
குளிர்காலத்தில் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பருவகால உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்வது மிக அவசியமாகும். இதற்கு, கிரீன் டீ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைப்பதில் மட்டுமல்லாமல், உடலை சுத்திகரிப்பதிலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதிலும் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
இருப்பினும், கிரீன் டீயை மற்ற தேநீர் போல தயாரித்து குடிக்கக் கூடாது. அதை தயாரிப்பதற்கும், குடிப்பதற்கும் என்று சில முறைகள் உள்ளன. சரியான முறையில் தயாரித்து குடித்தால் மட்டுமே அதன் முழுமையான பலன்கள் நமக்கு கிடைக்கும். அதற்கான வழிமுறைகளை இதில் பார்க்கலாம்.
ஒரு சிறந்த தேநீர், சிறந்த தேயிலையிலிருந்து தான் தொடங்குகிறது. சந்தையில் பல வகையான கிரீன் டீக்கள் கிடைக்கின்றன. ஆனால், பதப்படுத்தப்பட்ட அல்லது தரம் குறைந்த டீ பேக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். முழு இலைகளாக கிடைக்கும் லூஸ் லீஃப் (Loose-leaf green tea) தேயிலையை வாங்குவது சிறந்தது. இதுவே உண்மையான சுவையையும், முழுமையான ஊட்டச்சத்துகளையும் தரும்.
மேலும் படிக்க: Winter Immunity Drinks: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 இயற்கை பானங்கள்
நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, கொதிக்கும் நீரில் கிரீன் டீ இலைகளை போடுவது தான். இது தேயிலையில் உள்ள மென்மையான சத்துகளை அழித்துவிடும். நீரை 100 டிகிரிக்கு கொதிக்க வைக்கக் கூடாது. சுமார் 70 முதல் 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீர் இருப்பதே சிறந்தது. அதாவது, நீர் கொதிக்க தொடங்கும் முன் அடுப்பை அணைத்து விட்டு, ஒரு நிமிடம் கழித்து தேயிலையை சேர்க்கலாம். அதிக சூடான நீர், தேயிலையை கருகச் செய்து, கசப்பு சுவையை ஏற்படுத்தி விடும்.

பால் டீ போடுவது போல, கிரீன் டீயை நீண்ட நேரம் கொதிக்க வைக்கவோ அல்லது ஊற வைக்கவோ கூடாது. தேயிலையை வெந்நீரில் 2 முதல் 3 நிமிடங்கள் மட்டுமே ஊறவிட வேண்டும். அதற்கு மேல் ஊற வைத்தால், தேயிலையில் உள்ள டானின்கள் (Tannins) அதிகமாக நீரில் இறங்கி, டீயை மிகவும் கசப்பாக மாற்றி விடும். சரியான நேரத்தில் வடிகட்டினால் மட்டுமே அதன் மென்மையான சுவையை உணர முடியும்.
கிரீன் டீ கசப்பாக இருக்கிறது என்று சிலர் சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். இது கிரீன் டீ குடிப்பதன் நோக்கத்தையே மாற்றி விடும். சர்க்கரைக்கு மாற்றாக சுவைக்காக சிறிதளவு தேன் சேர்க்கலாம். இது கலோரிகளை அதிகரிக்காது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, ஒரு துண்டு இஞ்சி, சிறிதளவு பட்டை, புதினா இலைகள் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, கிரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை உடல் உறிந்து கொள்ள உதவும்.
மேலும் படிக்க: Herbal Tea for Winter: குளிர்காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 மூலிகை தேநீர்
கிரீன் டீ ஆரோக்கியமானது தான், ஆனால் அதை குடிப்பதற்கு சில நேரக் கட்டுப்பாடுகள் உள்ளன. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது சிலருக்கு அசிடிட்டி (Acidity) அல்லது வயிறு எரிச்சலை உண்டாக்கலாம். மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிட்ட உடனே கிரீன் டீ குடிக்கக் கூடாது. இதில் உள்ள காஃபின் மற்றும் டானின்கள், உணவில் உள்ள இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துகளை உடல் உறிந்து கொள்வதை தடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து குடிப்பதே சிறந்தது.

மேலும், ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் கிரீன் டீ போதுமானது. அதிகமாக குடித்தால் தலைவலி ஏற்படலாம். இதில் காஃபின் இருப்பதால், இரவு தூங்குவதற்கு முன் குடித்தால் தூக்கம் பாதிக்கப்படலாம். இந்தக் குளிர்காலத்தில் காபி, டீ-க்கு மாற்றாக, சரியான முறைப்படி கிரீன் டீயை தயாரித்து பருகவும். இது உங்கள் உடலை வெப்பமாக வைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com