உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் இயக்கும் சிறந்த பயிற்சி நீச்சல். இது எல்லா வயதில் உள்ள பெண்களுக்கும் ஏற்றதாகும். வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் போன்ற அனைவரும் எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகளில் நீச்சல் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஐந்து வயதிலிருந்தே நீச்சல் கற்றுத் தரலாம். சிறுவயதிலிருந்தே நீச்சல் பயிற்சியைத் தொடர்பவர்களின் தசைகள் வலிமையடைவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். அந்த வரிசையில் பெண்கள் நீச்சல் பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உடல் பருமனைக் குறைக்க உதவும் பயிற்சிகளில் நீச்சல் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆராய்ச்சிகளின்படி, ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்யும் பெண்கள் தோராயமாக 400 கலோரி எரியும். இதன் மூலம் உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு கரைந்து, எடை கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. தினசரி நீச்சல் பயிற்சி செய்பவர்களின் வயிற்றுப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்பு குறைந்து, தொப்பை பிரச்சனை தீரும்.
40 வயது கடந்த பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தக் காலத்தில் (மெனோபாஸ்) உடல் சோர்வு, மனக்கசப்பு, எந்தவொரு செயலிலும் ஆர்வமின்மை மற்றும் மனக்கவலை போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. இதற்கு நீச்சல் ஒரு சிறந்த தீர்வாகும். மருத்துவ ஆய்வுகளின்படி, நீச்சல் பயிற்சி மாதவிடாய் சீர்கேடுகளை சரிசெய்வதில் பயனுள்ளதாக இருக்கிறது.
கர்ப்பகாலத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. கர்ப்பகாலத்தில் நீச்சல் பயிற்சி மிகவும் பாதுகாப்பானது மற்றும் பல நன்மைகளைத் தருகிறது. இது கர்ப்பிணிகளின் முதுகு வலி, கால் வீக்கம் மற்றும் உடல் சோர்வை குறைக்கிறது. கர்ப்பிணிகள் வாரத்திற்கு 3-4 முறை மிதமான நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளலாம். இருப்பினும், மருத்துவரின் ஆலோசனையுடன் இதைச் செய்வது நல்லது.
இன்றைய வாழ்க்கை முறையில் பெண்கள் பல மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள். நீச்சல் ஒரு சிறந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடாகும். நீரில் இயங்குவது மனதை அமைதிப்படுத்தி, மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், இது தூக்கமின்மை மற்றும் கவலைக் கோளாறுகளை குறைக்க உதவுகிறது.
நீச்சல் ஒரு கார்டியோவாஸ்குலர் (இதயம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட) பயிற்சியாகும். இது இதயத் தசையை வலுப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இது நுரையீரலின் திறனை அதிகரித்து, சுவாசப் பிரச்சினைகளைக் குறைக்கிறது. தினமும் நீந்துவோருக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
மேலும் படிக்க: மாதவிடாய் நாட்களில் எந்த ஆடைகள் அணிய வேண்டும்? எந்த நிறங்கள் அணியக்கூடாது தெரியுமா?
நீரில் நீந்துவது தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் நல்லது. நீச்சல் தோல் மேல் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றி, பளபளப்பான தோலைத் தருகிறது. மேலும், இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உப்பு நீர் மற்றும் குளோரின் தோலுக்கு தீங்கு விளைவிக்கலாம், எனவே நீந்திய பின் வீட்டிற்கு வந்து குளிப்பது நல்லது.
மூட்டு வலி மற்றும் ஆர்த்ரைடிஸ் (மூட்டு வீக்கம்) பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு நீச்சல் ஒரு சிறந்த பயிற்சியாகும். நீரின் மிதப்புத் திறன் மூட்டுகளில் அழுத்தத்தைக் குறைத்து, வலியைத் தணிக்கிறது. மேலும், இது தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தி, நடைப்பயிற்சி மற்றும் பிற இயக்கங்களை எளிதாக்குகிறது.
அந்த வரிசையில் நீச்சல் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான இலவச மருந்து. இது எடை குறைப்பு, மன அழுத்த நிவாரணம், கர்ப்ப கால ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் தோல் பராமரிப்பு போன்ற பல நன்மைகள் வழங்குகிறது. எனவே, வாரத்தில் குறைந்தது 3 - 4 முறை 30 நிமிடங்கள் நீச்சல் பயிற்சி செய்தால் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம்.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com