herzindagi
image

செரிமானம் முதல் சரும ஆரோக்கியம் வரை; காலையில் சியா விதை நீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் சியா விதைகள் கலந்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். இது குடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Editorial
Updated:- 2025-09-12, 14:09 IST

சியா விதை என்பது, சால்வியா ஹிஸ்பானிகா (Salvia hispanica) என்ற தாவரத்திலிருந்து கிடைக்கும் சிறிய விதைகள் ஆகும். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம், பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வது குடல் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும். சிலர் இந்த விதைகளை தண்ணீரில் கலந்து அருந்துகின்றனர். அப்போது இந்த விதைகள் தண்ணீரில் ஊறி, ஜெல் போன்ற நிலையை அடைந்து, உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கிறது. அந்த வகையில், ஒரு ஸ்பூன் சியா விதைகளை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை தற்போது பார்க்கலாம்.

மேலும் படிக்க: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தய தண்ணீர்; நோட் பண்ணுங்க மக்களே

 

செரிமானத்தை மேம்படுத்துகிறது:

 

சியா விதையில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் சியா விதையில் சுமார் 9.8 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கங்களை சீராக்க உதவுகிறது. நமது குடலில் நன்மை செய்யும் மற்றும் தீங்கு விளைவிக்கும் என பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. நார்ச்சத்து, தீய பாக்டீரியாக்களை வெளியேற்றவும், நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கவும் உதவுகிறது.

Chia seeds

 

உடல் எடை பராமரிப்பு:

 

சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து, புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், எடையை குறைக்கவும் மற்றும் பராமரிக்கவும் விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கலோரி குறைவான உணவுடன் சியா விதைகளை உட்கொள்ளும்போது, எடை குறைய வாய்ப்புள்ளது. சியா விதை நீரை பற்றிய ஆய்வுகள் குறைவாக இருந்தாலும், அது உருவாக்கும் ஜெல் போன்ற பொருள் வயிற்றை நிரம்பிய உணர்வை ஏற்படுத்தி, கலோரி குறைவான உணவை பராமரிக்க உதவுகிறது.

  

அழற்சியை குறைக்க உதவும்:

 

சியா விதை நீர் அழற்சிக்கு எதிராக போராடக்கூடும். சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகின்றன. அழற்சி குறையும்போது, இருதய நோய்களின் அறிகுறிகள் குறையக்கூடும்.

மேலும் படிக்க: குடல் இயக்கத்தை சீராக்கும்; நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்; இந்த மழைக்காலத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

 

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்:

 

சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அளவை நிலைநிறுத்த உதவுகிறது. இதனால் சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும். அவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, உணவுக்கு முன் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றன. இன்சுலின் என்பது குளுக்கோஸை செல்களுக்குள் நகர்த்த உதவும் ஒரு ஹார்மோன் ஆகும்.

Chia seed benefits

 

சியா விதை நீரின் விளைவுகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இரத்த சர்க்கரை மேலாண்மைக்காக சியா விதையை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன், ஒரு சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

 

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

 

சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புற ஊதா கதிர்களால் (UV) ஏற்படும் சரும பாதிப்பு மற்றும் முகப்பருவை குணப்படுத்துகிறது. சியா விதை நீர் குறித்து தரவுகள் குறைவாக இருந்தாலும், அதை குடிப்பதன் மூலம் நீர்ச்சத்து அதிகரிக்கும். போதுமான அளவு நீர் அருந்துவது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com