சங்க காலத்தில் இருந்து தமிழர் வாழ்வில் கலந்து தமிழரின் மரபு உரிமை சொத்துகளில் ஒன்றாக வாகை மரம் விளங்கி வருகிறது. வாகை மரத்தினுடைய இலை, பூ, காய், பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது. வீட்டிற்கு தேவையான கதவு, ஜன்னல், மேஜை, நாற்காலி மற்றும் மரச்செக்கு செய்வதற்கு வாகை மரம் பயன்படுத்துகிறது. வாகை மரம் மண்ணரிப்பை தடுக்கவும் பயன்படுகிறது. இன்றளவிலும் வாகை மரத்தின் இலைகளை ஆடு மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கிறோம். இந்த இலைகளில் இருக்கும் கால்சியம், புரதம், பாஸ்பரஸ் சத்துகள் ஆடு, மாடுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
வாகை மரத்தின் இலைகளை நிலத்திற்கு தழையுரமாக உபயோகம் செய்கின்றனர். காய்ந்து போன வாகை இலைகளில் 2.8 விழுக்காடு நைட்ரஜன் இருப்பதால் இது சிறந்த தழையுரமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாகை இலைகளை அரைத்து கண் இமைகளில் கட்டி வந்தால் கண் சிவத்தல், எரிச்சல் குணமாகும். வாகை மரத்தின் முக்கியமான பயன்களில் ஒன்றாக மரச்செக்கு பயன்பாட்டை கூறலாம். மரச்செக்கில் உள்ள உரல், உலக்கை வாகை மரத்தினால் செய்யப்பட்டது. மரச்செக்கில் கடலை, தேங்காய் என எதை போட்டு அரைத்தாலும் அதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் சுடாக இருக்காது.
வாகை மரப் பட்டையை பொடி செய்து அடிபட்ட காயத்தின் மீது தடவி வந்தால் காயம் விரைவில் குணமாகும். பசியெடுக்காதவர்களுக்கு வாகை மரத்தின் பட்டையை நிழலில் காய வைத்து நல்ல பொடியாக அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் நன்றாகப் பசியெடுக்கும். உடல் சூட்டினால் வரும் வாய் புண்ணை குணப்படுத்தும். கால்நடைகளுக்கு ஏதாவது காயம் இருந்தால் வாகை மரப் பட்டையை பொடி செய்து எண்ணெய் உடன் சேர்த்து காயங்கள் மீது தடவினால் விரைவாக குணமாகும். வாகை மரத்தின் பூக்களோடு தண்ணீர் சேர்த்து பாதியளவிற்கு காய்ச்சி குடித்து வந்தால் வாத நோய் குணமாகும். விஷங்களை முறிக்கும் தன்மையும் உடையது.
மன்னர் காலத்தில் போர்க்களம் சென்று வெற்றி பெற்று திரும்பி வருகையில் போர் படையினர் வெற்றி பெற்றதன் அடையாளமாக வரும் வழியில் இருக்கும் வாகை மரத்தின் இலைகள் மற்றும் பூக்களைப் பறித்து சூடிக் கொள்வார்கள். அதனால் தான் வெற்றி வாகை சூடினான் என்ற வாசகம் உருவானது.
குறிஞ்சி பாட்டில் கூறப்பட்டு இருக்கும் 99 வகையான பூக்களில் வாகைப் பூவும் ஒன்று. வாகை மரத்தின் பூக்கள் அவ்வளவு மனமாக இருக்கும். ஒரு மரத்தின் அருகில் நின்றால் காற்றோடு சேர்ந்து அந்த மனம் வீசும் போது மிகவும் நன்றாக இருக்கும். வாகை மரப் பூக்களுக்கு தேனீக்கள் தேன் சேகரிப்பதற்கு அதிகமாக வரும். வாகை மரத்தின் பூக்களை நறுமண தைலம் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com