மெட்ராஸ் மேட்னி விமர்சனம் : காளி வெங்கட் நடித்திருக்கும் தவமாய் தவமிருந்து 2

கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், சத்யராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. அப்பா மீது அதீத பாசம் கொண்ட மகள், மகன் யாரும் மெட்ராஸ் மேட்னி படத்தை தவறவிடாதீர்கள்.
image

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், சத்யராஜ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மெட்ராஸ் மேட்னி. பெரிதளவில் ப்ரோமோஷன் இன்றி தக் லைஃப் படத்துடன் வந்ததால் கவனம் பெறவில்லை. தற்போது விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரோஷினி ஹரிபிரியன், சாம்ஸ், விஸ்வா, ஷெல்லி கிஷோர், கீதா கைலாசம் உட்பட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். வாருங்கள் இப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.

மெட்ராஸ் மேட்னி கதைச்சுருக்கம்

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காளி வெங்கட் தனது இரண்டு பிள்ளைகளையும் படித்து வைத்து கரையேற்ற வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களே மெட்ராஸ் மேட்னி.

மெட்ராஸ் மேட்னி விமர்சனம்

திரைப்படம் இயக்க விரும்பும் சத்யராஜ் நல்ல கதையை தேடிடுகிறார். அவரிடம் சொல்லப்படும் மூன்று கதைகளில் காளி வெங்கட்டின் கதையை தொடர்ந்து கேட்கிறார். ஆட்டோ ஓட்டுநரான காளி வெங்கட்டிற்கு இரண்டு குழந்தைகள். குடும்ப வறுமையை மீறி இருவரையும் நன்கு படிக்க வைத்து உயரிய இடத்திற்கு கொண்டு செல்ல முனைப்பு காட்டுகிறார். ஒரு சில இடங்களில் ரோஷினி, விஷ்வா தந்தையின் செயல்களை விமர்சிக்கின்றனர். மனம் உடைந்தாலும் காளி வெங்கட் பிள்ளைகளின் நலனின் கவனம் செலுத்துகிறார். நடுத்தர குடும்பம் எதிர்கொள்ளும் சிரமங்களே இந்த மெட்ராஸ் மேட்னி.

மெட்ராஸ் மேட்னி படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி மூவரும் அட்டகாசமாக நடித்திருக்கின்றனர்.
  • நடுத்தர குடும்பத்தில் நான்கு சுவற்றுக்குள் நடக்கும் விஷயங்களை மிகைப்படுத்தாமல் படமாக்கிய விதம் அற்புதம்.
  • விஷ்வா கதாபாத்திரத்தை விட ரோஷினி ஹரிஹரன் கதாபாத்திர வடிவமைப்பும், விவரிப்பும் வெகு சிறப்பு.
  • ஆரம்பத்தில் இருந்து வாய் திறக்காத அப்பாவி தந்தையாக நடித்த காளி வெங்கட் ஒரு இடத்தில் கோபப்பட்டு அதிகாரியை அடிக்கும் இடம் திரையரங்கில் கைதட்டல் வாங்கியது.
  • படத்தின் தொடக்கத்தில் வருவது போல நடுத்தர குடும்ப வாழ்வியலை திரையில் காட்டுவது எளிதல்ல. ஆனால் எங்கும் தொய்வின்றி இரண்டு மணி நேரம் யதார்த்தமான ரசிக்கும்படியான படம் கொடுத்திருக்கின்றனர்.
  • கீதா கைலாசம், ராமர் கதாபாத்திரங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.

மெட்ராஸ் மேட்னி படத்தின் நெகட்டிவ்ஸ்

  • காளி வெங்கட் கார் ஓட்ட கற்கும் காட்சி, மின்துறை அதிகாரியின் சில காட்சிகள் தேவையற்றவை.
  • முதல் 10 நிமிடங்கள் சத்யராஜ் கதை விவரிக்க ஆரம்பிக்கும் காட்சியால் எந்த பயனும் இல்லை. நேரடியாக கதைக்குள் சென்றிருக்கலாம்.

மெட்ராஸ் மேட்னி ரேட்டிங் - 3.25 / 5

90ஸ் கிட்ஸிற்கு தவமாய் தவமிருந்து கொடுத்த மறக்கமுடியாத அனுபவத்தை 2K கிட்ஸிற்கு மெட்ராஸ் மேட்னி திரைப்படம் கொடுக்கும். வடிவேலு இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். தவறாமல் அப்படாலை கேட்கவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP