யோகா செய்வது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. செரோடோனின் என்பது மனநிலை, கவனம், தூக்கம், வலி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும். தினசரி யோகா மற்றும் தியானம் செய்வது செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து, நேர்மறையான மனநிலை மாற்றங்களை உணரலாம்.
நமது எண்ணத்தின் இயல்பு, மனித சுபாவம், நம்முடன் ஒன்றி வாழும் உணர்ச்சிகள், நம் நடத்தை போன்ற காரணங்களினால் மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். இதனை திறம்பட சமாளித்து செயல்பட யோகா உதவுகிறது.
பின்வரும் ஐந்து வழிகளில் யோகா நம் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது
பதட்டத்தை குறைக்கலாம்
பதட்ட உணர்வு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பரிந்துரை செய்யப்படுகிறது. யோகாவின் தோரணை மற்றும் சுவாசிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் நம் மனதில் தோன்றும் எதிர்மறையான மன உரையாடலை தடுக்கலாம். யோகா செய்வது கவலை, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து உங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதாக பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
பதட்ட உணர்வில் இருந்து மீள்வதற்காக யோகா பயிற்சி செய்யும்போது கவனிச்சிதறல் ஏற்பட்டாலோ அல்லது எதிர்மறையான எண்ணங்கள் தோன்றினாலோ கவலைப்பட வேண்டாம். மெதுவாக கவனச் சிதறலை குறைத்து, மனதினை ஓர் நிலைப்படுத்தி யோகா செய்ய முயற்சி செய்யுங்கள்.
உங்களை நீங்களே காதலிப்பீர்கள்
யோகா செய்வதன் மூலம் உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு உண்டாகிறது. உங்களைப் பற்றிய புரிதல் சிறப்பாக இருக்கும், உங்களுக்காக நேரம் ஒதுக்க தொடங்குவீர்கள். உங்களுக்கான சுய பராமரிப்பு முறைகளில் யோகவையும் தவறாமல் செய்ய முயற்சி செய்வீர்கள். உங்கள் உடல் திறனில் தன்னம்பிக்கை உருவாகும். இது உங்கள் சுயமரியாதையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், உடற்பயிற்சியின் போது வெளியாகும் எண்டோர்பின் ஹார்மோன்கள் உங்கள் மனநிலையை மேம்படுத்தும்.
உறவுகளை மேம்படுத்துகிறது
தினசரி யோகா செய்வது உங்கள் சமூக உறவுகளை பலப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் நீங்கள் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்கும்போது அன்பின் வெளிப்பாடும் அதிகமாகும். மற்றவர்களிடம் இருக்கும் குறைகளை தவிர்த்து, நல்ல விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
சுய விழிப்புணர்வை அதிகரிக்கிறது
நம்மை பற்றிய ஒரு சில விஷயங்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு பிடிக்காது என்ற எண்ணம் இருக்கலாம். இதனுடன் ஒரு சில திறமைகளை வெளி உலகிற்கு காட்டுவதில் தயக்கம் இருக்கலாம். இது நிராகரிக்கப்படுமோ, மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள் என்ற அச்சத்தில் நிறைய விஷயங்களை மனதுக்குள் மறைத்து வைக்கிறோம். நீங்கள் மறந்த உங்களின் ஒரு சில சிறந்த குணங்களை யோகா நினைவில் கொண்டு வரும். இது உங்களைப் பற்றிய சுய விழிப்புணர்வை அதிகரிக்கிறது. இதன் மூலம் உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: பசியை தூண்டும் எளிமையான யோகாசனங்கள்
கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட உதவுகிறது
யோகா வெறும் தோரணை மட்டுமல்ல, அது செய்யும் அற்புதங்கள் ஏராளம். நீங்கள் ஏதேனும் கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட விரும்பினால், யோகா நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமின்றி புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதை பழகத்தில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு யோகா ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: 14 நாட்களுக்கு சர்க்கரையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image source:freepik