
கிவி பழங்களை வீட்டிலேயே, வளர்ப்பது சற்று சவாலாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் செயலாகும். இது உங்கள் நகர்ப்புற இடத்தில் ஒரு கூடுதல் அழகை கொண்டு வரும். பொதுவாக, இந்தக் கிவி கொடிகள் திறந்தவெளியை தான் விரும்பும்.
ஆனால், சரியான முறையில் செய்தால், அவை தொட்டிகளிலும் மிக நன்றாக வளரும் தன்மை கொண்டவை. பொறுமை, போதுமான வெப்பம் மற்றும் சரியான வழிமுறைகள் இருந்தால், இந்தக் கொடிகள் சிறிய இடங்களிலும் செழித்து வளரும். உங்கள் வீட்டு பால்கனியில் கிவி செடிகளை முளைக்க வைப்பது, பராமரிப்பது மற்றும் வளர்ப்பது எப்படி என்பதற்கான எளிய, படிப்படியான வழிமுறைகளை காண்போம்.
முதலில், தரமான கிவி பழத்தை தேர்வு செய்ய வேண்டும். நன்கு பழுத்த ஒரு கிவி பழத்தின் உட்புறத்தில் இருந்து விதைகளை மெதுவாக எடுத்துக் கொள்ளவும். விதைகளில் ஒட்டியுள்ள பழத்தை முழுமையாக கழுவி அகற்றவும். இவை ஒட்டியிருந்தால், அது முளைக்கும் போது பூஞ்சைத் தொற்று ஏற்பட வழிவகுக்கும். விதைகளை ஒரு டிஷ்யூ பேப்பரில் பரப்பி, சிறிது நேரம் உலர விடவும். நன்கு சுத்தம் செய்யப்பட்டு, பிரிக்கப்பட்ட விதைகள் முளைப்பதற்கு ஏற்றவையாக இருக்கும்.
கிவி விதைகளின் முளைக்கும் தன்மையை அதிகரிக்க குளிர் அடுக்கு நடைமுறை செய்வது அவசியம். இது இயற்கையான குளிர்கால சூழ்நிலையை உருவாக்கி விதைகளை துண்டும். உலர்ந்த விதைகளை நன்கு ஈரப்படுத்தப்பட்ட டிஷ்யூ பேப்பரில் வைக்கவும். இந்த டிஷ்யூவை ஒரு பிளாஸ்டிக் பையில் காற்று புகாதவாறு அடைத்து வைக்க வேண்டும். இதை உங்கள் ஃப்ரிட்ஜின் காய்கறி பகுதியில் 2 முதல் 3 வாரங்கள் வைக்கலாம். இவ்வாறு செய்தால் விதைகள் வேகமாக முளைப்பதுடன், வலுவாக வளரும் தன்மை கொண்டவையாக இருக்கும்.

மேலும் படிக்க: சுவை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த 5 மூலிகைகளை உங்கள் வீட்டு தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம்
இதன் பிறகு, விதைகளை நடவு செய்ய தயார் செய்யலாம். நன்கு வடிகால் வசதியுள்ள, ஈரப்படுத்தப்பட்ட தொட்டி மண்ணை நடவு செய்ய பயன்படுத்தவும். முதிர்ச்சியடைந்த விதைகளை மண் கலவையின் மேலே வைத்து மெதுவாக அழுத்தவும். கிவி விதைகள் முளைப்பதற்கு ஒளி தேவைப்படுகிறது. எனவே, அவற்றை ஆழமாக மண்ணால் மூடிவிடக் கூடாது. மேலோட்டமாக விதைத்தாலே போதுமானது.
தொட்டியை சுமார் 20 முதல் 25°C வெப்பநிலையில் வைக்கவும். ஈரப்பதத்தை பராமரிக்க, தொட்டியின் மேற்பகுதியை ஒரு பிளாஸ்டிக் கவரால் மூடி வைக்கவும். சரியான சூழ்நிலைகள் அமைந்தால், பொதுவாக இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் சிறிய நாற்றுகள் தோன்ற ஆரம்பிக்கும்.
நாற்றுகள் வந்த பிறகு, அவற்றை பராமரிப்பது முக்கியம். கிவி செடிகளின் நாற்றுகள் பிரகாசமான சூரிய ஒளியில் நன்கு வளரும். தொட்டியை அதிக வெளிச்சம் உள்ள ஜன்னல் அருகே அல்லது பால்கனியில் வைக்கவும். இதன் மண்ணை தொடர்ந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். ஆனால், நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறிய தொட்டிகளில் அதிக நீர் ஊற்றுவது வேர் அழுகலுக்கு வழிவகுக்கும். மண்ணின் மேல் அடுக்கு காய்ந்து விட்டதாக நீங்கள் உணர்ந்தால், மெதுவாக நீரைத் தெளிக்கலாம்.

மேலும் படிக்க: பப்பாளி வளர்ப்பு இனி ஈஸி; வீட்டு பால்கனி போதும்: இந்த டிப்ஸை மறக்காம ஃபாலோ பண்ணுங்க
நாற்றுகளில் இருந்து 3 முதல் 4 இலைகள் வெளியான பின்னர், அவற்றை தனித்தனி தொட்டிகளில் மாற்றி நடவு செய்ய வேண்டும். ஆரம்பகால வேர் வளர்ச்சிக்காக, குறைந்தது 8 முதல் 10 அங்குல ஆழம் கொண்ட தொட்டியை தேர்வு செய்யவும். சத்தான, காற்றோட்டமான மண்ணை பயன்படுத்தவும். நாற்றுகளை மாற்றும் போது வேர்கள் அதிகமாக தொந்தரவு செய்யப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பால்கனியில் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் இதனை வைக்கலாம். அதிக காற்று சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கிவி கொடி பல ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு கொடி வகையாகும். அதற்கு நீண்ட கால பராமரிப்பு அவசியம். இவை தீவிரமாக வளரும் மாதங்களில், ஆர்கானிக் உரத்தை பயன்படுத்தலாம். மண்ணின் ஈரப்பதத்தை லேசான ஈரத்துடன் பராமரிக்க வேண்டும். பலவீனமான தளிர்களை வெட்டி அகற்றுவது, கொடியின் தரமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இந்த வழிமுறைகள் அனைத்தையும் சரியாக பின்பற்றினால் உங்கள் வீட்டில் கிவி கொடிகள் நன்றாக வளரும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com