அனைத்து பெற்றோரும் குழந்தை வளர்ப்பின் போது கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஐந்து அடிப்படை பண்புகள் தொடர்பாக இந்தக் கட்டுரையில் காணலாம். இது பெற்றோருக்கு ஒரு பாடமாக அமையக் கூடும்.
மேலும் படிக்க: இன்றைய காலத்துக் குழந்தைகளை உளவியல் ரீதியாக சமாளிக்கும் வழிமுறைகள்
பெற்றோராக இருப்பது என்பது நிச்சயம் எளிதான காரியம் ஆக இருக்க முடியாது. பல நேரங்களில் குழந்தைகளின் பிடிவாதத்தை எவ்வாறு சமாளிப்பது என்று பெற்றோர் குழப்பம் அடைவது உண்டு. குறிப்பாக, சில சமயங்களில் தங்களுக்கு வேண்டியதை அழுது, அடம்பிடித்து வாங்கும் வகையில் குழந்தைகள் செயல்படுவார்கள்.
இதில் அவர்களை தவறு கூற முடியாது. ஆனால், அது போன்ற நேரங்களில் சரியான வகையில் குழந்தைகளை கையாள வேண்டும். அதனடிப்படையில், குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளின் பிடிவாதத்தை புரிந்துகொள்வதில் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக வீட்டுப்பாடம் செய்வது அல்லது பள்ளிக்கு செல்வது போன்ற விஷயங்களில் இது அதிகம் நடக்கும். குழந்தைகள் பேசுவதை கேட்க மறுப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் அவர்களை கட்டாயப்படுத்துவதையோ அல்லது கோபப்படுவதையோ தவிர்த்து, அனுதாபத்துடன் அணுக வேண்டியது அவசியம். "இதற்கான அடிப்படைக் காரணம் என்ன?" என்ற ஒரு எளிய கேள்வியை உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். உங்கள் குழந்தை எப்படி உணர்கிறது அல்லது பள்ளியில் எல்லாம் நன்றாக இருக்கிறதா? போன்ற கேள்விகளை கேட்பது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். இது அர்த்தமுள்ள உரையாடலுக்கு வழிவகுக்கும். உரையாடல் என்பது ஒரு திறவுகோல் போன்றது; அதுவே அவர்களின் மனநிலையை புரிந்துகொள்ள உதவும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தெளிவான எல்லைகளை வகுக்க வேண்டும். இதற்கான விளைவுகள் மற்றும் வெகுமதிகளை பற்றி தொடர்ந்து அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் எதிர்பார்ப்புகள், பிரச்சனைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பெற்றோர்கள் வெளிப்படையாக பேசும்போது, குழந்தைகள் அவற்றை பின்பற்ற வாய்ப்புகள் அதிகம். குழந்தைகள் தாங்கள் மதிக்கப்படுவதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் உணரும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அத்துடன், தங்கள் பொறுப்புகள் மற்றும் எல்லைகள் என்ன என்பதை தெளிவாக உணரும்படி செய்யுங்கள். இந்த வெளிப்படைத்தன்மை அவர்களின் இலக்குகளை உணரவைத்து, அதை அடைய உதவும்.
மேலும் படிக்க: குழந்தை பிறந்து 6 மாத காலம் முடிவடைந்துவிட்டதா? இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுத்திடுங்க
ஒரு தாய் அல்லது தந்தையாக இருப்பதற்கு முன், அவர்களின் நண்பராக இருங்கள். அதன்மூலம், அவர்கள் பாதுகாப்பாக, மதிக்கப்படுவதாக மற்றும் நேசிக்கப்படுவதாக உணர்வார்கள். அன்பு மற்றும் கருணையுடன் பிடிவாதத்தை சமாளிக்கலாம். அவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் அற்புதம் செய்யலாம். வீட்டுப்பாடத்தில் உதவுவது, கதை புத்தகங்களை படித்து காட்டுவது, ஓவியம் வரைவது அல்லது அவர்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடுவது போன்றவை அவர்களின் விருப்பங்களை புரிந்துகொள்ள உதவும். இன்றைய வேகமான உலகில், உங்கள் குழந்தையை புரிந்துகொள்ள இது ஒரு மிக முக்கியமான விஷயம் ஆகும்.
தண்டனையின் மூலம் அவர்களை வழிநடத்தலாம் அல்லது ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், ஒழுக்கம் என்பது தண்டனையால் வருவதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ச்சியான தண்டனைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், ஒரு குழந்தையை மிகவும் கோபமாகவும், ஆக்ரோஷமாகவும், பிடிவாதமாகவும் மாற்றும் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் செயல்களின் விளைவுகளை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவும் வகையில், பெற்றோர்கள் அதிக ஆதரவான மற்றும் நேர்மறையான அணுகுமுறைகளை கண்டறிய வேண்டும்.
உங்கள் குழந்தையின் சாதனைகளை அங்கீகரிப்பதும், கொண்டாடுவதும் ஒரு சக்திவாய்ந்த பெற்றோர் வளர்ப்பு முறையாகும். இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று தோன்றலாம். பல பெற்றோர்கள் சில சமயங்களில் தங்கள் குழந்தை சிறப்பாக செயல்பட்டதை அறியாமலேயே பாராட்ட மறந்துவிடுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வெற்றிகளை பாராட்ட நேரம் ஒதுக்கும்போது, அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும், வீட்டுப்பாடம் செய்வது அல்லது பள்ளிக்கு தயாராவது போன்ற பணிகளை அவர்களாகவே செய்யும்போது, அது நேர்மறையான மனப்பான்மையை ஊக்குவிக்கிறது.
எனவே, இது போன்ற விஷயங்களை கையாள்வதன் மூலம் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அனைவரும் திறம்பட செயலாற்ற முடியும். குழந்தைகளும் சரியான முறையில் வளர்வார்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com