பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்த பொங்கல் ரேசில் இடம் பிடித்துள்ள இன்னொரு திரைப்படம் நேசிப்பாயா? விஷ்ணுவரதன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளி, நடிகை அதித்தி சங்கர், சரத்குமார், குஷ்பூ, பிரபு, கல்கி கோச்சலின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் நேசிப்பாயா. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் இரண்டாவது தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் இது. அஜித் நடிப்பில் பில்லா, ஆரம்பம், அறிந்தும் அறியாமலும் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள திரைப்படம் நேசிப்பாயா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் பொங்கலுக்கு வெளியான நேசிப்பாயா திரைப்படம் எப்படி இருக்கு என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நேசிப்பாயா படத்தின் கதை என்ன?
மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி இந்த திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் ஆகாஷ் முரளியும் தியா ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் அதிதி சங்கரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். அர்ஜுன் மற்றும் தியா இவர்களிடையே கல்லூரி பருவத்தில் இருந்து பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. கல்லூரி காலத்தில் காதலித்து வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்து பிரிந்து விடுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கதாநாயகன் அர்ஜுன் வேலை செய்யும் தொலைக்காட்சி செய்தி சேனலில் தன் முன்னாள் காதலி வெளிநாட்டில் கைது செய்யப்பட்டதை பார்க்கிறார். இவர்கள் காதல் பிரேக் அப் செய்த பிறகு கதாநாயகி தியா போர்ச்சுகல் நாட்டிற்கு செல்கிறார். அங்கு கார்த்திக் ஆதினாராயணன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக கதாநாயகி போர்சுகல் நாட்டில் சிறையில் அடைக்கப்படுகிறார்.
இதற்குப் பிறகு கதாநாயகன் தன் முன்னாள் காதலியை காப்பாற்ற உடனடியாக போர்ச்சுகல் நாட்டுக்கு செல்கிறார். போர்ச்சுகலுக்கு சென்ற நம் ஹீரோ அர்ஜுன் ஹீரோயினை மீட்டெடுக்க நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றாரா இல்லையா? அந்த கொலையை உண்மையில் கதாநாயகி தியா தான் செய்தாரா என்பதுதான் இந்த நேசிப்பாயா திரைப்படத்தின் முழு கதை. இந்தத் திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ள கல்கி கோச்சலின் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்று கூறலாம். படத்தின் டைட்டிலை வைத்து இது ஒரு காதல் திரைப்படமாக இருக்கும் என நினைத்து தியேட்டருக்கு சென்ற ஆடியன்ஸுக்கு இந்த படத்தில் காதல் கொஞ்சம் ஆக்ஷன் கிரைம் அதிகமாகவும் இருப்பதை பார்க்க முடியும். இந்த படத்தில் மற்றொரு பெரிய பிளஸ் யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலமாக உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்துடன் சென்று தியேட்டரில் கலகலப்பாக பார்க்கும் படமாக இந்த நேசிப்பாயா இருக்குமா என்று கேட்டால் அது டவுட்டு தான். ஆனால் ஒரு காதல் திரைப்படம் இவ்வளவு தரமான மேக்கிங் உடன் பார்ப்பது இளைஞர்களுக்கு ஒரு புது அனுபவமாக கண்டிப்பாக இருக்கும். படத்தில் பல காட்சிகள் எங்கேயோ பார்த்த மாதிரி உணர்வை கொடுத்திருந்தாலும் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யூகிக்க முடியாத அளவிற்கு ஒரு பெரிய டிவிஸ்டோடு அமைந்துள்ளது. எனவே இந்த கிளைமாக்ஸ் காட்சிக்காகவே இந்த நேசிப்பாயா திரைப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation