற ஆடவர் அணியை விட மகளிர் அணிக்கே அதிக வாய்ப்புள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆறு தங்கத் தாரகைகள் இருக்கின்றனர். நல்ல திறனும் தன்னம்பிக்கையோடு விடாமல் போராடும் எண்ணம் இருந்தால் எங்கும் ஜொலிக்கலாம் என்பதை நிரூபித்து காட்டியவர்கள் தான் சவுமியா நாராயணசாமி, இந்துமதி கதிரேசன், மாரியம்மாள் பாலமுருகன், சந்தியா ரங்கநாதன், கார்த்திகா, காவியா பக்கிரிசாமி.
இந்துமதி கதிரேசன்
2014ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் நடுகள வீரரான இந்துமதி கதிரேசன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அணிக்காக 34 போட்டிகளில் விளையாடி 12 கோல் அடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். கால்பந்தில் மட்டும் தான் இவர் நடுகள வீரர் ஆனால் நிஜ வாழ்க்கையில் முன்கள வீரர் என்று சொல்லலாம். ஆம் காவல்துறையில் பணியாற்றும் இந்துமதி கதிரேசன் கொரோனா பேரிடன் போது முன்கள பணியாளராகச் செயல்பட்டார். இவரது தலைமையில் தமிழக அணி கடந்த ஆண்டு தேசிய மகளிர் கால்பந்தில் சாம்பியன் பட்டம் வென்றது.
சவுமியா நாராயணசாமி
கால்பந்தில் வெற்றி பெற தடுப்பாட்டமும் மிக முக்கியம். சரியான தடுப்பு அரண் அமைத்து கோல் விழாமல் தடுப்பதில் கில்லாடியான சவுமியா நாராயணசாமி இந்திய அணியின் கோல் கீப்பர் ஆவார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் இந்திய அணிக்காக மூன்று முறை விளையாடியுள்ளார்.
கார்த்திகா அங்கமுத்து
நடுகள வீரரான கார்த்திகா அங்கமுத்து சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். 2022ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். பந்தை எதிராளிகளிடம் இருந்து தட்டிப்பறிப்பதில் வல்லவர்.
மாரியம்மாள் பாலமுருகன்
இவரும் சேலத்தை சேர்ந்தவர் தான். முன்கள வீரரான மாரியம்மாள் இந்திய ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் அணிகளில் இடம்பெற்று இருக்கிறார். வாய்ப்புகள் கிடைத்த போதெல்லாம் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்.
சந்தியா ரங்கநாதன்
பண்ருட்டியில் பிறந்த சந்தியா ரங்கநாதன் இந்திய அணியின் ஸ்டார் பிளேயராக வலம் வருகிறார். 38 போட்டிகளில் விளையாடி பத்து கோல் அடித்துள்ளார்.
காவியா பக்கிரிசாமி
இந்திய அணியில் புதிதாக இணைந்திருக்கும் நட்சத்திரம் மன்னார்குடியை சேர்ந்த காவிய பக்கிரிசாமி. முன்கள வீரரான இவர் உள்ளூர் போட்டிகளிலும், மாநில அளவிலான லீக் போட்டிகளில் கலக்கியதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார். காயம் காரணமாக இருமுறை வாய்ப்பு தவறிய நிலையில் தற்போது இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.
இவர்கள் அனைவருமே பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து கடுமையாக போராடி உச்சத்தை தொட்டுள்ளனர். இவர்களின் வெற்றிக்கு பின்னால் பொதுவான பெயர் உள்ளது. "சேது கால்பந்து கிளப்". மேற்கண்ட அனைவருமே இந்த கிளப்பில் ஆரம்பக்கால பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதன் பிறகு தங்களை மெருகேற்றிக் கொண்டு உயரங்களை தொட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த இந்தியர்களின் கால்பந்து கனவை சுமக்கும் இந்த தங்கத் தாரகைகளை சர்வதேச மகளிர் தினத்தில் கொண்டாடி மகிழ்வோம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation