தைத் திருநாள் என்றாலே பொங்கலுக்கு அடுத்தப்படியாக சட்டென்று நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள். “காளைகளின் திமிலை திமிராக அடக்கும் காளையர்களின் வீரத்தைப் பறைசாற்றும் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு”.சில நூற்றாண்டுகள் இல்லை.. பல்லாயிரம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்தே தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உலகறிய செய்த வீர விளையாட்டாக திமிரோடு வலம் வருகிறது ஜல்லிக்கட்டு.
ஏறுதழுவுதல்,சல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு,கொல்லக்கோறி தழுவுதல்,ஏறுகோள் என பல பெயர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்த விளையாட்டிற்கும், சங்க கால இலக்கியத்திற்கும் இடையே பல சுவாரஸ்சிய கதைகள் அடங்கியுள்ளது.
சங்க கால இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு:
“ கொல்லேற்றுக் கோடாஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்” - கலித்தொகை
கூடிக்கொல்கிற காளையின் கொம்புக்கு அஞ்சுகின்ற இளைஞனை மறுபிறவியில் கூட பெண்கள்(ஆய மகள்) திருமணம் செய்ய மாட்டாள் என்கிறது கலித்தொகை. திமில் கொண்ட காளைகளை எதிர்த்துப் போராடமல் அஞ்சி ஓடும் இளைஞர்களை அக்காலத்துப் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்பதையும், ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தையும் கலித்தொகையில் அழகாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அக்காலத்தில் பெண்கள் பருவமடைந்த நாளிலிருந்து சிறிய காளை கன்றுகளை வளர்ப்பார்கள். அவர்கள் வளர்க்கும் காளைகளை அடக்கும் வீரம் செறிந்த காளையர்களைத் தான் திருமணம் செய்வார்கள். மாமன் மகனைத் திருமணம் செய்ய வேண்டும் என்றாலும் முறைபையன் களத்தில் போராடி வெற்றி வாகை சூட வேண்டும். இல்லையென்றால் அப்பெண்கள் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள் என சிலப்பதிகாரம் கூறுகிறது.
குறிஞ்சி நில மக்களும் முல்லை நில மக்களும் அவர்கள் வளர்த்த வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று சண்டையிட செய்வார்கள். எந்த எருதுகள் வெற்றிப் பெறுகிறதோ? அதை தங்களது வெற்றியாக நினைத்து ஆரவாரம் செய்வார்கள் என சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றனர். மேலும் வளமான காளையை அடக்குவருக்கே உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதை “ மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் முல்லையம் பூங்குழல் தான்” என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதே போன்று மலைபடுகடாம் நூலிலும், பட்டினப்பாலையிலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
வரலாற்று ஆய்வுகளில் ஜல்லிக்கட்டு:
சிந்து சமவெளி, கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகளை ஒப்பிடும் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் 2000 ஆண்டுகளுக்கு பழமையான தமிழர் பண்பாடு என ஆராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள சான்றுகள் ஆதாரமாக தலைநிமிர்ந்து நிற்கிறது.
மேலும் தேனி மாவட்டத்தில் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புலிமான் கோம்பை என்ற இடத்தில் காளையுடன் போராடிய இளைஞர் ஒருவரின் சிற்பத்துடன் “ஆகோள் ஆநிரை மீட்டப்பட்டான் கல் என தமிழி எழுத்துக்களுடன் நடுகல் ஒன்று அகழ்வராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டது. மறைந்த வீரரின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த நடுகல் ஜல்லிக்கட்டு எத்தகைய பழமை வாய்ந்தது என்பதை உரக்க சொல்கிறது.
ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டாக மாறியது எப்படி?
அக்காலத்தில் ஏறுதழுவுதல், ஏறுகோள் என்ற பெயரில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. ஏறு என்றால் காளை, வாடிவாசல் திறக்கப்பட்டு திமிலோடும், திமிரோடும் வரும் காளைகளை, வீரர்கள் தழுவி அணைப்பதால் ஏறுதழுவுதல் என மக்கள் பெயரிடப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. பின்னர் விஜயநகர மன்னர்கள் மதுரையை ஆட்சி செய்யும் போது சல்லிக்காசு என பெயர் மாற்றம் செய்ததாக பல ஆய்வுகள் நமக்கு கூறுகின்றன. காளைகளின் திமிலில் காசுகளைக் கட்டி வைப்பார்கள். இதை அடக்கி யார் காசுகளை எடுக்கிறார்களோ? அவர்கள் தான் வெற்றிப் பெறுவதாக அறிவிக்கப்படுவார்கள். சல்லிகாசு என்பது தான் நாளடைவில் ஜல்லிக்கட்டு என மருவியது.
தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் மதுரை தான் மிகவும் புகழ்பெற்றது. தை முதல் நாள் அவனியாபுரம், தை இரண்டாம் நாள் பாலமேடு, தை மூன்றாம் நாள் அலங்காநல்லூர் என ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் வீரத்தை தற்போதும் பறைசாற்றிவருகிறது.
சங்க காலம் முதல் இக்காலம் வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர்களின் வீரத்தை நிலை நிறுத்துகிறது. ஆனாலும் இந்த வீர விளையாட்டில் காளைகளைத் துன்புறுத்துகின்றனர் என பீட்டா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நிரந்த தடை விதித்தது. பல சட்ட போராட்டங்கள் நடத்தியும், தமிழக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக தடை நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க:தைத் திருநாள் பண்டிகைக்கான பாரம்பரிய சமையல்!
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation