நாம் சாப்பிடக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்களில் முக்கியமானது உலர் திராட்சை. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்ச்சத்துக்கள் உடலுக்கு பல வகைகளில் ஆரோக்கியத்தை அளிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் உலர் திராட்சை பழங்களை இரவு முழுவதும் ஊற வைத்து, வெறும் வயிற்றில் அதன் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் குறித்து இந்த கட்டுரையின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
நமது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் இயற்கையான முறையில் நீக்கும் தன்மைகளைக் கொண்ட முக்கிய உடல் உறுப்புகளில் ஒன்றாக உள்ளது கல்லீரல். இதன் வேலையை முறையாக செய்துக் கொண்டிருந்தாலும், மனிதர்களாகிய நாம் தான் இதன் தன்மையைக் குறைக்க செய்கின்றோம். மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கல்லீரலின் செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்குகிறது. இதன் செயல்பாட்டை சீராக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீர். இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் இந்த தண்ணீரைக் குடிக்கும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
மேலும் படிக்க: மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு நல்ல விஷயங்களா ? ஆரோக்கிய நன்மைகளை தெரிஞ்சிட்டு சாப்பிடுங்க
தினமும் ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீரைக் குடிக்கும் போது, இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது. குறிப்பாக டார்டாரிக் அமிலம், கேட்டசின்கள் போன்ற திராட்சையில் உள்ள பிளாவனாய்டுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கலைத் தடுக்கும் மலமிளக்கியாக செயல்படுகிறது.
மேலும் படிக்க: 30 வயது இளம்பெண்கள் பச்சை பப்பாளி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்
உலர் திராட்சை பழங்களில் இரும்புச்சத்து, பி- காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாமிரம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலுக்கு பல வகைகளில் நன்மையளிக்கிறது. அதுவும் தினமும் வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீரைப் பருகும் போது, இதன் ஊட்டச்சத்துக்கள் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும் இரத்த சோகைப் பாதிப்பிற்கும் உலர் திராட்சை பழங்கள் பேருதவியாக உள்ளது.
உடல் எடை அதிகரிப்பது என்பது இன்றைக்கு பலரும் சந்திக்கும் உடல் நலப் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் நேரம் தவறி சாப்பிடுவது போன்ற காரணங்களால் அதிகரிக்கும் அதிகரிக்கும் எடையைக் குறைக்க வேண்டும் என்றால், ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீரை பருகலாம். இதில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உள்ளதால், பசி உணர்வைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக உணவுகளைச் சாப்பிடுவதில் ஆர்வம் குறையக்கூடும். இதோடு இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீரில் உள்ள கால்சியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பெண்களின் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. இதோடு இதில் உள்ள வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் கண் பார்வை திறனை அதிகரிக்கிறது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com