90 நாட்களில் பச்சை மிளகாய் சாகுபடி; மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம்

மாடி தோட்டத்தில் பச்சை மிளகாய் வளர்ப்பது மிகவும் சவாலான காரியங்களில் ஒன்று. இலை சுருட்டல் பாதிப்பின்றி பச்சை மிளகாய் வளர்ப்பது எப்படி ? பச்சை வளர்ப்புக்கு என்ன உரம், மண் கலவை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
image

மாடித் தோட்டத்தில் சாகுபடி செய்யக்கூடிய காய்கறிகளில் பச்சை மிளகாயும் ஒன்று. எந்தவொரு உணவிலும் காரம் தேவைப்படுகிறது. இதற்கு பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு முறையும் காய்கறி வாங்கும் போது 5 ரூபாய், 10 ரூபாய்க்கு பச்சை மிளகாய் கொடுங்கள் என கேட்கிறோம். மாடி தோட்டத்தில் அதை எளிதாக வளர்க்க முடியும் என்றால் 5 ரூபாயை கூட மிச்சப்படுத்தலாம். சரியாக பயிரிட்டு நோய் தாக்குதல் இன்றி வளர்த்து வந்தால் 90 நாட்களில் பச்சை மிளகாய் அறுவடை செய்யலாம். பச்சை மிளகாய் சாகுபடியில் விவசாயிகளுக்கு சவால் அளிக்க கூடிய ஒரே விஷயம் இலை சுருட்டல் தாக்குதல். சவால்களை மீறி மாடி தோட்டத்தில் பச்சை மிளகாய் சாகுபடி எப்படி செய்வது என பார்க்கலாம்.

பச்சை மிளகாய் வளர்ப்பு

பச்சை மிளகாய் செடியாக வளரும். இதற்கு மண் கலவை மிக முக்கியம். 15*12 அளவில் மண் தொட்டி போதுமானது. பச்சை மிளகாய் வளர ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் சில களை செடி வளரும். இதை அவ்வப்போது அகற்றிட வேண்டும். பச்சை மிளகாய் வளர்ப்புக்கு 20 விழுக்காடு செம்மண், 40 விழுக்காடு கோகோபீட், 40 விழுக்காடு உரம் கலவை தேவை. 40 விழுக்காடு உரத்தில் மக்கிய மாட்டு உரம், மண் புழு உரம் அடங்கும். சூடோமோனாஸ் பயன்படுத்தி நோய், பூச்சி பாதிப்புகளை தவிர்க்கலாம்.

பச்சை மிளகாய் சாகுபடி

பச்சை மிளகாய் வளர்ப்புக்கு பிரத்யேகமாக விதை வாங்க வேண்டிய தேவையில்லை. சமையலுக்கு பயன்படுத்தும் வர மிளகாய் இருந்தால் போதும். நீங்கள் குண்டு மிளகாயும் பயன்படுத்தலாம். ஒரு காய்ந்த மிளகாய் எடுத்து அதில் உள்ள விதைகளை எடுத்து மண் கலவையில் போட்டு மூடி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றுங்கள். பச்சை மிளகாயை வெயில் காலத்தில் வளர்ப்பது நல்லது. மழை காலத்தில் பச்சை மிளகாய் வளர்ப்பது சற்று கடினம்.

மாடித் தோட்டத்தில் பச்சை மிளகாய் வளர்ப்பு

ஒரு வாரத்தில் பச்சை மிளகாய் செடி ஓரளவு வளர்ந்திருக்கும். 4-5 செடிகள் வளர்ந்திருந்தால் அவற்றில் இரண்டை மட்டும் ஒரு தொட்டியில் வளருங்கள். மற்றதை வேறு தொட்டிக்கு மாற்றி விடவும். முன்பே சொன்னது போல் களை செடிகள் இருந்தால் நீக்கி விடுங்கள். பச்சை மிளகாய் செடி வளர மிதமான ஈரப்பதம் போதும். மண் காயும் நேரத்தில் மிளகாய் செடிக்கு தண்ணீர் ஊற்றினால் போதும். அதிக ஈரப்பதம் இலை சுருட்டல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இலை சுருட்டல் பாதிப்பு வந்தால் சூடோமோனாஸ் 10-15 மில்லி லிட்டரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீதும் வேரிலும் தெளிக்கவும்.

புளித்த மோர் இருந்தால் அதை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து செடியில் தெளித்தால் இளை சுருட்டலை தவிர்க்கலாம். புதிய இலைகள் நன்றாக வளரும்.

90 நாட்களில் பச்சை மிளகாயை சாகுபடி செய்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP